ரோல்ஃப் ஸ்கொக்
ரோல்ஃப் ஸ்கொக் (1933-1986), ஒரு மெய்யியலாளரும் ஓவியரும் ஆவார். பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவரது பெற்றோர் ஜேர்மானியர் ஆவர். 1931 இல் ஜெர்மனியை விட்டு வெளியேறிய இவர்கள் இறுதியாக ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினர். ரோல்ஃப், நியூ மெக்சிக்கோப் பல்கலைக் கழகத்தில் நிலவியல், உளவியல் என்னும் பாடங்களையும், கணிதத்தையும் பயின்றார். 1955 ஆம் ஆண்டில் இளம்கலைப் பட்டம் பெற்ற இவர், பின்னர் லாஸ் ஏஞ்சலிஸ் இலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் 1956 இலிருந்து 1960 வரை மெய்யியலையும், ஏரணத்தையும் கற்றார். 1960 ஆம் ஆண்டில், ஸ்டாக்ஹோம் பல்கலைக் கழகத்தில் கோட்பாட்டு மெய்யியலில் சிறப்புக் கல்வி பெறுவதற்காக சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகருக்கு இடம்பெயர்ந்தார். 1964 இல் ஒரு இடைநிலை முதுநிலைப் பட்டத்தையும், 1968 இல் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் அடுத்த ஆண்டில், உப்சலா பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார்.[1]
1964 - 1969 ஆண்டுக் காலப் பகுதியில் இவர், ஸ்டாக்ஹோமில் உள்ள கலை, கைப்பணி மற்றும் வடிவமைப்புக்கான பல்கலைக் கழகக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் பெருமளவு நேரத்தை ஓவியம் வரைவதிலும்,ஒளிப்படம் பிடிப்பதிலும் செலவு செய்தார். இவர் மெய்யியலில் ஏரணத்துறையில் ஆய்வுகள் செய்வதில் ஈடுபாடு காட்டினார். ஆனாலும், இவர் நிரந்தரமான எந்தப் பணியிலும் அமராமல், பல்கலைக் கழகங்களிலும், இரவுப் பாடசாலைகளிலும் தற்காலிகமாகக் கல்வி கற்பித்து வந்தார். சில காலம் ஸ்டாக்ஹோமிலுள்ள ராயல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இணைந்திருந்தார். அங்கே பல பாடங்களைக் கற்பித்து வந்தார்.
1986 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு விபத்தில் இவர் கொல்லப்பட்டார். ஆச்சரியப்படத்தக்க வகையில், பெருந்தொகையான சொத்துக்களையும், ஸ்கொக் பரிசுகளை நிறுவுவதற்கான ஒரு உயிலையும் அவர் விட்டுச் சென்றிருந்தார். இச் சொத்துக்களின் வருமானத்திலிருந்து 1993 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்கொக் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rolf Schock". Royal Swedish Academy of Sciences.