கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்

கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் வணிகம் மற்றும் தொழில் தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டின்போது உருவாக்கப்பட்டது. இது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த அரசுகளிடையே பன்னாட்டு வணிக அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் இணக்கம் ஏற்படாமையைத் தொடர்ந்து உருவானது. 1949 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வொப்பந்தம் 1993 ஆம் ஆண்டுவரை பயன்பாட்டில் இருந்தது. 1995 ஆம் ஆண்டில் இதற்குப் பதிலாகப் உலக வணிக அமைப்பு உருவானது. கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தத்துக்கான உரைகள், 1994 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட சில திருத்தங்களுடன், பன்னாட்டு வணிக அமைப்பின் கீழ் இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

சுற்றுப் பேச்சுக்கள்

தொகு

கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் தொடர்பில் 8 சுற்றுப்பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

ஜி.ஏ.டி.டி இனதும் டபிள்யூ.டி.ஓ வினதும் வணிகச் சுற்றுக்கள்[1]
பெயர் தொடக்கம் காலம் நாடுகள் விடயங்கள் பெறுபேறு
செனீவா ஏப்ரல் 1947 7 மாதங்கள் 23 கட்டண வீதங்கள் ஜி.ஏ.டி.டி கைச்சாத்தானது, $10 பில்லியன் பெறுமதியான வணிகத்தின் மீது தாக்கம் கொண்ட 45,000 கட்டணச் சலுகைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அன்னெசி ஏப்ரல் 1949 5 மாதங்கள் 13 கட்டண வீதங்கள் நாடுகள் 5,000 கட்டணச் சலுகைகளைப் பரிமாறிக் கொண்டன
தோர்க்குவே செப் 1950 8 மாதங்கள் 38 கட்டண வீதங்கள் நாடுகள் 8,700 கட்டணச் சலுகைகளைப் பரிமாறிக் கொண்டன, 1948 ஆம் ஆண்டின் கட்டண வீதங்கள் 25% குறைக்கப்பட்டன
செனீவா II சனவரி 1956 5 மாதங்கள் 26 கட்டண வீதங்கள், சப்பானின் அநுமதி $2.5 பில்லியன் கட்டண வீதக் குறைப்புகள்
தில்லான் செப் 1960 11 மாதங்கள் 26 கட்டண வீதங்கள் உலக வணிகத்தில் $4.9 பில்லியன் பெறுமதியான கட்டண வீதச் சலுகைகள்
கென்னடி மே 1964 37 மாதங்கள் 62 கட்டண வீதங்கள், Anti-dumping உலக வணிகத்தில் $40 பில்லியன் பெறுமதியான கட்டண வீதச் சலுகைகள்
டோக்கியோ செப் 1973 74 மாதங்கள் 102 கட்டண வீதங்கள், கட்டணமல்லாத நடவடிக்கைகள், "கட்டமைப்பு" உடன்பாடுகள் $300 பில்லியன் கட்டண வீதக் குறைப்புகள்
உருகுவே செப் 1986 87 மாதங்கள் 123 கட்டண வீதங்கள், கட்டணமல்லாத நடவடிக்கைகள், விதிகள், சேவைகள், அறிவுசார் சொத்து, பிணக்குத் தீர்வு, ஆடைகள், வேளாண்மை, உலக வணிக மைய உருவாக்கம், போன்றன இச் சுற்று உலக வணிக மையத்தின் உருவாக்கத்துக்கு வித்திட்டது, வணிகப் பேச்சுவார்த்தை எல்லைகளை விரிவாக்கியது, கட்டண வீதங்களும் (ஏறத்தாழ 40%) வேளாண்மைக்கான மானியங்களும் பெருமளவு குறைந்தன, வளர்முக நாடுகளின் ஆடை வகைகளுக்கான முழு அணுக்கம், அறிவுசார் சொத்துரிமைகளின் விரிவாக்கம் என்பன.
தோகா நவ 2001 ? 141 கட்டண வீதங்கள், கட்டணமல்லாத நடவடிக்கைகள், வேளாண்மை, தொழிலாளர் தரப்பாடுகள், சூழல், போட்டி, முதலீடு, transparency, உரிமங்கள் முதலியன சுற்று இன்னும் நிறைவு அடையவில்லை.

அன்னெசி சுற்றுப்பேச்சு - 1949

தொகு

இந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் 1949 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள அன்னெசி என்னும் நகரில் இடம்பெற்றது. 13 நாடுகள் இதில் பங்கேற்றன. ஏறத்தாழ 5000 வரிகளைக் குறைப்பதே இப்பேச்சுக்களின் முக்கியமான நோக்கமாக இருந்தது.

தோர்க்குவே சுற்றுப்பேச்சு - 1951

தொகு

மூன்றாவது சுற்றுப்பேச்சுக்கள் இங்கிலாந்தில் உள்ள தோர்க்குவே என்னும் இடத்தில் இடம்பெற்றது. 38 நாடுகள் இதில் பங்கேற்றன. 8,700 கட்டண வீதச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் எஞ்சிய கட்டண வீதங்கள் 1948 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 3/4 பங்கு அளவுக்குக் குறைந்தது.

செனீவாச் சுற்றுப்பேச்சு - 1955-1956

தொகு

நான்காவது சுற்றுப்பேச்சுக்கள் மீண்டும் செனீவா நகரில் இடம்பெற்றன. 26 நாடுகள் கலந்துகொண்டன. 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கட்டணவீதங்கள் இல்லாமல் செய்யப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன.

திலோன் சுற்றுப்பேச்சு - 1960-1962

தொகு

இந்த ஐந்தாவது சுற்றுப் பேச்சுக்களும் 1960 தொடக்கம் 1962 ஆம் ஆண்டு வரை செனீவாவிலேயே நடைபெற்றன. ஐக்கிய அமெரிக்காவின் நிதிச் செயலாளரும், முன்னைய உள்நாட்டுத் துணைச் செயலாளருமான டக்ளசு திலோனின் பெயரைத்தழுவியே இச் சுற்று திலோன் சுற்று என அழைக்கப்பட்டது. 26 நாடுகள் இப்பேச்சுக்களில் கலந்துகொண்டன. 4.9 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கட்டணவீதக் குறைப்புகள் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டது.

கென்னடி சுற்றுப் பேச்சு - 1964 - 1967

தொகு

62 நாடுகள் கலந்து கொண்ட இச் சுற்றுப் பேச்சுக்களில், கட்டண வீதங்களில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான சலுகைகள் வழங்க இணக்கம் காணப்பட்டது.

டோக்கியோ சுற்றுப்பேச்சு - 1973 - 1979

தொகு

இச் சுற்றுப் பேச்சுக்களில் 102 நாடுகள் பங்கேற்றன. இப் பேச்சுக்களின்போது, கட்டணவீதக் குறைப்புக்களுடன், கட்டணவீதங்கள் அல்லாத பிற தடைகளையும், தன்னார்வமான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நோக்கிலான நெறிமுறைகளும் வகுக்கப்பட்டன. 190 அமெரிக்க டாலர்கள் பெறுமதி வாய்ந்த சலுகைகள் வழங்கப்பட்டன.

உருகுவே சுற்றுப்பேச்சு - 1986 - 1993

தொகு

உருகுவே சுற்றுப்பேச்சு 1986 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதுவரையில் நடந்த சுற்றுக்களில் பெரிய முன்னேற்றங்களை நோக்கமாகக் கொண்டு நடந்த சுற்று இதுவே. இவ்வொப்பந்தத்தின் செயற்பாட்டை சேவைகள், முதல், அறிவுசார் சொத்து, புடவை, வேளாண்மை போன்ற பல புதிய முக்கியமான துறைகளுக்கும் விரிவுபடுத்துவதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 123 நாடுகள் இச்சுற்றுப் பேச்சுக்களில் கலந்து கொண்டன.

குறிப்புக்கள்

தொகு
  1. a)The GATT years: from Havana to Marrakesh, உலக வணிக அமைப்பு
    b)காலக்கோடு: உலக வணிக அமைப்பு – முக்கிய நிகழ்வுகளின் காலவரிசை, பிபிசி செய்தி
    c)Brakman-Garretsen-Marrewijk-Witteloostuijn, Nations and Firms in the Global Economy, Chapter 10: Trade and Capital Restriction