யோசெப் நிசிபோர் நியெப்சு

JosephNicephoreNiepce.ogg யோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce - மார்ச் 7, 1765யூலை 5, 1833) ஒரு பிரான்சியக் கண்டுபிடிப்பாளர். ஒளிப்படத்தைக் கண்டுபிடித்தவர் என்றவகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1820களின் தொடக்கத்தில் உலகின் முதல் சில ஒளிப்படங்களை எடுத்தவர் என்ற வகையிலும் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிபைப் போலவே இவரும் ஒரு புரட்சியாளர். எனினும், இன்றும் இவர் அதிகம் அறியப்பட்டவராக இல்லை.

யோசெப் நிசிபோர் நியெப்சு
நிசிபோர் நியெப்சு, கிபி 1795.
பிறப்பு(1765-03-07)மார்ச்சு 7, 1765
Chalon-sur-Saône, Saône-et-Loire
இறப்புசூலை 5, 1833(1833-07-05) (அகவை 68)
செயிண்ட்-லூப்-டி-வாரென்னெசு, Saône-et-Loire
தேசியம்பிரான்சியர்
பணிகண்டுபிடிப்பாளர்
அறியப்படுவதுஒளிப்படவியல்

வரலாறு

தொகு
 
உலகின் மிகப் பழைய ஒளிப்படம். 1825 ஆம் ஆண்டில் நியேப்சுவினால் எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது ஒரு ஓவியத்தின் படம் ஆகும்.
 
நியோப்சுவினால் 1826 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இன்னொரு படம். இது சாளரத்தினூடாகத் தெரியும் ஒரு காட்சி. இயற்கைக் காட்சியொன்றை உள்ளடக்கிய உலகின் முதல் ஒளிப்படம்.

யோசெப் நிசிபோர் 1765 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார். 1825 ஆம் ஆண்டில், ஒரு மனிதனையும் குதிரையொன்றையும் காட்டும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்ததன் மூலம் இவர் ஒளிப்படமொன்றை எடுத்த உலகின் முதலாவது ஆள் ஆனார். இவரது காலத்தில் ஊசித்துளைப் படப்பெட்டியின் அடிப்படையில் அமைந்த "இருட்டறை" (camera obscura) என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக் காட்சிகளின் விம்பத்தை விழச் செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களை உருவாக்கினர். இவ்வாறு படங்களை வரையும்போது யோசெப் நிசிபோரின் கைகள் உறுதியாக இருந்து உதவாததால், விம்பங்களை நிலையாக இருக்குமாறு செய்வதற்கு வேறு ஏதாவது வழி கண்டுபிடிக்க அவர் விரும்பினார்.

1793 ஆம் ஆண்டளவிலேயே இது தொடர்பான சோதனைகளை அவர் செய்யத் தொடங்கினார். வெள்ளிக் குளோரைடு, நிலக்கீல் போன்ற பல பொருட்களை இச் சோதனைகளுக்கு அவர் பயன்படுத்தினார். இவரது தொடக்ககாலச் சோதனைகளில் குறுகிய நேரம் நிலைத்திருக்கும் விம்பங்களையே பெற முடிந்தது. 1824 ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. 1829 ஆம் ஆண்டு முதல் இவர் லூயிசு டாகுவேரே என்பவருடன் சேர்ந்து ஒளிப்பட வழிமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினர். இவர்களுடைய கூட்டு 1833 ஆம் ஆண்டில் நியேப்சு இறக்கும்வரை நீடித்தது. எனினும் டாகுவேரே தொடர்ந்தும் சோதனைகளில் ஈடுபட்டு சற்று மாறுபட்ட புதிய முறை ஒன்றை உருவாக்கினார். இதற்கு அவர் தன்னுடைய பெயரைத் தழுவி டாகுவேரியோவகை எனப் பெயரிட்டார். இந்தக் கண்டுபிடிப்பை பிரான்சு அரசுக்கு விற்று ஆண்டுதோறும் 6,000 பிராங்குகள் இறக்கும்வரை தனக்கும், நியேப்சுவின் வாரிசுகள் ஆண்டுதோறும் 4000 பிராங்குகள் பெறவும் ஒழுங்கு செய்துகொண்டார். நியேப்சுவின் மகன் தனது தந்தையின் உழைப்பின் பயனை டாகுவேரே அறுவடை செய்வதாகக் குற்றம் சுமத்தினார். உண்மையில் ஒளிப்படத்துறையின் வளர்ச்சியில் நியேப்சுவின் பங்களிப்புக்களுக்காக அவருக்குக் கிடைக்கவேண்டிய பெயர் நீண்ட காலமாக அவருக்குக் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் வரலாற்றாளர்கள் நியேப்சுவின் பங்களிப்புக்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர்.

2002 ஆம் ஆண்டில் இவர் 1825 ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.