வடக்குப்பட்டு தொல்லியல் களம்

வடக்குப்பட்டு தொல்லியல் களம் என்பது, நுண்கற்காலத்திற்கும் (Microlithic Age) வரலாற்றுக் காலத்திற்கும் (Historic Age) இடைப்பட்ட தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்களை உள்ளடக்கியுள்ள ஒரு சிறப்புமிக்க தொல்லியல் களமாகும். இந்தத் தொல்லியல் களம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வடக்குப்பட்டு ஊராட்சி, ஓரகடத்தை அடுத்து, வடக்குப்பட்டு கிராமத்தின் துரும்பன்மேடு பகுதியில் அமைந்துள்ளது. இக்களத்தில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை 03 ஆம் தேதி முதல் சென்னை மண்டல கண்காணிப்பாளர், காளிமுத்து தலைமையிலான குழுவினர் அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு மேற்கொண்ட அகழாய்வுகளில் இடைக்கற்காலம், வரலாற்றுத தொடக்க காலம், வரலாற்று காலத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. [1] [2] முதற்கட்ட அகழாய்வில் தொல்லியல் துறையினரே எதிர்பாராத வண்ணம் பல முக்கியத்துவம் கொண்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. எனவே முதற்கட்ட ஆய்வினைத் தொடர்ந்து இந்தக் களத்தில் விரிவான இரண்டாம் கட்ட அகழாய்வினை நடத்துவதற்கு இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறை திட்டமிட்டுள்ளது.

அமைவிடம் தொகு

இந்தத் தொல்லியல் களம் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வடக்குப்பட்டி ஊராட்சி,, ஒரகடத்தில் உள்ள ரெனால்ட் நிசான் ஆட்டோமொபைல் தொழிற்சாலை அருகே அமைந்துள்ளது. இக்களம் ஓரகடத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், திருப்பெரும்புதூரிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 37 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2,715 ஆகும். இவர்களில் பெண்கள் 1,359 பேரும் ஆண்கள் 1,356 பேரும் உள்ளனர். இதன் புவியமைவிடம் 12° 48' 32.8464 N அட்சரேகை 79° 56' 12.1812 E தீர்க்க ரேகை ஆகும். [3]

வடக்குப்பட்டு அகழாய்வு வரலாறு தொகு

வடக்குப்பட்டின் தொன்மை கலாச்சார வளர்ச்சி, தொடர்ச்சியான மனித வாழிடங்கள் ஆகியன முறையான ஆய்வுகள் வாயிலாக நிறுவப்படவேண்டும் என்ற அடிப்படையில் இங்கு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு ஆய்வில் பல தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற அலுவலரும் வரலாற்று ஆய்வாளருமான சி சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தொண்டை மண்டலத்தில், குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாற்று புவியியல் ஆய்வுகளை இவர் மேற்கொண்டதை இங்கு குறிப்பிடலாம். [4]

வடக்குப்பட்டு கிராமத்திற்கு அருகில் உள்ள நத்தம் மேடு என்றும் அழைக்கப்படும் குருவன் மேடு என்ற இடத்தில் உள்ள தொல்லியல் களம் முதலில் 1922 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. [1] [2] வடக்குப்பட்டு தொல்லியல் களத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குருவன் மேடு ஒரு புதைகுழி மேடாகும். குருவன் மேடு கண்டறியப்பட்டதை அடுத்து வடக்குப்பட்டில் வரலாற்றுக் கல்லூரி மாணவர்கள், அறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் மேற்பரப்புக் கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். [5]

இங்குள்ள வாய்க்காலில் ஒரு விஷ்ணு சிலை ஒன்றும் சிவன் சிலை ஒன்றும் கண்டறியப்பட்டன. சிவன் சிலை பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டதாகும். விஷ்ணு சிலை கருங்கல்லில் செதுக்கப்பட்டதாகும். இச்சிலை கிரீட மகுடம், முப்புரிநூல், பட்டாடை அணிந்து அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளது. இவை பல்லவர் கலைப்பாணியில் வடிக்கப்பட்ட சிலைகள் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [6] வடக்குப்பட்டின் துரும்பன்மேடு பகுதியில் 1,000 ஆண்டுகள் தொன்மையானதாகக் கருதப்படும் ஒன்பது அடி உயரம் கொண்ட சிவலிங்கம் ஒன்று புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த இடத்தின் அருகே தொன்மையான கட்டடம் புதைந்த நிலையில் இருப்பது குறித்த தகவலை வடக்குப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் நந்தினிவசந்தகுமார் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினருக்குத் தெரிவித்ததை அடுத்து இங்கு அகழாய்வுகள் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. [1] [2]

வடக்குப்பட்டு 2022 அகழாய்வு தொகு

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் 100 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்ட நிலத்தை ஒதுக்கி அகழாய்விற்கு அனுமதி அளித்துள்ளது. சென்னை மாவட்ட தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அமைக்கப்பட்ட 20 உறுப்பினர்கள் அடங்கிய அகழாய்வுக்குழுவினர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை 03 ஆம் தேதி தொடங்கி முதற்கட்ட அகழாய்வை மேற்கொண்டனர். இந்த அகழாய்வு செப்டம்பர் மாதம் வரை நீடித்தது. இந்த அகழாய்வில் பல்லவர் காலம் (Pallava Period), சங்க காலம் (Sangam Period), இடைக் கற்காலம் (Mesolithic Period) உள்ளிட்ட மூன்று நாகரிக பண்பாட்டுக் காலத்தைச் (Civilization Period) சேர்ந்த தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலமான இடைக் கற்காலம் 12,000 ஆண்டுகள் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. வடக்குப்பட்டு அகழாய்வுக் களம் கற்கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. [7]

இந்தத் தொல்லியல் களத்தில் மேற்கொண்ட அகழாய்வில்:-

  • சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் கட்டடஅமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்து செங்கல் கட்டமைப்பு என்று கருதப்படுகிறது.
  • இங்கு நடைபெற்ற அகழாய்வில் சங்க காலத்தை (கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் தொன்மையான) சேர்ந்த கருப்பு மற்றும் சிவப்பு பானை ஓடுகளும், வண்ணம் பூசப்பட்ட பானை ஓடுகளும், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், ரோமானிய பானை ஓடுகள் வகையைச் சேர்ந்த ரௌலட்டட் பானை ஓடுகளும், ரோமானிய ஆம்போரா மதுக்குடுவை ஓடுகளும் சுடுமண் பொம்மைகள், சுடுமண் முத்திரைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள், வட்ட சில்லுகள், தக்களி உள்ளிட்ட பல்வேறு கருவிகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட பானை ஓடுகளை கி.மு. 300 ஆம் ஆண்டு முதல் கி.மு. 800 வரை வாழ்ந்த மக்களின் பயன்பாட்டில் இருந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுடுமண் பொம்மைகள் மற்றும் கருவிகளும் சங்ககலத்தைச் சேர்ந்தனவாகும். [1] [2]
  • கண்ணாடி அணிகலன்கள், மணிகள், வளையல் துண்டுகள், இரும்பு ஆயுதங்கள், கருவிகள் ஆகியன இங்கு கிடைத்துள்ளன. [1] [2]
  • சுமார் 12,000 ஆண்டுகள் தொன்மையானதாகவும் இடைகற்காலத்தைச் சேர்ந்தது என்று கருதப்படும் கற்கருவிகளான கைக்கோடரிகள், சுரண்டி, கிழிக்கும் கத்தி, வெட்டுக்கத்தி, ஆகியன இங்கு அகழப்பட்ட தொல்லியல் குழியில் 75 செ.மீ. ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளன. [1] [2] இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் அதிகபட்சம் ஐந்து செ.மீ. அளவில் மிகச்சிறிய கற்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. சிக்கிமுக்கிக்கல்லாலும் (Pebble stone), அகேட் (Agate) செர்ட் (Chert), ஜாஸ்பர் (Jasper) போன்ற இரத்தினக் கற்களாலும் இக்கருவிகள் தயாரிக்கப்பட்டன. இதன் காரணமாகவே இவற்றை நுண்கற்கருவிகள் (Microlith) என்று வகைப்படுத்தினர். இடைக்கற்கால மனிதர்கள் நாய், மான், பன்றி, தீக்கோழி, எலி போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடினர். ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைக்கற்காலக் கருவிகள் மிகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளன. [8]
  • சுமார் 1.5 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க அணிகலன்களும் கிடைத்துள்ளன. [1] [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 வடக்குப்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கம் கிடைத்துள்ளது Puthiya Thalaimurai 23,Sep 2022
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 வடக்குப்பட்டில் தொல்லியல் துறை அகழாய்வு: 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு எல்.அய்யப்பன் தினமணி செப்டம்பர் 24, 2022
  3. Vadakkupattu Indian Village Directory
  4. Chennai: ASI gets the go-ahead for excavation at Oragadam Yogesh Kabirdoss Times of India : February 28, 2022
  5. ASI teams discover 12,000-year-old artefacts near Chennai, recoveries include gold, beads, money, sculptures from the Pallava period OPIndia September 23, 2022
  6. தோண்ட தோண்ட தமிழர் பொக்கிஷங்கள்... Vadakkupattu அகழாய்வு பணிகள் Live Visit ! Excavation Vikatan TV
  7. ASI team finds roman artifacts, ancient stone bells in Vadakkupattu in TN ETVBharat September 26, 2022
  8. TUV Courses வரலாற்றிற்கு முந்தைய தமிழகம் சங்ககாலம் அ.ஜேம்ஸ் தமிழ் இணையக் கல்விக்கழகம்