வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்
வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் ஆறுமுக நாவலரால் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் 1848 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் தொடங்கப்பட்ட மேல்நாட்டு முறைப்படி கல்வி கற்பிப்பதற்கான பாடசாலைகளில், இந்துப் பிள்ளைகள் மேல் கிறிஸ்தவ மதம் வலிந்து திணிக்கப்படுவதையும், உள்ளூர்ப் பண்பாடுகள் சிதைக்கப் படுவதையும் எதிர்த்து, யாழ்ப்பாணப் பிள்ளைகளுக்கு அவர்களது பண்பாட்டுச் சூழலில், நவீன பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இப் பாடசாலை. இதனால் இது யாழ்ப்பாண மக்களின் தேசிய எழுச்சியின் சின்னமாகவும் திகழ்கிறது என்று கருதப்படுகிறது. இது ஆண், பெண் இரு பால் மாணவர்களும் பயிலும் ஒரு கலவன் பாடசாலையாகும்.
அமைவிடம்
தொகுயாழ்ப்பாணத்தில் நாவலர் சந்தி என அழைக்கப்படும், காங்கேசந்துறை வீதி, நாவலர் வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இப் பாடசாலை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி என்பவற்றுக்கு அண்மையில் அவை இரண்டுக்கும் இடையில் இது உள்ளது. மாவட்டத்தின் மிகவும் முக்கியமான அமைவிடத்தைக் கொண்டிருந்தபோதும் இப்பாடசாலை, பெரும்பாலும் அயலிலுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கும் பாடசாலையாக இருக்கிறது.
வரலாற்றுப் பின்னணி
தொகுநாவலர் நிறுவிய இப்பாடசாலையின் நோக்கம் பெரு வெற்றி பெற்றது எனச் சொல்லமுடியாது. எனினும், பொதுவாக யாழ்ப்பாணச் சமூக வரலாற்றிலும், குறிப்பாக அதன் கல்வி வரலாற்றிலும், இதன் தோற்றமும், இது தோன்றுவதற்கான காரணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சைவத்தைப் பரப்புவதற்காகவும், கிறித்தவ மதத்துக்கு இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பதற்காகவும் கிறிஸ்தவ மிஷன் பாடசாலையில் தான் வகித்த பணியைத் துறந்து வெளியேறிய நாவலர், இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்வதன் மூலமும், பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமும், இந்து சமயத்தை மறுமலர்ச்சியுறச் செய்து அதனைப் பரப்புவதற்காக முப்பது ஆண்டுகள் பணி புரிந்தார் என இலங்கையில் கல்வி வரலாறு பற்றி நூலொன்றை எழுதிய கே. எச். எம் சுமதிபால என்பவர் குறிப்பிட்டுள்ளார்[1].
பிற்கால ஆய்வாளர்கள் சிலர், முழு யாழ்ப்பாணச் சமூகத்தினதும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், இந்துப் பண்பாடு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு காட்டும் சமூக அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே நாவலர் முயன்றார் என்கின்றனர்[2].
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- சிவத்தம்பி, கார்த்திகேசு; யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை; குமரன் புத்தக இல்லம், சென்னை; ஆவணி 2000. (தமிழில்)
- சுமதிபால, கே. எச். எம்; இலங்கையில் கல்வி வரலாறு 1796 - 1965 (Histry of Education in Ceylon 1796 - 1965); திசர பிரகாசகயோ, தெஹிவல; 1968. (ஆங்கில மொழியில்)