அட்ரியான் வொன் டெர் மேய்டென்
அட்ரியான் வொன் டெர் மேய்டென் (Adriaan van der Meyden) 1653 ஆம் ஆண்டுக்கும் 1663 ஆம் ஆண்டுக்கும் இடையில் இலங்கையில் ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் ஆளுனராக இருந்தார்.
ஒல்லாந்தர் போத்துக்கீசரிடமிருந்து காலியைக் கைப்பற்றிய பின்னர் இலங்கையில் காலியே ஒல்லாந்தரின் தலைமை இடமாக விளங்கியது. அக்காலத்தில் காலியின் ஆளுனரே இலங்கையில் ஒல்லாந்த நிர்வாகத்தின் தலைமை அதிகாரியாக இருந்தார். 1653 அக்டோபர் மாதத்தில் வொன் டெர் மேய்டென் காலியின் ஆளுனராகப் பதவியேற்றார். இவர் பதவியேற்ற காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் ஒல்லாந்தர், போத்துக்கீசர், சிங்களவர் ஆகியோரிடையே தொடர்ந்த சண்டைகள் நிகழ்ந்து வந்தன[1]. இக்காலத்திலேயே இலங்கையில் போத்துக்கீசரின் ஆளுகையின் கீழிருந்த பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு ஒல்லாந்தர் நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். இதற்காக, ஜெராட் கல்வ்ட் என்பவர் பத்தேவியாவில் இருந்து படைகளுடன் அனுப்பப்பட்டார். இவர் இலங்கையில் ஒல்லாந்தரின் கடற்படை, தரைப்படை ஆகிய இரண்டுக்கும் கட்டளைத் தளபதியாக இருந்தார். இதனால், வொன் டெர் மேய்டென் குடிசார்நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொண்டிருந்தார்[2]. இலங்கையில் போத்துக்கீசர் வசமிருந்த பகுதிகள் ஒவ்வொன்றாகக் கைப்பற்றப்பட்டு இறுதியாக 1658 சூன் 22 ஆம் தேதி யாழ்ப்பாணமும் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் வொன் டெர் மேய்டென் ஒல்லாந்தரின் தலைமையகத்தைக் காலியில் இருந்து கொழும்புக்கு மாற்றினார்[3]. இவர் கண்டியரசர் இராசசிங்கனுடன் புரிந்துணர்வை உருவாக்க முயன்றார் ஆயினும், கண்டியரசரிடமிருந்து இதற்குச் சாதகமான பதில் எதுவும் இருக்கவில்லை. வொன் டெர் மேய்டெனின் பதவிக்காலம் 1663ல் முடிவடைந்தபின் ரைக்ளோவ் வொன் கூன்சு என்பவர் ஆளுனரானார்.
குறிப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Blaze, L. E., History of Ceylon, Asian Educational Services, New Delhi, 2004 (The first Edition Published by: The Christian Literature Society for India and Africa Ceylon Branch, Colombo, 1933)