யோகான் பிக்டே

(யோஃகான் ஃவிஃக்டெ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யோஃகான் கோட்லீப் ஃவிக்டெ (Johann Gottlieb Fichte) (மே 19, 1762-ஜனவரி 27, 1814) ஒரு டாய்ட்ச் நாட்டு மெய்யியல் அறிஞர். இவர் பௌட்சன் (Bautzen) என்னும் ஊருக்கு அருகில் ரம்மெனௌ (Rammenau) ஊரில் பிறந்தார். இவர் டாய்ட்ச் நாட்டுணர்வு மேலிடவும் அந்நாட்டு மெய்யியலில் புதுப்போக்குக்கு வித்திட்டவரும் ஆவார். ஹெகல், ஃவிரீடிரிஷ் ஷெல்லிங், ஆர்தர் ஷோப்பன்ஹைமர் முதலானவர்களின் மெய்யியல் கருத்துக்களில் தாக்கம் ஏற்படுத்தியவர் என்றும் புகழப்படுகின்றார். இவர் டாய்ட்ச் நாட்டின் கருத்தியம் (German Idealism) என்னும் மெய்யியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். டாய்ட்ச் கருத்தியம் என்னும் மெய்யியல் இயக்கம் இம்மானுவேல் கண்ட் என்பவர் துவக்கி வைத்த கொள்கைகளில் இருந்து எழுந்தது. இம்மானுவேல் கண்ட் எழுத்துக்களைப் படித்தபின் ஃவிஃக்டெ மெய்யியல் துறையில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார். ஃவிஃக்டெ எழுதிய Attempt at a Critique of Revelation (அட்டெம்ட் அட் எ க்ரிட்டீக் ஆஃவ் ரெவெலேஷன், உணர்ந்ததின் திறனாய்வு பற்றிய ஒரு முயற்சி) என்னும் இவர் எழுதிய நூலை இம்மானுவே கண்ட் புகழ்ந்து, அதனை தன் நூற்களை வெளியிட்ட அதே பதிப்பகத்தாரைக் கொண்டு வெளியிடச்செய்தார். ஆனால் 1792ல் வெளியிட்ட பொழுது அதில் ஃவிஃக்டெயின் பெயரோ முன்னுரையோ இல்லை. படித்தவர்கள் இம்மானுவேல் கண்ட்டை மிகவும் புகழ்ந்தனர். உடனே இம்மானுவேல் கண்ட் அந்நூலை எழுதியவர் தான் இல்லை என்று கூறி எழுதிய ஃவிஃக்டெயின் பெயரைக் கூறியவுடன், ஃவிஃக்டெயின் புகழ் மிக விரைவாகப் பரவியது. இதன் பயனாய் இவர் யேனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மேற்குலக மெய்யியல்
18 ஆவது நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்
யோஃகான் கோட்லீப் ஃவிஃக்டெ

பெயர்

யோஃகான் கோட்லீப் ஃவிஃக்டெ

பிறப்பு

செருமனி மே 19, 1762 (ராமனௌ, சாக்ஸனி, ஜெர்மனி)

இறப்பு

ஜனவரி 27, 1814 (பெர்லின், ஜெர்மனி)

கருத்துப் பரம்பரை

ஜெர்மன் கருத்தியம், பின் கண்ட்டியம்

முதன்மைக் கருத்துக்கள்

தன்னறிவுடைமை, தன்னுணர்வுடைமை, அறக்கொள்கை மெய்யியல், அரசியல் மெய்யியல்

குறிப்பிடத்தக்க கருத்துக்கள்

முற்றுணர்வுடைமை, தானல்லாத அது, முயலல், ஒன்றுக்கொன்றான அறிவுணர்வு

ஏற்ற தாக்கங்கள்

இம்மானுவேல் கண்ட், கார்ல் ரைன்ஹோல்ட், சாலமன் மைமோன்

ஊட்டிய
தாக்கங்கள்

ஹெகல், ஷோப்பன்ஹௌவர், ஃவிரீடிரிழ்ச் ஷெல்லிங், நோவாலிஸ், டீட்டர் ஹென்ரிழ்ச், ருடோல்ஃவ் ஸ்டைனர், தாமஸ் கால்லைல்

இவருடைய தன்னுணர்வுநிலை பற்றிய நுட்பமான கருத்துக்களுக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இவருடைய படைப்புகளைப் புரிந்து கொள்வது கடினம் என்று பலரும் நினைக்கின்றனர். இவர் கடவுள் மறுப்புக் கொள்கையர் என்று குற்றம் சாட்டப்பட்டு பேராசிரியர் பதவியை இழந்தார். பிறகு பெர்லின் நகருக்கு இடம்பெயர்ந்தார். நெப்போலியன் ஆடியில் இருந்த பெர்லினில் இவர் இயற்றிய டாய்ட்ச் நாட்டினருக்கு சொற்பொழிவு என்னும் நூல் புகழ் மிக்கது.

இவருடைய 1796 ஆம் ஆண்டில் வெளியாகிய இயல்பான வலதுசாரிக் கொள்கைகளுக்கான அடித்தளங்கள் (Foundations of Natural Right) என்னும் நூலில் தன்னுணர்வு நிலை பற்றியும், குமுக (சமூக) நிகழ்வியக்கம் பற்றியும் எழுதியுள்ளார். ஒவ்வொருவரின் தன்னுணர்வுநிலைக்கு மற்ற அறிவுடையவர்கள் இருப்பது மிகத்தேவையானது என்று கூறுகின்றார். இப்படி மற்ற அறிவுடைவர்கள் இருப்பதால் அவர்களுடைய தாக்கத்தால்தான் தான் தன் அறிவுநிலையை உணர முடிகின்றது என்று கூறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்_பிக்டே&oldid=2901236" இலிருந்து மீள்விக்கப்பட்டது