லக்கிடி, வயநாடு
லக்கிடி (Lakkidi, Wayanad) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளாவின், வயநாடு மாவட்டத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஒரு மழைக்காடு ஆகும்.
நிலவியல்
தொகுலக்கிடி வயநாட்டின் மிக உயரமான இடங்களில் ஒன்றாகும், இது தாமராசேரி கணவாயில், கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. லக்கிடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வைதிரியே அருகிலுள்ள நகரமாகும். [1] சங்கிலி மரம், பூக்கோட்டேரி போன்ற பார்க்கதகுந்த இடங்கள் லக்கிடியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவுக்குள் உள்ளன. இது கோழிக்கோடு மாவட்டத்திலிருந்து 58 கி.மீ வடகிழக்கில் அமைந்துள்ளது.
லக்கிடியிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள பூக்கோடேரி, 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கையான நன்னீர் ஏரியாகும். வயநாட்டில் உள்ள அரிதான நீர்நிலைகளில் இதுவும் ஒன்றாகும். புல்வெளிகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.
லக்கிடியின் ஆண்டு சராசரி மழையளவு 600செமீ முதல் 650செமீ வரை ஆகும். இந்த இடத்தில் அரிய விலங்குகான சோலை மந்தி, அரிய பறவைகளான கொண்டை நீர்க்காகம், சின்ன நீர்க்காகம், இந்திய குளத்துக் கொக்கு, போன்றவை காணப்படுகின்றன.
லக்கிடியின் நிலவளமானது காபி, தேநீர், ஆரஞ்சு, மசாலா பொருட்கள் போன்றவற்றை வளர்க்க ஏற்ற வளமான மண்ணைக் கொண்டுள்ளது. மேலும் இவை வளரத்தக்க மழைப்பொழிவையும் கொண்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி இங்கு அமைந்துள்ளது.
வரலாறு
தொகுகரித்தண்டன் என்ற ஒரு தொல் குடி இளைஞன். வயநாடு மலைப்பகுதியில் வாழ்ந்தவன். காலனித்துவ ஆட்சியின் போது, இந்த இளைஞனை ஆங்கில பொறியாளர் ஒருவர் வயநாட்டின் சிக்கலான வழியைக் காட்டச் சொல்லி அழைத்துச் சென்றார். ஆதிவாசியின் பின்னால் சென்ற பொறியாளர் வயநாட்டின் காட்டின் வழியை கண்டுபிடித்த பெருமை தன்னையே சேரவேண்டும் என்ற விபரீத ஆசையில் அந்த இளைஞனைக் கொன்றுவிட்டார். உள்ளூர் நம்பிக்கையின்படி அந்த இளைஞனின் ஆவி அவ்வழியே வரும் பயணிகளைப் பிடித்துக்கொண்டது எனப்பட்டது. இதனால் ஏராளமான விபத்துக்கள் நிகழ்து, பலர் உயிர் இழந்தனர் எனப்படுகிறது. மேலும் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்கும் பொருட்டு, ஒரு பூசாரி வரவழைக்கப்பட்டு, பூசைகள் செய்து இளைஞனின் ஆவி வரவழைக்கபட்டு ஒரு மரத்தில் சங்கிலியுடன் கட்டப்பட்டது. மரத்துடன் சேர்ந்து சங்கிலியும் வளருகிறது என்று நம்பப்படுகிறது. [2] இந்த இடத்தோடு, இந்த மரமும் ஒரு சுற்றுலா இடமாக மாறியுள்ளது.
வயநாட்டின் முதல் தியாகியாகக் கருதப்படும் கரித்தண்டனின் நினைவாக "பிஇஇபி" (பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான மக்கள் நடவடிக்கை) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கரிந்தந்தன் ஸ்மிருதி யாத்திரையை ஏற்பாடு செய்கிறது.
காலநிலை
தொகுஆண்டு மழைக்காலமானது மே மாதத்தில் தொடங்கி திசம்பரில் முடிவடையும். மழை மற்றும் அழகு காரணமாக, இது "கேரளத்தின் சிரபுஞ்சி" என்று அழைக்கப்படுகிறது. சராசரி மழை 600 முதல் 650 செ.மீ அல்லது அதற்கு மேல் இருக்கும். இது ஆண்டு முழுவதும் குளிர்ந்த காலநிலை மற்றும் மூடுபனியுடன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது. இது வயநாடு மாவட்டத்தின் குளிச்சியான இடமாகவும், கேரளத்தின் குளிர்ச்சியான இடமாகவும் கருதப்படுகிறது. இது கோப்பன் ஹைலேண்ட் காலநிலையை கொண்டுள்ளது. பொதுவாக, பருவமழை பெய்யும்போது மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுகிறது.
மாதம் | ஜன. | பிப். | மார். | ஏப்ரல். | மே | ஜூன். | ஜூலை. | ஆக. | செப். | அக். | நவ. | டிச. |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அதிகபட்ச வெப்பம் | 17 | 20 | 21 | 22 | 25 | 23 | 21 | 20 | 20 | 19 | 18 | 18 |
குறைந்தபட்ச வெப்பம் | 6 | 10 | 13 | 15 | 17 | 16 | 15 | 14 | 12 | 11 | 10 | 8 |
லக்கிடி மார்ச்-மே காலத்தில் வெப்பமான காலநிலையையும் அக்டோபர்-சனவரி காலத்தில் குளிர்ந்த காலநிலையையும் கொண்டுள்ளது.
போக்குவரத்து
தொகுகோழிக்கோட்டிலிருந்து : தே.நெ. எண் 212 இன் ஒரு பகுதியான தாமராசேரி-லக்கிடி காட் சாலை, கோழிக்கோடு மற்றும் கேரளத்தின் மற்ற பகுதிகளை கோழிக்கோடுக்கு தெற்கே உள்ள பகுதிகளை வயநாட்டுடன் இணைக்கிறது. லக்கிடியில் உள்ள மலைப் பாதை வயநாட்டின் உயிர்நாடியாகும். தினமும் 1,813 பேருந்துகள் மற்றும் 591 சிற்றுந்துகள் மலைப் பாதை வழியாக செல்கின்றன. இந்த சாலையை கடந்து செல்லும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 17,207 ஆகும்.