லோபோ துவா கல்வெட்டு

லோபோ துவா கல்வெட்டு இது பாருஸ் கல்வெட்டு (Lobu Tua Inscription, also called Barus Inscription) என்றும் அழைக்கப்படுவது 1873 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மத்திய தபனுலி ரீஜென்சியின் ஆண்டம் தேவி மாவட்டத்தில் உள்ள லோபோ துவா கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு ஆகும். [1] இந்த கல்வெட்டு சக ஆண்டு 1010 அல்லது கிபி 1088 ஆண்டில் வெட்டப்பட்டது. [1] இந்த கல்வெட்டு 1891-1892 இன் மெட்ராஸ் எபிகிராபி அறிக்கையில் இந்தியாவில் இருந்த ஆங்கில கல்வெட்டு அறிஞரான ஆய்கன் கூல்ட்சு என்பவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. [1]

பாரூஸ் பகுதியில் தமிழ் வணிகக்குழு இருந்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. [2] வணிககுழுவினர் "திசை ஆயிரத்து ஐநூற்றுவர்" என்ற பெயரைக் கொண்டிருந்தனர். [2] [3] தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒய். சுப்பராயலுவின் கூற்றுப்படி, இந்த வணிக்குழுவின் மற்றொரு பெயர் ஐந்நூற்றுவர் என்பதாகும். இவர்களின் தமிழ்க் கல்வெட்டு அச்சேவில் உள்ளது. [4] அவர்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து பல்வேறு பொருட்களை வாங்கினர். மேலும் வணிகக் குழுவிடமிருந்து மேலும் வணிகக்குழுவினரிடம் கஸ்தூரி விலையின் அடிப்படையில் தங்கமாக சுங்கவரி வசூலிக்கப்பட்டது. [2]

1900களின் அறிக்கைகளின்படி, சிவப்பு கிரானைட் கல்லால் செய்யப்பட்ட தலையற்ற புத்தர் சிலை ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது இப்போது இல்லை. [2] பாரசில் சிலை இருந்தது அங்கு தமிழ் சமூகம் நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது வந்து சென்றதாகவோ இருந்ததா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எனவேதான் தமிழ் சமூகத்திற்கு சொந்த வழிபாட்டுத்தலம் இருந்துள்ளது. [2]

தற்போது கல்வெட்டின் 7/8 பகுதி இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி கல்வெட்டு இன்னும் லோபு துவாவிலேயே உள்ளது. [5] கல்வெட்டுகளைத் தவிர, லோபு துவாவில் சில வறண்ட பழைய உறைக் கிணறுகளும் காணப்பட்டன. [6] [7]

கல்வெட்டு உரை

தொகு

லோபோ துவா கல்வெட்டின் உரை பின்வருமாறு: [8]

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ சகரை
  2. ஆண்டு ஆயிரத்து[ப்ப]
  3. த்துச் செல்லாநி[ன்]
  4. ற மாசித் திங்கள்
  5. வாரோசாந மாதங்
  6. கரி வல்லவத் தேசி உ
  7. ய்யக் கொண்ட பட்
  8. டி நத்து வேளாபுரத்து
  9. கூடி நிரந்த தே[சித் திசை]
  10. விளங்கு திசை ஆயி
  11. த்தைஞ்ஞூற்றுவரோ
  12. ம் நம்மகநார் நகர ஸேநாப
  13. தி நாட்டுசெட்டி
  14. யார்க்கும் பதிநெண்பூமி
  15. தேசி அப்பர்க்கு மா[வெ]த்
  16. துகளுக்கும் நா வைத்துக்
  17. குடுத்த பரிசாவது மரக்க
  18. ல... ... ...
  19. ல மரக்கல நாயநுங் கேவி
  20. களும் கஸ்தூ[ரி] விலை மு[தல]கப்ப[ட]
  21. அஞ்சு துண்[டா]யம் பொன்னும் கு[டு]
  22. த்துப் பாவாடை ஏறக்கடவதாகவும்
  23. இப்படிக்கு [இ]க்கல் எழுதி நாட்டி
  24. க் குடுத்தோம் பதிநெண்பூமி தேசித் திசை விள
  25. ங்கு திசை ஆயிரத்தைந்த்நூற்றுவரோம் அ
  26. றமற வெற்க அறமேய் துணை.

1-4. நிகழும் சக வருடம் 1010 மாசி மாதம்..,

5-11. நாங்கள் ஆயிரம் திசை ஐந்நூற்றுவர் மாதங்கிரி வல்லவ தேசி உய்யக் கொண்ட பட்டினம் எனப்படும் வாரோச்சிலுள்ள வேளாபுரத்தில் சந்தித்தோம்

12-17. எங்கள் மகன்(கள்) நகர சேனாபதி நாட்டுச் செட்டியார் பதிநெண்பூமி தேசி அப்பர் மற்றும் மாவெட்டுகள் ஆகியவற்றிற்கு பின்வருவனவற்றை முடிவு செய்தோம்:

18-22. [ஒவ்வொரு] கப்பலுடைய தலைவனும், கேவிகளும், அஞ்சு துண்டையம் தங்கம் அந்த கஸ்தூரி முதலானவைக்கு செலுத்திவிட்ட பிறகுதான், கீழே இறங்கவேண்டும்.

23-26. எனவே, அனைத்து திசைகளிலும் பதினெட்டு நாடுகளிலும் அறியப்பட்ட திசை ஆயிரத்து ஐநூற்றுவரான நாங்கள் இந்த கல்லை செதுக்கி நடுமாறு கட்டளையிட்டோம். அறமற வெற்க அறமேய் துணை.

மேலும் பார்க்கவும்

தொகு

 

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Claude Guillot 2002, ப. 17.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Pradjoko & Utomo 2013, ப. 99-100.
  3. Mukund 1999, ப. 30.
  4. Claude Guillot, dkk. 2007, ப. 289-290.
  5. Susanto Zuhdi 1993.
  6. Simangungsong, Lister Eva (2020-06-17). Sumatera Utara Dalam Periodisasi (in இந்தோனேஷியன்). Yayasan Kita Menulis. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-623-6512-20-3.
  7. Siahaan, Bisuk (2005). Batak Toba: Kehidupan Di Balik Tembok Bambu (in இந்தோனேஷியன்). Kempala Foundation. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-979-99530-0-1.
  8. Claude Guillot 2002, ப. 20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோபோ_துவா_கல்வெட்டு&oldid=3319577" இலிருந்து மீள்விக்கப்பட்டது