ரோமனெஸ்க் கட்டிடக்கலை
ரோமனெஸ்க் கட்டிடக்கலை மத்தியகால ஐரோப்பாவில் கி.பி 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்திருந்த ஒர் கட்டிடக்கலையாகும். இக் கட்டிடக்கலை ரோமன் கட்டிடக்கலையின் பல சிறப்புக் கூறுகளைக் கொண்டிருந்த காரணத்தால் இதனை வகைப் படுத்துவதற்காக ரோமனெஸ்க் என்னும் பெயரைப் பிற்கால ஆய்வாளர்கள் இதற்கு வழங்கினார்கள்.
வட்டவடிவ அல்லது சிறிதளவே கூரான கமான் வளைவுகள் (arches), உருளை வடிவக் கவிகூரைகள் (barrel vaults), சிலுவைவடிவத் தூண்களால் தாங்கப்பட்ட கவிகூரைகள், இடைவெட்டும் கவிகூரைகள் (groin vaults) போன்றவற்றின் பயன்பாடு ரோமனெஸ்க் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளாகும். பாரிய வளைவான நுழைவாயில்களைக் கொண்ட கட்டிடங்கள் அக்காலத்தின் கட்டிடக்கலைப் புதுமைகளாக விளங்கின. ரோமர்காலத்துப் பாரிய கற்சிற்பங்களும் ரோமனெஸ்க் காலத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன.
ரோமப்பேரரசு காலக் கட்டிடக்கலைக்குப் பின்னர் முழு ஐரோப்பாவையும் தழுவிய வகையில் வழங்கிவந்தது ரொமனெஸ்க் கட்டிடக்கலையே எனத் தெரிகின்றது. இக் கட்டிடக்கலைக்கான எடுத்துக்காட்டுகள் ஐரோப்பாக் கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. மத்தியகால மக்கள் அதிக அளவில் பயணங்களில் ஈடுபட்டிருந்ததே இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. வணிகர்களும், பிரபுக்களும், போர்வீரர்களும், கலைஞர்களும், சாதாரண மக்களும் கூட வணிகம், போர், யாத்திரை போன்ற காரணங்களுக்காக ஐரோப்பாவையும், மத்தியதரைக் கடல் பிரதேசங்களியும் தாண்டிப் பிரயாணம் செய்தனர். இவறின்போது பல்வேறு பகுதிகளிலுமிருந்து கட்டிடங்கள் பற்றிய அறிவைத் தங்களுடன் கொண்டுவந்தனர்.