லூகாஸ் வினைக்காரணி

லூகாசின் காரணி (Lucas' reagent)என்பது அடர் ஐதரோகுளோரிக் காடியில் நீரற்ற துத்தநாக குளோரைடு கரைக்கப்பட்ட கரைசலாகும். இந்தக் கரைசலானது குறைவான மூலக்கூறு எடையுள்ள மதுசாரங்களை வகைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த வினையானது ஐதராக்சைல் தொகுதியானது குளோரைடு அயனியால் பதிலியிடப்படும் ஒரு வினையாகும்.  இச்சோதனையின் நேர்மறை முடிவானது நிறமற்ற, தெளிவான கரைசலானது குளோரோஅல்கேனின் உருவாக்கத்தால் கலங்கிய தோற்றத்தை அடைவதிலிருந்து அறியப்படலாம்.[1] இச்சோதனையில் உருவாகும் மூவிணைய கார்பன்நேரயனியின் அதிக நிலைத்தன்மையின் காரணமாக விரைவான வினையின் மூலமாக தொடர்புடைய அல்கைல் ஆலைடுகள் உருவாக்கப்படுவதால் மூவிணைய ஆல்ககால்கள் சிறப்பான முடிவுகளைத் தருகின்றன. இந்தச் சோதனையானது கரிம வேதியியலில் ஒரு தரமான அல்லது நிலையான பண்பறி பகுப்பாய்வு சோதனையாக 1930 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.[2] இந்தச் சோதனையானது, நிறமாலைகாட்டிச் சோதனை உத்தி மற்றும் வண்ணப்படுவுப்பிரிகை உத்தி ஆகியவைகளின் பயன்பாட்டுக்குப் பிறகு இந்த முறை வழக்கொழிந்து போய்விட்டது. இச்சோதனையானது ஓவர்ட் லுகாசு(1885–1963) என்ற அமெரிக்க வேதியியலாளரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

லூகாஸ் சோதனை: எத்தனாலுடனான சோதனையின் போது எதிர்மறை முடிவு (இடது) மூவிணைய பியூட்டனாலுடன் நேர்மறை முடிவு (வலது)

லூகாசின் சோதனை தொகு

லூகாசின் சோதனையானது ஆல்ககால்களில் ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய ஆல்ககால்களை வேறுபடுத்தி அறிவதற்குப் பயன்படுகிறது. இந்த சோதனையானது, மூன்று வகை ஆல்ககால்கள் ஐதரசன் ஆலைடுகளுடன் SN1 வினை வழிமுறை மூலமாக வினைபுரியும் திறனில் உள்ள வேறுபாட்டின் அடிப்படையில் அமைகிறது.[3]

ROH + HCl → RCl + H2O

இந்த வினைத்திறன் மாறுபாட்டிற்குக் காரணமாக அமைவது மூன்று வகை கார்பன்நேரயனிகள் உருவாவதில் உள்ள இலகுத்தன்மை ஆகும். மூவிணைய கார்பன்நேரயனிகள் மிகுந்த நிலைத்தன்மை உடையவையாகவும், ஈரிணைய கார்பன்நேரயனிகள் அவற்றை விட சற்று குறைந்த நிலைத்தன்மை உடையவையாகவும், ஓரிணைய கார்பன்நேரயனிகள் மிகக்குறைந்த நிலைத்தன்மை உடையனவாகவும் இருக்கின்றன.

மோலார் சமான விகிதத்தில் கலந்துள்ள ZnCl2 மற்றும் HCl ஆகியவற்றின் கலவையே வினைக்காரணியாகும். இந்தக் கலவையின் காரணமாக ஆல்ககாலானது புரோட்டானேற்றம் அடைந்து, கார்பனனுடன் இணைந்துள்ள H2O தொகுதியானது அதிக அளவில் காணப்படும் கருக்கவர் தொகுதியான Cl அயனியால் பதிலியிடப்படுகிறது. மூவிணைய ஆல்ககால்கள் லூகாசின் வினைக்காரணியுடன் உடனடியாக வினைபுரிந்து கலங்கிய தன்மையைத் தோற்றுவிக்கிறது. இந்த கலங்கிய தன்மையானது நீர்த்த கரைசல்களில் அல்கைல் குளோரைடுகளின் குறைவான கரைதிறன் காரணமாக ஏற்படுகிறது. ஈரிணைய ஆல்ககால்கள் (அவற்றின் கரைதிறனுக்கேற்ப) ஐந்து முதல் ஐம்பது நிமிட காலத்திற்குள் வினைபுரிகிறது. ஓரிணைய ஆல்ககால்கள் அறை வெப்பநிலையில் லூகாசின் காரணியுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு வினைபுரிவதில்லை.[3] ஆகவே, கலங்கிய தன்மை தோன்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவே ஆல்ககாலின் வகையைக் கண்டறிய உதவும் காரணியாகும். கால அளவில் காணப்படும் வேறுபாடு மூன்று வகை ஆல்ககால்களை வேறுபடுத்தி அறிவதற்கு உதவுகிறது.

  • அறை வெப்பநிலையில் கண்ணுக்குப் புலனாகும் வினையில்லை. வெப்பப்படுத்திய பிறகு ஒரு எண்ணெய் போன்ற அடுக்கு தோன்றுகிறது: 1-பென்டனால் போன்ற ஓரிணைய ஆல்ககால்
  • கரைசலானது 3–5 நிமிடங்களில் கலங்கிய தன்மையை அடைந்து எண்ணெய் போன்ற படலம் ஏற்படுகிறது.: 2-பென்டனால் போன்ற ஈரிணைய ஆல்ககால்
  • கரைசலில் கலங்கிய தன்மை உடனடியாகத் தோன்றுகிறது. எண்ணெய் போன்ற படலம் உடனடியாக உருவாகிறது: 2-மெதில்-2-பியூட்டனால் போன்ற மூவிணைய ஆல்ககால்

மேற்கோள்கள் தொகு

  1. Shriner, R. L.; Fuson, R. C. (1956). The Systematic Identification of Organic Compounds (5th ). New York: John Wiley. பக். 117–119. இணையக் கணினி நூலக மையம்:732878490. 
  2. Lucas, H. J. (1930). "A New Test for Distinguishing the Primary, Secondary and Tertiary Saturated Alcohols". Journal of the American Chemical Society 52 (2): 802–804. doi:10.1021/ja01365a053. 
  3. 3.0 3.1 Kjonaas, R. A.; Riedford, B. A. (1991). "A Study of the Lucas Test". Journal of Chemical Education 68 (8): 704. doi:10.1021/ed068p704. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1991-08_68_8/page/704. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூகாஸ்_வினைக்காரணி&oldid=3520476" இலிருந்து மீள்விக்கப்பட்டது