ரைக்லாவ் வொன் கூன்சு
ரைக்லாவ் வொன் கூன்சு (Rijckloff van Goens) (சூன் 24, 1619 - நவம்பர் 14, 1682) 1678 தொடக்கம் 1681 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதியில் ஆளுனர் நாயகமாகப் பணியாற்றியவர். இதற்கு முன், 1660 முதல் 1661 வரை இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் ஆளுனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தனது இலங்கை, இந்திய அனுபவங்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். ஜாவாவின் சுல்தான் அகுங்கினதும் அவரது வழிவந்தோரினதும் அரண்மனைகளுக்குச் சென்றது தொடர்பான அவரது குறிப்புக்களும் ஜாவாவின் வரலாறு தொடர்பான முக்கிய தகவல்களைத் தருகின்றன.
ரைக்லாவ் வொன் கூன்சு Rijckloff van Goens | |
---|---|
பிறப்பு | 24 சூன் 1619 Rees |
இறப்பு | 14 நவம்பர் 1682 (அகவை 63) ஆம்ஸ்டர்டம் |
பணி | அரசியல்வாதி, ஆளுநர் |
இளமைக் காலம்
தொகுரைக்லாவ் வொன் கூன்சு 1619 ஆம் ஆண்டு சூன் 24 ஆம் தேதி, அக்காலத்தில் நெதர்லாந்துக்குச் சொந்தமாக இருந்த கிளைவ்சு என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையாருக்கு பத்தேவியாவில் படைத்துறைக் கட்டளை அதிகாரியாகப் பதவி கிடைத்ததைத் தொடர்ந்து, 1628 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ரைக்லாவ் வொன் கூன்சு, கப்பல் மூலம் பத்தேவியாவுக்குப் பயணமானார். அவர் பத்தேவியாவை அடைந்த ஒரு மாதத்திலேயே அவரது தந்தையார் காலமானார். ஓராண்டின் பின்னர் அவரது தாயாரும் இறந்துவிட்டார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய இவரது தந்தையின் சகோதரர் ஒருவரின் உதவியுடன் அக் கம்பனியில் ஒரு பணியில் ரைக்லாவ் அமர்ந்தார். வேகமாகப் பதவி உயர்வுகளைப் பெற்ற இவர், 1639 செப்டம்பர் 3 ஆம் தேதி, மூன்று ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவி வணிகராகப் (ஒண்டர் கூப்மன்) பதவியேற்றுக்கொண்டார்.
1640 ஆம் ஆண்டில் தன்னிலும் மூன்று ஆண்டுகள் வயதில் மூத்தவரும் விதவையுமான லெப்டினன்ட் யக்கோபினா ரோசெகார்டே என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1642 ஆம் ஆண்டில் இவர் வணிகராகப் (கூப்மன்) பதவி உயர்வு பெற்றுக்கொண்டு பத்தேவியாவில் பணியாற்றினார். 1945ல் இவர் தலைமை வணிகர் (ஒப்பர் கூப்மன்) தரத்துக்கு உயர்ந்தார். 1946 ஆம் ஆண்டு பத்தேவியாவில், திருமணம் மற்றும் சிறு வணிகத்துக்கான ஆணையாளராகப் பதவியேற்றார். பத்தேவியாவில் தொடர்ந்தும் பல உயர் பதவிகளை இவர் வகித்தார். அக்காலத்தில் ஆளுனர் நாயகமாக இருந்த யோவான் மத்சாக்கர் இலங்கையிலும் இந்தியாவிலும் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பலமாக இருக்கவேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தார். இதனால், 1653 ஆம் ஆண்டில் வொன் கூன்சு, கடற்படை ஒன்றின் ஆணையாளராகவும், கட்டளை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு, இலங்கை நோக்கி அனுப்பப்பட்டார். போத்துக்கீசருடன் சண்டையில் ஈடுபட்டு அவர்களின் 40 வணிகக் கப்பல்களைக் கைப்பற்றியதுடன், ஆயுதங்களுடன் கூடிய 5 கப்பல்களையும் அழித்தார்.
1655 ஆம் ஆண்டில் இவர் ஒல்லாந்துக்குச் சென்ற வொன் கூன்சு அடுத்த ஆண்டே மீண்டும் திரும்பிவந்தார். 1657 ஆம் ஆண்டில் ஆணையாளராகப் பதவியேற்று இந்தியாவின் கோரமண்டல் கரைக்கு வந்தார். போத்துக்கீசருடன் புதிய சண்டைகளில் ஈடுபட்டு, 1658 பெப்ரவரி 22 ஆம் தேதி இலங்கையின் ஒரு பகுதியான மன்னார் தீவைக் கைப்பற்றினார். அத்தோடு தூத்துக்குடி, கொச்சி ஆகிய துறைமுக நகரங்களையும் இவர் தலைமையிலான படைகள் கைப்பற்றின. தொடர்ந்து அதே ஆண்டில் இலங்கையில் போத்துக்கீசர் ஆட்சியின் கீழிருந்த ஏனைய பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. 1662 ஆம் ஆண்டில் இலங்கையின் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்றார். 1662 ஆம் ஆண்டு முதல் 1663 ஆம் ஆண்டு வரையும், பின்னர் 1665 ஆம் ஆண்டிலும், மூன்றாவது தடவையாக 1675 ஆம் ஆண்டிலும் இவர் இப்பதவியை வகித்தார்.