ரொசெட்டோ விளைவு

இதய நோயின் விகிதத்தை குறைக்கும் நெருக்கமான சமூகம்

ரொசெட்டோ விளைவு (Roseto effect) என்பது நெருக்கமாக வாழும் சமூகத்தில் மிகக் குறைவான விகிதத்திலேயே இதய நோய்கள் காணப்படுவதைக் குறிப்பதாகும். இந்த விளைவுக்கு இட்டப் பெயரானது அமெரிக்காவின், பென்சில்வேனியாவின், ரொசெட்டோ என்ற இடத்தின் பெயரால் ஆனது. ரொசெட்டோ விளைவு 1961 இல் முதன்முதலில் கவனிக்கப்பட்டது. அந்த ஆண்டு ரொசெட்டோவின் உள்ளூர் மருத்துவர் அப்போது ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையின் தலைவராக இருந்த ஸ்வார்ட் உல்ஃப் என்பவரை சந்தித்தார். அவர்கள் ரொசெட்டோவில் வசிக்கும் இத்தாலிய அமெரிக்க சமூகத்தில் பிற இடங்களில் வாழும் அமெரிக்க மக்களை ஒப்பிடுகையில் வழக்கத்திற்கு மாறாக மாரடைப்பு விகிதம் குறைவாக இருப்பது குறித்து விவாதித்தனர்.[1] இதில் ரொசெட்டோவை அருகிலுள்ள பாங்கருடன் ஒப்பிடும் 50 ஆண்டுகால ஆய்வு உட்பட பல ஆய்வுகள் அவர்களால் ஆராயப்பட்டன. ஆய்வாளர்கள் முன்கணித்தபடி, இந்த ஆய்வுக் காலத்தை அடுத்து வந்த ஆண்டுகளில் ரொசெட்டோ சமூக கூட்டாளிகள் தங்கள் இத்தாலிய சமூக அமைப்பு முறையைக் கைவிட்டு, மேலும் அமெரிக்கமயமாக்கப்பட்டதால், அவர்களிடையே இதய நோய் விகிதம் அதிகரித்து, அண்டை நகரங்களைப் போலவே மாறியது. [2]

1954 முதல் 1961 வரை, 55 முதல் 64 வயதுக்குட்பட்ட ரொசெட்டோ ஆண்களுக்கு மாரடைப்பு என்பது இல்லை. மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் 1% ஆக இருந்தது. ஆனால் தேசிய சராசரியோ 2% என இருந்தது.

இந்த புள்ளிவிவரங்கள் அந்த சமூகத்தில் காணப்பட்ட பல காரணிகளுடன் முரண்படுகின்றன. அவர்கள் மாரடைப்புக்குக் காரணமான சுருட்டை புகைப்பது, பால் மற்றும் குளிர்பானங்களுக்குப் பதிலாக தரம் குறைந்த வைன் குடித்தல், கடின மற்றும் மென்மையான பாலாடைக்கட்டிகளுடன் பன்றிக்கொழுப்பில் வறுத்த இறைச்சி உருண்டைகள் உண்பது போன்ற அத்தனைப் பழக்கங்களும் இருந்தன. ஆண்கள் சிலேட்டுக் கற்குழிகளில் பணிபுரிந்தனர், அங்கு அவர்கள் மோசமான வாயுக்கள், தூசி போன்றவற்றால் பாதிக்கபட்டு நோய்வாய்ப்பட்டனர். [3] ரொசெட்டோவில் மிகக் குறைவான குற்றங்களே நடந்தன, மேலும் அரசின் உதவிக்கான விண்ணப்பங்கள் மிகக் குறைவாகவே வந்தன. [3]

ரொசெட்டன்சில் இதய நோய் ஏறக்குறைய இல்லாமல் இருப்பதற்கு காரணம், மன அழுத்த விகிதம் குறைவாக இருப்பதுவே என்றார் உல்ப். உல்ஃப்பின் கூற்றின்படி இந்தச் சமூகம் கூட்டுக் குடும்ப அமைப்பு முறையைப் பின்பற்றியது, அண்டை வீட்டாருடன் தங்களை ஒப்பிட்டுக் கொண்டு வருந்தவில்லை, வீடுகள் மிக நெருக்கமாக இருந்தன, மேலும் அனைவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்துடன் வாழ்பவர்களாக இருந்தனர். "முதியவர்கள் மதிக்கப்பட்டு சமூக வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டவர்களாக இருந்தனர். இல்லத்தரசிகள் மதிக்கப்பட்டனர், தந்தைகள் குடும்பங்களை தலைமை ஏற்று நடத்தினர். [4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொசெட்டோ_விளைவு&oldid=4174552" இலிருந்து மீள்விக்கப்பட்டது