வலையப்பட்டி (நாமக்கல்)

(வலையப்பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வலையப்பட்டி: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம், மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றூர். நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பதின்மூன்றாவது கல் தொலைவில் இவ்வூர் உள்ளது. பட்டி என்பது ஊர்ப்பெயர்ப் பொதுக்கூறு ஆகும். வலையர் என்னும் மீனவர் சாதிப் பெயர் சிறப்புக்கூறாக உள்ளது. தற்போது இங்கு முத்துராஜா என்னும் வலையர் சாதியினர் வசிக்கின்றனர். சிலர் 'வளையப்பட்டி' என்றும் எழுதுகின்றனர். வளைந்து செல்லும் பாதைகளைக் கொண்டிருந்த காரணத்தால் இப்பெயர் வந்திருக்கலாம் எனவும் வளையல்காரர் என்னும் பிரிவினர் வசித்த காரணத்தால் இப்பெயர் உருவாகி இருக்கலாம் எனவும் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

முத்துராஜா , ரெட்டியார், பள்ளர், மாவிலர் ஆகிய சாதியினர் மிகுதியாகவும் சோழிய வேளாளர், கொங்கு வேளாளர், குறும்பக் கவுண்டர், செட்டியார், அய்யர் முதலிய சாதியினர் குறைவான எண்ணிக்கையிலும் இவ்வூரில் வசிக்கின்றனர்.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியும் அரசு மேல்நிலைப்பள்ளியும் இங்கு உள்ளன. கலைமகள் நர்சரிப் பள்ளி என்னும் தனியார் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகியவை இயங்குகின்றன.

கரைபோட்டான் ஆறு என்னும் ஆறு இவ்வூர் வழியாக ஓடுகிறது. தாய்மார் குட்டை என்னும் குட்டை ஒன்றும் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை கூடும் இவ்வூர்ச் சந்தை மிகவும் சிறப்பானது. வெங்காய வணிகம் இச்சந்தையின் விற்பனையில் முக்கிய இடம் பெறுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை மூன்று மணி நேரம் நடைபெறும் நாட்டுக்கோழிச் சந்தையும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியின் முக்கியத் தொழில் உழவு. வெங்காய சாகுபடி மிகுதி.

இங்குள்ள குன்னிமரக் கருப்பனார் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோயிலுக்குக் குதிரை நேர்ந்துவிடல் முக்கியமான வேண்டுதலாகும். அவ்வாறு நேர்ந்துவிட்ட குதிரைகளை ஊருக்குள் பரவலாகக் காணலாம். மாரியம்மன், செல்லாயி, பகவதி அம்மன் ஆகிய பெண் தெய்வக் கோயில்களும் இங்குள்ளன. சற்றே பழமையான பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.

தவில் வாசிப்பில் புகழ்பெற்ற வித்வான் 'வலையப்பட்டி சுப்பிரமணியம்' இவ்வூரைச் சேர்ந்தவர் அல்லர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டியைச் சேர்ந்தவர். வலையப்பட்டி என்னும் பெயரில் தமிழகத்தில் பல ஊர்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலையப்பட்டி_(நாமக்கல்)&oldid=4158682" இலிருந்து மீள்விக்கப்பட்டது