வரைவின் மகளிர்

பொதுமகளிரைத் திருவள்ளுவர் ‘வரைவின் மகளிர்’ எனக் குறிப்பிடுகிறார். [1] வரைவு என்னும் சொல் ஒருவன் ஒருத்தி என்று வரையறை செய்துகொள்ளும் (வரைந்துகொள்ளும்) திருமணத்தை உணர்த்தும். திருமணம் செய்துகொள்ளாமல் கட்டுப்பாடின்றிக் காசுக்காகத் தன் உடலின்பத்தை விற்கும் மகளிர் வரைவின் மகளிர்.

இருமனப் பெண்டிர், பண்பில் மகளிர், பிறர் நெஞ்சில் பேணிப் புணர்பவர், புன்னலம் பாரிப்பார், பொதுப்பெண்டிர், பொதுநலத்தார், பொருள் விழையும் ஆய்தொணியார், பொருட் கொருளாளர், மாய மகளிர், வரைவிலா மாணிழையார் என்றெல்லாம் திருக்குறள் குறிப்பிடும் தொடர்கள் இவர்களது பண்பைப் புலப்படுத்துகின்றன.

இவர்களைப் பரத்தையர் என்றும் கூறுவர். பரம் என்னும் பரம்பொருள் எல்லாருக்கும் உரியது. பரத்தன், பரதர், பரத்தை என்னும் சொற்கள் வரையறுத்துக்கொண்ட ஒழுக்கம் இல்லாதவராய் பரந்துபட்ட ஒழுக்கம் பூண்டு வாழ்பவரை உணர்த்துவன.

இவர்களைப் பொதுமகன் பொதுமகள் என்னும் சொற்களாலும் குறிப்பிடுவர்

சொல் விளக்கம்

தொகு

பொதுமகளிர் என்னும் சொல்லோடு தொடர்புடைய சில சொற்களின் விளக்கம்

  • பரத்தமை [2] – பரத்தமைத் தொழில்
  • பரத்தைமை [3] – பரத்தைமைத் தொழில்
  • பரத்தன் [4] – பரந்துபட்ட ஒழுக்கம் உடையவன்
  • பரத்தர் [5] – பரந்துபட்ட ஒழுக்கமுடைய இளைஞர்கள்
  • பரத்தை [6] – பரந்துபட்ட ஒழுக்கம் உடையவள்
  • கணிகையர் [7] – காலம் கணித்த ஒழுக்கத்தால் காணம் கொடுப்போருக்கு உடலின்பத்தை விற்கும் கலையரசி
  • காமக்கிழத்தி [8] - காமம் துய்க்க உரிமையாக்கிக்கொள்ளப்பட்ட பெண்
  • காமக்கிழத்தியர் – காமம் துய்க்க உரிமையாக்கிக்கொள்ளப்பட்ட மகளிர் [9]
    • ஒத்த கிழத்தியர் – தானும் தன் மனைவியும் போன்று ஒத்த குலத்தில் தலைவன் தனக்கென உரிமையாக்கிக்கொள்ளப்பட்டவள்
    • இழிந்த கிழத்தியர் – தலைவனால் உரிமையாக்கிக் கொள்ளப்பட்ட அவனினும் தாழ்ந்த குலத்து மகள்
    • வரையப்பட்டோர் – தலைவனால் உரிமையாக்கிக் கொள்ளப்பட்ட கணிகையர் மகள்

வாழ்வியல்

தொகு

குற்றத்துக்குத் தண்டனை

தொகு
  • பொதுமகளிர் குற்றம் புரிந்தால், குற்றம் புரிந்த விலைமகளின் தலையில் ஏழு செங்கல்களை ஏற்றி ஊரைச் சுற்றி அழைத்து வருதல் அக்கால வழக்கம். [10] மதுரையில் குற்றம் சுமத்தப்படாத வரைவின் மகளிர் வாழ்ந்தனர். மன்னர்களும் தம் மனையில் ஒடுங்கிக் கிடக்கும் பெருமித வாழ்க்கையோடு வாழ்ந்தனர். [11]

கலைத் தேர்ச்சி

தொகு
  • அவர்கள் 64 வகையான கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். மதுரையில் அவர்கள் வாழ்ந்த தெரு தனியே இருந்தது [12]

அடிக்குறிப்பு

தொகு
  1. திருக்குறள் அதிகாரம் 92
  2. நற்றிணை 280
  3. தொல்காப்பியம் கற்பியல் 17
  4. அகநானூறு 146
  5. சிலப்பதிகாரம் 5-200
  6. தொல்காப்பியம் கற்பியல் 37
  7. சிலப்பதிகாரம் 5-50
  8. தொல்காப்பியம் கற்பியல் 5-49
  9. தொல்காப்பியம் கற்பியல் 10-ம் நூற்பாவுக்கு, தொல்காப்பியத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் பின்னர் தோன்றிய இலக்கணநில் நம்பி அகப்பொருள் விளக்கம் என்னும் நூலின் வழியே, தொல்காப்பியத்துக்கு 1500 ஆண்டுகள் பின்னரும், நம்பி அகப்பொருள் விளகம் நூலுக்கு 500 ஆண்டுகள் பின்னரும் வாழ்ந்த இளம்பூரணர் கண்ட விளக்கம்
  10. "மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப், பொற்றேர்க் கொண்டு போதே னாகிற், சுடும ணேற்றி யாங்குஞ்சூழ் போகி, வடு வொடு வாழு மடந்தையர் தம்மோ, டனையே னாகி யரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினள்" - சித்திராபதி கூற்று - மணிமேகலை - 18 உதயகுமரன் அம்பலம் புக்க காதை
  11. சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை, - சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை
  12. வேத்தியல், பொதுவியல் என இரு திறத்து, மாத்திரை அறிந்து, மயங்கா மரபின் ஆடலும், வரியும், பாணியும், தூக்கும், கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து, நால் வகை மரபின் அவினயக் களத்தினும் ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பு-அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்; வாரம் பாடும் தோரிய மடந்தையும்; தலைப் பாட்டுக் கூத்தியும்; இடைப் பாட்டுக் கூத்தியும்; நால் வேறு வகையின் நயத்தகு மரபின் எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு முட்டா வைகல் முறைமையின் வழாஅத் தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு, ஆங்கு, அரும் பெறல் அறிவும் பெரும்பிறிது ஆக, தவத்தோர் ஆயினும், தகை மலர் வண்டின் நகைப் பதம் பார்க்கும் இளையோர் ஆயினும், காம விருந்தின் மடவோர் ஆயினும், ஏம வைகல் இன் துயில் வதியும் பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல் எண்-எண் கலையோர் இரு பெரு வீதியும்- சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைவின்_மகளிர்&oldid=3327178" இலிருந்து மீள்விக்கப்பட்டது