ரஷ்யாவின் பொருளாதாரப் பகுதிகள்
ரஷ்யக் கூட்டமைப்பு மொத்தம் 12 பொருளாதாரப் பகுதிகள் (economic regions, (உருசியம்: экономи́ческие райо́ны, எக்கனொமீச்சிஸ்கயே ரையோனி, ஒருமை: எக்கனொமிச்சிஸ்கி ரையோன்) ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிர்வாக அலகுகள் பின்வரும் விடயங்களைத் தமக்கிடையே பகிந்து கொள்கின்றன:
- பொதுவான பொருளாதார மற்றும் சமூக நோக்கம், மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கேற்றல்;
- பொதுவான பொருளாதார நிலைமைகளும், சாத்தியக்கூறுகளும்;
- பொதுவான காலநிலை, சூழல், மற்றும் நிலவியல் நிலைமைகள்;
- புதிய கட்டுமானப் பணிகளுக்கு பொதுவான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தல்;
- சுங்கப்பகுதிகளை மேலாண்மைக்கு பொதுவான விதிமுறைகள்;
- பொதுமக்களின் வாழ்க்கைமுறைகள் பொதுவாக இருத்தல்.
கூட்டாட்சி அமைப்பு ஒன்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளாதாரப் பகுதியில் இருக்க முடியாது.
பொருளாதாரப் பகுதிகள் பொருளாதார வலயங்களுள் அடக்கப்பட்டுள்ளன. ஒரு பொருளாதாரப் பகுதி அல்லது அதன் ஒரு பிரிவு ஒன்றுக்கு மேற்பட்ட பொருளாதார வலயத்தில் அங்கம் வகிக்கலாம்.
ஒரு பொருளாதாரப் பகுதி அல்லது வலயத்தை உருவாக்குவது அல்லது கலைப்பது அல்லது மாற்றங்களை ஏற்படுத்துவது ரஷ்ய நடுவண் அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது.
பொருளாதாரப் பகுதிகள் கூட்டாட்சி மாவட்டங்களில் இருந்து வேறுபடுகின்றன. பொருளாதாரப் பகுதிகள் தனியே பொருளாதாரம், மற்றும் புள்ளியியலை மட்டுமே கவனிக்கும். கூட்டாட்சி மாவட்டங்கள் நிர்வாகங்களைக் கவனிக்கும்.
பொருளாதாரப் பகுதிகளின் பட்டியல்
தொகு- மத்திய பொருளாதாரப் பகுதி (Центральный, த்செந்திரால்னிய்)
- உரால்ஸ் (Уральский, உரால்ஸ்கி)
- வடக்கு கவ்காஸ் (Северо-Кавказский, சேவிர்ன-கவ்காஸ்கி)
- வொல்கா (Поволжский, பவொல்ஸ்கி)
- மேற்கு சைபீரியா (Западно-Сибирский, சராட்ன-சிபீர்ஸ்கி)
- கிழக்கு சைபீரியா (Восточно-Сибирский, வஸ்தோச்ன-சிபீர்ஸ்கி)
- வொல்கா-வியாத்கா (Волго-Вятский, வொல்க-வியாத்ஸ்கி)
- வடமேற்கு (Северо-Западный, சேவிர-சாபத்னிய்)
- மத்திய கரும்பூமி பொருளாதாரப் பகுதி (Центрально-Чернозёмный, த்செந்திரால்னொ-செர்னசியோம்னிய்)
- தூரகிழக்கு பொருளாதாரப் பகுதி (Дальневосточный, தால்னவஸ்தோச்னிய்)
- வடக்கு பொருளாதாரப் பகுதி (Северный, சேவெர்னிய்)
- கலினின்கிராத் பொருளாதாரப் பகுதி (Калининградский), கலினின்கிராத்ஸ்கி)