வசீலி சுகோம்லின்சுக்கி
வசீலி அலெக்சாந்திரொவிச் சுகோம்லின்சுக்கி (Vasily Alexandrovich Sukhomlinsky, உக்ரைன் மொழி: Василь Олександрович Сухомлинський, உருசிய மொழி: Васи́лий Алекса́ндрович Сухомли́нский, வசீலி அலெக்சாந்த்ரவிச் சுஹோம்லின்ஸ்க்கி, செப்டம்பர் 28, 1918 – செப்டம்பர் 2, 1970) உக்ரைனில் வாழ்ந்த ஒரு கல்வியாளர். இவர் உக்ரைன் நாட்டிலுள்ள சுமார் 3000 மக்கள் வசித்து வந்த பாவ்லிச்சு என்ற சிற்றூரிலுள்ள பள்ளியின் தலைமையாசிரியராக இருபது ஆண்டுகள் இருந்தார். இன்றும் கூட அவர் தொடங்கிய கல்விச் சீர்திருத்தங்களைக் காண பாவ்லிச்சு பள்ளிக்கு பல இடங்களிலிருந்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இன்னமும் அச்சீர்திருத்தங்கள் முழு அளவில் செயல்படும் வகையில் தொடரப்பட்டு வருகின்றன.
வசீலி அலெக்சாந்திரொவிச் சுகோம்லின்ஸ்கி | |
---|---|
சுகோம்லின்சுக்கி நினைவாக வெளியிடப்பட்ட உக்ரைனிய நாணயம். | |
பிறப்பு | Василь Олександрович Сухомлинський செப்டம்பர் 28, 1918 ஒமெல்னிக், இரசியா |
இறப்பு | செப்டம்பர் 2, 1970 பாவ்லிச், சோவியத் ஒன்றியம் | (அகவை 51)
தேசியம் | உக்ரைனியர் |
பணி | ஆசிரியர், வெளியீட்டாளர், எழுத்தாளர் |
அறியப்படுவது | கற்கை நெறி |
முழுமையான கல்விக்கு உள்ளகமாக அறக்கல்வி இருக்க வேண்டும் என்றார் அவர். அறக்கல்வி என்று அவர் வரையறுத்தது — இயற்கையின் அழகைத் துய்க்கும் அளவிற்கு மாணவர்களை நுட்பமானவர்களாக்குதல், கலை மற்றும் மனித உறவுகள் குறித்த நுட்பங்களை அறியச்செய்தல் ஆகியவையே. ஒரு மாணவருக்கு உடல்-சார், அறிவு-சார் வளர்ச்சியோடு தொழில்-சார் அறிவும் தேவை என்று திட்டமாக நம்பினார். குழந்தைகள் பால் அவர் கொண்டிருந்த ஆழமான அன்பும் அவரது இலட்சியவாதமும் ஒரு முழுமையான கல்விமுறையை உருவாக்க உதவின. அவரது கல்விமுறையில் மாணவர்களின் உடல் நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
வசீலியின் கல்விமுறையில் கல்வியின் ஒவ்வொரு அங்கத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது; அவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார். மாணவர் ஒருவரை மாணவர் போல நடத்தக்கூடாது — பண்பாளராக வார்க்கப்பட வேண்டிய ஒரு தனிமனிதரைப் போல நடத்த வேண்டும் என்று கூறுவார் வசீலி.
சுக்கோம்லின்சுக்கியின் முழுமையான கல்விமுறை
தொகுசிறந்த பண்பாளராக ஒரு மாணவரை உருவாக்குவதில் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார் வாசிலி.
சிறந்த பண்பாளரின் பண்புகளாக அவர் கருதியது:
தொகு- உடலளவிலும் மனதளவிலும் திடமாக, நலமாகவிருத்தல்
- மேலும் அன்பே உருவானவராகவும் இயற்கையின் அழகைத் துய்க்கவல்ல நுட்பம் கொண்டராகவும் இருத்தல்
- தன் சுற்று முற்றும் சூழலைப்பற்றி அறிந்திருத்தல், அதைக் காப்பதில் முனைப்பு கொள்ளல்
- உடனிரு சமூகத்தி்ன் முன்னேற்றத்திற்காக தன் அறிவாற்றல், திறன்களைப் பயன்படுத்துதல் ...
மிகவும் மதிப்புமிக்கது என்று அவர் தன் குழந்தைகளுக்குக் கூறியது மனித வாழ்வையே; ஏனையோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதைக் காட்டிலும் பெருமைமிகு செயல் வேறெதுவுமில்லை என்று அறிவூட்டினார். அவ்விதம் மகிழ்விக்க வேண்டுமெனில் முதலில் நாம் நம்மிடத்திலும் நம் சுற்றுச்சூழலிலும் அழகுணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் மாணவர் மனம் விரிவடைய வேண்டுமெனில் பிற மொழிகளையும் வானியலையும் கற்றல் அவசியம் என்று கருதினார்.[1]
ஐந்து தூண்கள்
தொகு- உடல் நலன் பற்றிய கல்வி
- ஒழுக்கநெறி வளர்க்கும் கல்வி
- அழகயில் வளர்க்கும் கல்வி
- அறிவாற்றல் வளர்க்கும் கல்வி
- தொழிற்கல்வி
மாணவர்களின் உடல்நலத்தின் அவசியம்
தொகுஇதைக் கூறுவதில் எனக்கு எவ்வித அச்சமுமில்லை: கல்வி புகட்டுபவரின் மிக முக்கியமான வேலை மாணவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுதல் என்று முழங்கினார் வசீலி.[2] பாவ்லிச்சு பள்ளிக்கு ஒரு குழந்தை வருவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னரே அதன் உடல்நலம் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு, ஏதேனும் குறைகள் இருந்தால் குறித்துக்கொண்டு அதனை சரிசெய்யவும் வழிவகை செய்யப்பட்டது.[3]
வசீலியின் எழுத்துகள்
தொகு30 நூல்களை எழுதிய வசீலி 500 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பள்ளி வேலைகளற்ற பொழுதான காலை 4 மணியிலிருந்து 8 மணி வரையே அவர் எழுதப் பயன்படுத்திய காலம். மற்றபடி மருத்துவமனைகளில் இருந்த நாட்களையும், விடுமுறை நாட்களையும் எழுதுவதற்கு அவர் துரிதகதியில் பயன்படுத்திக் கொண்டார். அவரது வாழ்நாளின் கடைசி மூன்று ஆண்டுகளின் தான் அவரது மிக முக்கியமான படைப்புகள் எழுதப்பட்டன. அவர் எழுதிய நூல்கள் புதினங்களோ கதைகளோ குழந்தை-வளர்ப்பு பற்றிய கையேடுகளோ அல்ல — மாறாக அவை கல்வி பற்றிய நேரடியான ஆய்வுகள். இருப்பினும் அவர் எழுதிய பல்வேறு நூல்கள் பலதரப்பு மக்களால் படிக்கப்பட்டு இலட்சக்கணக்கில் விற்றன.[4]
சுகோம்லின்சுகியின் நோட்டுப்புத்தங்களும் அவர் எழுதிய பல புத்தகங்களும் பாவ்லிச்சு அரசின் கல்விக்கான நினைவு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. முத்து முத்தான கையெழுத்தில் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் நோட்டுப்புத்தகங்களில், வாசிலி தன் அன்றாடைய வகுப்பு மேற்பார்வையைப் பற்றிய அனுபவங்களையும் தான் அன்று செய்யவேண்டிய அலுவல்கள் பற்றியும் எழுதியிருப்பதைக் காணும் ஒருவருக்கு அவரது ஒழுங்குடன் அமைந்த இயல்பும் துல்லியமான திட்டமிடுத்ல் குறித்தும் புலப்படும்.[5]
பள்ளிக்குழுக்கள்
தொகுபாவ்லிச்சு பள்ளியில் பாடத் திட்டம் சாராச் செயல்களுக்காக மட்டுமே அதிக எண்ணிக்கையில் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களின் சிறப்பம்சம் என்னவெனில், குழந்தைகளும் பெரிய மாணவர்களும் ஒன்று கூடி செயல்பட்டது தான். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனி வேலையிடம், ஒரு தனி விருப்பவேலை மற்றும் உதவி புரிய ஒரு பெரிய மாணவரும் உண்டு. பெரும்பாலான மாணவர்கள் ஏதேனும் ஒரு தொழில்-வேலையைக் கற்றுக்கொள்வதோடு நில்லாமல் அதை சக மாணவர்களிடம் பகிர்ந்தும் வருவர். இவ்வகைப் பகிர்வில் தான் உண்மையான கல்வி ஏற்படுகின்றது என்று கூறுவார் வசீலி.
சுக்கோம்லின்சுக்கியின் கருத்துகள்
தொகு- மனித ஆளுமை அளவிட முடியாத திறன் வாய்ந்தது என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்; ஒவ்வொருவரும் ஒரு ஆக்கராக முடியும் — அவர்களின் தடயத்தை இவ்வுலகில் விட்டுச் செல்ல முடியும் ...காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும் — கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல...[2]
- தானும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தவன்[ள்] தான் என்பதை என்றுமே மறவாதிருப்பவர் தான் ஒரு உண்மையான ஆசிரியராக விளங்க முடியும்.
- பெரும்பான்மை ஆசிரியர்கள் செய்திடும் துரதிட்டமான செயல் என்னவென்றால் மதிப்பெண்கள்/தரங்கள் அடிப்படையில் மாணவர்களை நன்கு படிப்பவர்கள், மற்றும் பிறர் என்று முத்திரை குத்துவது.
எளிமையின் அடையாளம் வசீலி
தொகுநூல்களுக்கான பெட்டி ஒன்று, ஒரு மேசை, நாற்காலி ஒன்று பழைய தட்டச்சுக்கருவி ஒன்று -- இவ்வளவு தான் பாவ்லிச்சு பள்ளியின் தலைமையாசிரியர், இயக்குனர் சுகோம்லின்சுக்கியின் அறையில் காணப்பட்டவை. இங்கிருந்து தான் காலை 4 மணியிலிருந்து 8 மணி வரை வசீலி கல்வியுலகையே மாற்றவல்ல கருத்துகளை எழுதினார்.[5]
வசீலிக்கு உந்துதலாக விளங்கியவர்கள்
தொகு- சுகோம்லின்சுகி தன் கல்விமுறைக்கு உந்து-ஆற்றலாக சோவியத் நாட்டின் கல்வியாளரான ஆண்டன் மாகரென்கோவையே சுட்டுகிறார். வாழ்க்கையில் ஒரு மனிதர் என்னவாக உருவாகின்றார் என்பதை அவரது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைப்பருவத்திலேயே அறிந்துகொள்ள இயலும் [A person will be what he becomes before the age of five] என்ற மாகரென்கோவின் கருத்தை அடிக்கடி வலியுருத்துவார் வசீலி.
- யேனஸ் கோர்சாக் [Janusz Korczak] என்ற பெயரால் அறியப்படும் உருசிய மருத்துவரான என்றிக் கோல்ட்ஷிமிட் மற்றுமொரு முக்கியமான உந்துகோலாக சுகோம்லின்சுக்கிக்கு விளங்கினார். ’’குழந்தைகளுக்கு உண்மையான கல்வி அளிக்க முற்படுபவர் முதலில் அவர்களிடம் தம் இதயத்தை அளிக்க வேண்டும்’’ என்ற உண்மையை கோர்சாக்கிடமிருந்து தான் கற்றதாக கூறுகிறார் வசீலி.
மேற்கோள் குறிப்புதவி
தொகு- ↑ http://en.wikipedia.org/wiki/Sukhomlinsky
- ↑ 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-09-03. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
- ↑ file:///D:/EDUCATION&TEACHING/SOTE%20Article_%20The%20Educational%20Philosophy%20of%20V.A.%20Sukhomlinsky.html
- ↑ http://www.aalsa.org/webzine2008/SukhomlinskyParadox.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 5.0 5.1 http://www.day.kiev.ua/13260/