ராப்பூசல் கிராமம்

ராப்பூசல் கிராமம் (Rappusal) [1] என்பது புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும். இவ்வூர் நார்த்தாமலைக்கு நேர்மேற்கிலும், ஒவியப்புகழ்பெற்ற சித்தன்னவாசலுக்கு வடமேற்கில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கிராம அமைப்பு

தொகு

ராப்பூசல் கிராமம் 1000 தலக்கட்டு என்று அப்பகுதி மக்கள் அழைப்பதுண்டு. ஏனெனில் இவ்வூரில் மக்கள் தங்கள் சொந்தமான விவசாய நிலங்களுக்கு அருகில் தங்களது வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். அதை பண்ணை, களம் என அழைக்கப்படுகிறது. அவற்றில் பண்ணை என்பதில் புதுக்குடியான் பண்ணை, தீத்தான் பண்ணை, சின்னையன் பண்ணை, கந்தன் பண்ணை, மல்லாரி பண்ணை, குட்டையன் பண்ணை, அப்பச்சி பண்ணை, கருமாயி பண்ணை, பூசாரி பண்ணை, குஞ்சாயி பண்ணை, மங்காயி பண்ணை, பேவரன் பண்ணை, கொக்காயி பண்ணை, பாசிக்காரன் பண்ணை, மேற்கத்தியான் பண்ணை ஆகியன அடங்கியுள்ளது. அடுத்து களம் என்பதில் முன்சீப் களம், பட்டையார் களம், அப்புக்குட்டி களம், கீழக் களம், சிவக்களம், பாறைக்களம், மருச்சுக்கட்டி களம், பொல்லி களம், மாத்துரார் களம், கல்லுகாட்டு களம், குரும்பட்டி களம் ஆகியன அடங்கியுள்ளது. மேலும் கோவில் மேடு, இந்திரா காலனி, மருத்துவர் தெரு, வண்ணாரத்தெரு, ஆசாரித்தெரு போன்றவையும் அமைந்துள்ளன. ராப்பூசல் கிராமம் இந்திய பஞ்சாயத்து ராஜ் விதியின் படி 1957 முதல் கிராம நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி ராப்பூசல் கிராமம் ஒன்பது உள்ளாட்சி பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் கலிங்கிப்பட்டி, ஆயிங்குடிப்பட்டி, புளியம் பட்டி, எருக்குமணிப்பட்டி, குளவாய்ப்பட்டி, குப்பத்துப்பட்டி போன்ற சிற்றூர்களும் உள்ளடக்கியுள்ளன.

கல்வி மற்றும் சுகாதாரம்

தொகு
PHC

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ராப்பூசல் மக்களின் கல்வியறிவு விகிதம் 63.87 % ஆகும். அதில் ஆண்கள் 74.43% பெண்கள் 53.06 சதவீதமாக உள்ளது.[2] ராப்பூசல் கிராமத்தில் அடிப்படைக்கல்வி மற்றும் இடைநிலைக்கல்வியை பூர்த்திசெய்யும் வகையில் ஐந்து ஆரம்ப பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி மற்றும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டுவருகின்றன. 8.8.2011 முதல் ராப்பூசலில் இயங்கிவந்த உயர்நிலைப்பள்ளியானது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி ராப்பூசல் கிராமப்புற மாணர்களின் மேல்நிலைக்கல்விக்கு உறுதுணையாக அமைந்து வருகிறது.[3]. ராப்பூசல் கிராமப்புற மக்களின் சுகாதாரம் காக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது.[4] தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.[5]

சமயம் மற்றும் பண்பாடு

தொகு

ராப்பூசல் கிராமப்புற மக்கள் பெருமளவில் இந்துக்களின் ஒரு பிரிவான சைவத்தை ஆதரிப்பவர்களாக உள்ளனர். ஸ்ரீ தாயுமானவர் கோவில் ராப்புசல் கிராம வரலாற்றை பறைசாற்றும் வகையில் மிகப்பழமையான கோவிலாக அமைந்துள்ளது. [6]ராப்பூசல் கிராம மக்கள் தங்களின் முதன்மைக்கடவுளாக ஸ்ரீ முனியாண்டவர் கோவிலை வணங்குகின்றனர். ஆண்டுதோறும் ஸ்ரீ முனியாண்டவருக்கு ஆடி மாதம் சிறப்பு பூஜை நடைபெறும். இக்கோவிலில் கோவில்காளை ஒன்று வளர்க்கப்பட்டு வருகின்றது.கோவில்காளையை மையமாக வைத்துதான் தைப்பொங்கல் மற்றும் பங்குனி மாதம் ஜல்லிக்கட்டு எனப்படும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது.[7] இதில் கோவில்காளை வலம் வரும் பாதையில் மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவது வழக்கம். ஒரு காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு தான் ராப்பூசல் கிராமத்திற்கு அடையாளமாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராப்பூசல் கிராம மக்கள் குலதெய்வ வழிபாடு முறையை வழக்கத்தில் கொண்டுள்ளனர். ஸ்ரீ பாசிக்கருப்பர், ஸ்ரீ மணியன் கருப்பர், ஸ்ரீ கூவமுட்டிகருப்பர்,ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன், ஸ்ரீ குட்டையப்பர், ஸ்ரீ பகவதி அம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டுவருகின்றனர்.

சமூகம் மற்றும் பொருளாதாரம்

தொகு

ராப்பூசல் கிராமத்தில் அதிகமாக கள்ளர் சமூகத்தினர் அதிகமாக வாழ்கின்றனர். ராப்பூசல் கிராம மக்களின் முதன்மைத்தொழில் விவசாயம் ஆகும். கிணற்று பாசனமுறை அதிக அளவில் நடைமுறையில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராப்பூசல்_கிராமம்&oldid=3376890" இலிருந்து மீள்விக்கப்பட்டது