லைஃபு இஷ்டேனே
லைஃபு இஷ்டேனே (Lifeu Ishtene, பொருள்: இது தான் வாழ்க்கை ) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தியக் கன்னட திரைப்படம் ஆகும். இது பவன் குமார் எழுதி இயக்கிய கருப்பு நகைச்சுவை படமாகும். இதில் திகந்த், சிந்து லோகநாத், சம்யுக்தா ஹோர்னாட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சதீஷ் நினாசம், அச்சுத் குமார், வீணா சுந்தர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இதன் கதையானது கவலையற்ற இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. இந்தப் படத்தின் தலைப்பு 2010 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான பஞ்சரங்கி படத்தில் இடம் பெற்ற பாடலிலிருந்து எடுக்கப்பட்டது.[1][2]
லைஃபு இஷ்டேனே | |
---|---|
இயக்கம் | பவன் குமார் |
தயாரிப்பு |
|
திரைக்கதை | பவன் குமார் |
இசை | மனோ மூர்த்தி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சுக்னனா |
படத்தொகுப்பு | சனத் சுரேஷ் |
கலையகம் |
|
வெளியீடு | 9 செப்டம்பர் 2011 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசையானது மனோ மூர்த்தியால் அமைக்கப்பட்டது. பாடல் வரிகளை யோகராஜ் பட், ஜெயந்த் கைகினி, பவன் குமார் ஆகியோர் எழுதினர். படத்தின் ஒளிப்பதிவை சுக்னனா மேற்கொண்டார். படத்தொகுப்பை சனத் மற்றும் சுரேஷ் செய்தனர். இப்படம் 2011 செப்டம்பர் 9 அன்று வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. திரையரங்குகளில் ஒன்பது வாரங்கள் ஓடியதைத் தொடர்ந்து, இது வணிக ரீதியான வெற்றியாக ஆனது. மேலும் 2011 ஆம் ஆண்டின் சிறந்த கன்னடப் படங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.[3] மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட பிலிம்பேர் விருதுகளில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை சேத்தன் சோஸ்கா வென்றார்.[4]
கதைச் சுருக்கம்
தொகுஇசை உலகில் சாதிக்கத் துடிக்கும் இளைஞன் விசால் (திகந்த்). கல்லூரியில் உடன் படிக்கும் நந்தினியைக் காதலிக்கிறான். அவளை திருமணம் முடிக்க விரும்பும்போது, ஏதாவது வேலை தேடிக்கொண்டால்தான் தன் பெற்றோரின் சம்மதத்தைப் பெற முடியும் என்கிறாள். ஆனால் விசால் இசைத்துறையில் சாதிப்பதே தன் நோக்கம் என வேறு வேலைக்குச் செல்ல மறுத்துவிடுகிறான். இதனால் இருவரின் காதலும் முறிகிறது. நந்தினிக்கு வேறு ஒருவனுடன் திருமணம் ஆகிறது.
இதனையடுத்து விசாலைப் பற்றி தன் திட்ட அறிக்கைக்கு படமெடுக்க வரும் இதழியல் மாணவியான ராஷ்மி (சம்யுக்தா ஹோர்னாட்) அவனைக் காதலிக்க இருவம் காதலிக்கத் தொடங்குகின்றனர். இ்வாறு எளிதில் பெண்களிடம் காதல் வயப்படுவதும், பின்னர் விலகுவதுமாக இருக்கும் அசட்டையான இளைஞன். காதலையும், வாழ்க்கையைப் பற்றியும் புரிந்து கொள்வதே படத்தின் கதையம்ணமாக உள்ளது.
நடிப்பு
தொகு- திகந்த் விஷாலாக
- சிந்து லோகநாத் நந்தினியாக
- சதீஷ் நினாசம் "சிவூ" என்கிற சிவகுமாராக
- சம்யுக்தா ஹோர்னாட் ராஷ்மியாக
- அச்சுத் குமார் விஷாலின் தந்தையாக
- வீணா சுந்தர் விஷாலின் அம்மாவாக
- ஸ்ரீனிவாஸ் பிரகாஷ் ரகுவாக
- மிமிக்ரி தயானந்த் பிங்கி லாலாக
- வன் குமார் சூரஜாக
- ராஜு தாலிகோட் கேட் கீப்பராக
- சந்தன் குமார் சாந்தனாக
- ரம்யா பார்னா சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
தொகுஇயக்குநர் பவன்குமார் முன்னதாக யோகராஜ் பட்டின் படங்களான மனசாரே மற்றும் பஞ்சரங்கி போன்ற படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டு பஞ்சரங்கி திரைப்படத்தில் மிகவும் பிரபலமான கன்னட பாடல் ஒன்றிலிருந்து லைஃபு இஷ்டேனே என்ற சொல்லானது படத்தின் பெயராக எடுத்துக்கொள்ளப்பட்டது.[5] படத்தின் வெற்றிக்குப் பிறகு படத்தின் தொடர்ச்சியாக அடுத்த படத்திற்கு திட்டமிடுவதாக கூறினார்.
பன்னாட்டு வெளியீடு
தொகுஇந்த படம் அக்டோபர் 2011 முதல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வெளிநாடுகளில் திரையிடப்படும் எனப்பட்டது. கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில், திரையிடல் அக்டோபர் 14, 15, 16, 22, 23 ஆகிய தேதிகளில் செர்ரா திரையரங்கில் திரையிட திட்டமிடப்பட்டது.[6][7]
இயங்கலை வெளியீடு
தொகுகள்ளத்தனமான வெளியீட்டைத் தடுப்பதற்காகவும் வெளிநாட்டு இந்திய பார்வையாளர்களை சென்றடைவதற்காகவும் இந்த படம் இயங்கலையில் (ஆன்லைன்) வெளியிடப்பட்டது. இயங்கலையில் படத்தின் இரண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டன. உயர் தெளிவுத்திறன் கொண்ட பதிப்பு ஐந்து டாலர்கள், குறைந்த தெளிவுத்திறன் கொண்ட பதிப்பு பதிப்பு இரண்டு டாலர் ஐம்பது சென்டுகள் என வெளியிடப்பட்டது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lucia — By the people". Livemint. 24 August 2015. http://www.livemint.com/Leisure/LYKQjbBNWOxGCsA5LAc8KI/Lucia--By-the-people.html.
- ↑ "Idlis, vastu and the Swiss valley". Bangalore Mirror. 2 July 2014. http://www.bangaloremirror.com/entertainment/south-masala/Idlis-vastu-and-the-Swiss-valley/articleshow/37649338.cms.
- ↑ Khajane, Muralidhara (31 December 2011). "Kannada film industry shows signs of recovery". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/kannada-film-industry-shows-signs-of-recovery/article2762441.ece.
- ↑ "59th Idea Filmfare Awards South (Winners list)". Filmfare. 9 July 2012. http://www.filmfare.com/news/59th-idea-filmfare-awards-south-winners-list-809.html.
- ↑ ಯೋಗರಾಜ್ ಭಟ್ ಮತ್ತು ದಿಗಂತ್ ಲೈಫು ಇಷ್ಟೇನೆ! பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Lifeu Ishtene US California Bay Area Screening schedule[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Serra Theatres' screening schedule பரணிடப்பட்டது 3 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ [1]