லிமாவின் புதையல்

லிமாவின் புதையல் (Treasure of Lima) என்பது  1820 ஆம் ஆண்டு பெருவின் லிமாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட ஒரு புதையல் ஆகும். இது  இன்றைய மதிப்பில் 160 மில்லியன் பவுண்டுகள் அல்லது 208 மில்லியன் டாலர்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.[1]

வரலாறுதொகு

இன்காவைத் தோற்கடித்த எசுபானியா  16 ஆம் நூற்றாண்டு முதல் லிமாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், கத்தோலிக்க திருச்சபை லிமாவில் பெரும் செல்வத்தை சேர்த்து வைத்திருந்த‍து. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென் அமெரிக்காவில் உள்ள எசுபானியாவின் காலனிகளுக்கு எதிராக விடுதலைப் போர்கள் தோன்றின. இதற்கு லிமாவும் விதிவிலக்கல்ல. 1820இல் பெரு நாட்டின் தலைநகரான லிமாவை எசுபானியரிடம் இருந்து மீட்க, புரட்சிப் படையினர் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். இதனால் எசுபானியர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது.

பெருவுக்கான எசுபானிய வைஸ்ராயான பெசுவேலா எசுபானியர்கள் சேர்ந்த செல்வங்களை பாதுகாக்க அவற்றை கடல் வழியே மெக்சிகோவுக்குக் கொண்டு சென்று பத்திரப்படுத்த முடிவு செய்தார். இதில் தங்க நகைகள், நாணயங்கள், வைரக் கற்கள் பதிக்கப்பட்ட சிலுவைகள், மதிப்பு மிகுந்த பூசைப் பொருள்கள், தங்கத்தாலான மெழுகுவத்தித் தாங்கிகள், அன்னை மேரியின் கையில் குழந்தை இயேசு இருப்பதுபோல இரண்டு சிலைகள் போன்ற பல பொக்கிசங்கள் அடங்கி இருந்தன.  மொத்தத்தில், இந்தப் பொங்கிசங்களானது $ 12 மில்லியனுக்கும், $ 60 மில்லியனுக்கும் இடையில் மதிப்பிடப்பட்டது.[2]

மேரி டியர் என்ற கப்பலின் தலைவனான  நியூஃபவுன்லாந்தைச் சேர்ந்த வில்லியம் தாம்ப்சன் என்பவர் இச்செல்வங்களை மெக்சிக்கோவிற்கு கொண்டு செல்ல பொறுப்பேற்றார். செல்வங்கள் கப்பலேறின. உடன் ஆறு எசுபானிய வீரர்களும், இரண்டு மதகுருமார்களும் கப்பலேற கப்பல் புறப்பட்டது. இதற்கிடையில் கப்பல் தலைவன் தாப்சனும் அவரது குழுவினரும் அச்செல்வங்களைக் கவர்ந்துகொள்ளலாம் என்ற சபலத்துக்கு ஆட்பட்டனர்; தாம்ப்சனும் அவரது பணியாளர்களும் சேர்ந்துகொண்டு, கப்பலிலிருந்த எசுபானிய வீரர்களையும், மதகுருமார்களையும் கொன்று கடலில் வீசினர்.[3]

அதன் பிறகு ஆளில்லாத தீவான கோகோஸ் தீவுக்கு கப்பலைச் செலுத்திய தாம்ப்சன்  லிமாவின் பொக்கிஷங்களை அங்கே புதைத்து வைத்துவிட்டார், என்றும் பிறகு சந்தர்ப்பம் வாய்க்கும்போது, வந்து தோண்டி எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், மேரி டியர் கப்பல் எசுபானிய கப்பற்படையால் கைப்பற்றப்பட்டது. அதன் பணியாளர்கள் விசாரிக்கப்பட்டு, தாம்ப்சனும் கப்பலின் துணைத் தலைவரும் தூக்கிலிடப்படுவதாக மிரப்பட்டனர். அவர்கள் மிரட்டலைக் கண்டு அஞ்சிய தாம்ப்ஸனும், அவரது கப்பலின் துணைத் தலைவரும் புதையலைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். கோகோஸ் தீவுக்கு வந்தனர். அங்கே எபானிய வீரர்களை அலைக்கழித்த அவ்விருவரும் பின்னர் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து ஓடித் தப்பித்தனர். அதற்குப் பின் எசுபானியர்களால் தாம்ப்ஸனையும், துணைத் தலைவனையும், லிமா பொக்கிஷங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாம்சன் திமிங்கலக் கப்பலின் உதவியுடன் நியூஃபவுண்ட்லேண்டிற்கு திரும்பியதாக நம்பப்படுகிறது.

புதையல் வேட்டைதொகு

அதிலிருந்து நூற்றுக்குக் கணக்கான புதையல் வேட்டைக்காரர்கள், கோகோஸ் தீவில் புதையலைத் தேடி அலைந்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்வர் 1889 முதல் 1908 வரை தீவில் வாழ்ந்த ஜெர்மானியரான ஆகஸ்ட் கிஸ்லெர் என்பவர்  மற்றொருவர் அமெரிக்க நிழலுலகத் தலைவரான  புர்க்சி சீகல் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவரவர்களாவர். இப்புதையலானது கோகோஸ் தீவில் புதைக்கப்படவில்லை,  ஆனால் அது மத்திய அமெரிக்கக் கடல் பகுதியில் ஏதோ ஒரு தீவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. கோஸ்ட்டா ரிக்கா அரசாங்கமானது புதையல் வேட்டையை இங்கு தடை செய்துள்ளது, மேலும் இந்த தீவில் தற்போது எந்த புதையலும் இல்லை என்று நம்புகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. Jasper Copping (5 August 2012). "British expedition to Pacific 'treasure island' where pirates buried their plunder". The Telegraph. August 12, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Legends and Lore (Part 2)". PBS.org. 27 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. Joseph B. MacInnis (1975). Underwater Man. New York: Dodd, Mead & Company. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-396-07142-2. https://archive.org/details/underwaterman0000unse. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிமாவின்_புதையல்&oldid=3581673" இருந்து மீள்விக்கப்பட்டது