எல்லா மொழியிலும் அயன்மொழிச் சொல்லின் பரிமாற்றம் நிகழும். இந்தப் பரிமாற்றத்தால் தமிழில் வந்தேறியதே வடசொல்.

தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட செஞ்சொல்லை இயற்சொல் என்றும், ஒரு சொல்லுக்குப் பல பொருளும், பல சொல்லுக்கு ஒருபொருளும் தந்து செய்யுளுக்காகத் திரித்துக்கொண்ட சொற்களைத் திரிசொல் என்றும், தமிழகத்தைச் சூழ்ந்த 17 நாடுகளில் பேசப்பட்ட தமிழ்ச்சொல்லைத் திசைச்சொல் என்றும், வடநாட்டில் பேசப்பட்ட மொழிச் சொற்களை வடசொல் என்றும் தமிழ் இலக்கண நூலார் பகுத்துக்கொண்டுள்ளனர்.

வடநாட்டில் பேசப்பட்ட மொழி

தொகு

வடநாட்டின் பழமையான கல்வெட்டுகள் அசோகன் காலத்தவை. அந்த எழுத்துகளைப் பிராமி என்கின்றனர். காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு. சிந்துவெளி முத்திரை எழுத்துகளைப் பிராமி எழுத்துகளாகக் கொண்டு படிக்க முயன்றுள்ளனர். சிந்துவெளி நாகரிகம் கி.மு. 3300-1300. பிராமி எழுத்துகளாகப் படிக்கும் முயற்சி முழுமை பெறவில்லை. தமிழ்நாட்டுக் கற்காலப் பானை ஓடுகளில் காணப்படுபவை தமிழ்ப்பிராமி எழுத்துகள். இவற்றை நாம் தமிழி அல்லது தாமிழி என்னும் பெயரால் வழங்கிவருகிறோம். தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளிலும் இந்த எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி தமிழ்.

அசோகன் பயன்படுத்திய எழுத்துகளைத் தொடக்கத்தில் படித்தவர்களில் ஒருவரான அலெச்சாண்டர் கன்னிங்காம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி பிராகிருதம் என்கிறார். அது பஞ்சாபி மொழியோடு தொடர்புடையது என்பது அவர் கருத்து. இதனைப் பாலி மொழி என்றும் கூறுகின்றனர்.

இருக்கு வேதம் வழிபாட்டு மொழி சமசுகிருதம். இந்த வேதம் கி.மு. 1500 காலத்தது என்று கூறுகின்றனர். இந்த மொழி ஆரியர் பேசிய மொழி. எனவே இதனைத் தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் ஆரியம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆரியச்சொல் தமிழில் ஒலிமாற்றம் செய்யப்பட்டதாகும். இதுவே தொல்காப்பியர் கூறும் வடசொல்.

வடசொல் எடுத்துக்காட்டுகள்

தொகு

தொல்காப்பிய, நன்னூல் உரையாசிரியர்கள் அவரவர் பார்வையில் வடசொல் என்று சொற்களைப் பட்டியலிட்டுள்ளனர்.
இவை சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்தவை. அவற்றுள் சில இங்கு அகரவரிசை செய்யப்பட்டு முன்வைக்கப்படுகின்றன.

அமலம், அரன், அரி, அவை, உற்பவம், கமலம், காரகம், காரணம், காரியம், காலம், குங்குமம், சத்திரம், சயம், சாகரம், சுகி, ஞானம், நேயம், தசநான்கு, தமாலம், தாரம், திலகம், நட்டம், நிமித்தம், போகி, மூலம், மேரு, யானம், இயோனி, வேணு என்று உரையாசிரியர்கள் காட்டும் வடசொல் பட்டியல் நீள்கிறது.
கந்தம், சாகரம் – பாகதப் பதிவாகி வந்தவை, நட்டம் – பாகத மொழியிலிருந்து வந்தது, [1]

நீர், பட்டினம், பவளம், மானம், மீனம், முத்து, வட்டம், வரி, வீரம் முதலான தமிழ்ச்சொற்களையும் உரையாசிரியர்கள் வடசொல் பட்டியலில் சேர்த்திருக்கின்றனர்.

நன்னூல் விளக்கம்

தொகு
  1. அமலம், காரணம் – வடமொழி எழுத்துக்கும், தமிழ் எழுத்துக்கும் பொதுவான எழுத்தால் இயைந்தவை
  2. சுகி, போகி, சுத்தி – வடமொழி சிறப்பெழுத்தால் இசைந்தவை
  3. அரன், அரி, சயம் – ஈரெழுத்தானும் அமைந்தவை

இவற்றையும் பார்க்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. தொல்காப்பிய உரை, தெய்வச்சிலையார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடசொல்&oldid=3313232" இலிருந்து மீள்விக்கப்பட்டது