யோவேல் (நூல்)
யோவேல் (Joel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3]
யோவேல் நூல் பெயர்
தொகுயோவேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יואל (yoèl) எனவும், கிரேக்கத்தில் Ιωήλ, (ioél) எனவும், இலத்தீனில் Ioel எனவும் ஒலிக்கப்படும். யோவேல் என்னும் இறைவாக்கினர் பெயரால் இந்நூல் அழைக்கப்படுகிறது.
நூலின் ஆசிரியர்
தொகு"யோவேல்" என்னும் இறைவாக்கினரின் பெயர் 13 முறை விவிலியத்தில் குறிப்பிடப்படுகிறது. மற்ற யோவேல்களும் இந்த யோவேலும் ஒருவர் அல்ல. யோவேல் முதல் வசனம் அவர் பெயரைக் கொண்டிருக்கிறது: "பெத்துவேலின் மகனான யோவேலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே:" (யோவே 1:1). "யோவேல்" என்னும் பெயருக்கு "யாவே என்னும் கடவுளை வழிபடுபவர்" எனப் பொருள் கொள்ளலாம்.
இந்த இறைவாக்கினரைப் பற்றியும் அவரது பணி பற்றியும் மிகச் சிறிதே நமக்குத் தெரிய வருகின்றது. நூலில் யூதா முக்கியத்துவம் பெறுவதால், ஆசிரியர் யூதா நாட்டவராக இருந்திருக்கலாம். ஒருவேளை எருசலேம் கோவிலோடு தொடர்புடையவராகவும் விளங்கியிருக்கலாம். இவர் கி.மு. 5-4 நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்தார் என்று அறிஞர் கருதுகின்றனர்.
நூலின் உள்ளடக்கம்
தொகுமூன்று அதிகாரங்களை மட்டுமே உள்ளடக்கிய இச்சிறுநூல் கி.மு. ஐந்தாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் பாரசீகரின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கொடும் வறட்சி, வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு ஆகியவற்றைக் கடவுளின் நாளுக்கும் கடவுளின் நீதியை எதிர்ப்பவர்கள்மீது வரவிருந்த தண்டனைக்கும் முன்னடையாளங்களாக இறைவாக்கினர் கருதுகின்றார்.
மனமாற்றத்திற்குக் கடவுளின் அழைப்பு, நல்வாழ்வு அளிப்பதாக ஆண்டவர் கூறும் உறுதிமொழி, கடவுளின் ஆசி, ஆண் பெண் இளைஞர் முதியோர் என்ற வேறுபாடு இன்றி அனைவர்மீதும் கடவுள் ஆவியைப் பொழிந்தருள்வார் என்ற வாக்குறுதி ஆகியவை பற்றி இந்நூல் கூறுகிறது.
குறிப்பிடத்தக்க சில பகுதிகள்
தொகுயோவேல் 2:1-2,13
"ஆண்டவரின் நாள் வருகின்றது,
ஆம், அது வந்துவிட்டது.
அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்;
மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்;
விடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல்
ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது;
இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை;
இனிமேல் தலைமுறைக்கும் நிகழப்போவதுமில்லை...
'நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம்.
இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்'.
அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்;
நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்;
செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்."
யோவேல் 2:28-29
"ஆண்டவர் கூறுகிறார்:
'நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்;
உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்;
உங்கள் முதியோர் கனவுகளையும்
உங்கள் இளைஞர் காட்சிகளையும் காண்பார்கள்.
அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும்
என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.'"
யோவேல் நூலின் உட்பிரிவுகள்
தொகுபொருளடக்கம் | அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு | 1:1 - 2:17 | 1333 - 1336 |
2. மீட்பைப் பற்றிய வாக்குறுதி | 2:18 - 2:27 | 1336 |
3. ஆண்டவரின் நாள் | 2:28 - 3:21 | 11337 -1338 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Keller, C. A., 28. Joel, in Barton, J. and Muddiman, J. (2001), The Oxford Bible Commentary பரணிடப்பட்டது 2017-11-22 at the வந்தவழி இயந்திரம், p. 578
- ↑ Dead sea scrolls - Joel
- ↑ 4Q78 at the Leon Levy Dead Sea Scrolls Digital Library