வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/14
திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். தீமீத்ரி மென்டெலீவ் ரஷ்யாவின் சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பெப்ரவரி 8, 1834 இல் இவான் பவ்லோவிச் மென்டெலீவ் மற்றும் மரீயா திமீத்ரியெவ்னா மென்டெலீவா என்பவருக்கும் 17வது கடைசி மகவாகப் பிறந்தார். 13வது வயதில் தந்தை காலமானார். தாயாரின் தொழிற்சாலை தீயில் எரிந்து அழிந்தது. வறுமையீல் வாடிய மென்டெலீவின் குடும்பம் 1849 ஆம் ஆண்டில் சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு 1850ம் ஆண்டில் திமீத்ரி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். அப்போது மெண்டெலீவுக்கு காசநோய் பீடித்ததால் 1855 இல் கருங்கடல் பகுதியில் உள்ள கிரிமியாவுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. முற்றாக நோய் குணமானதும் மீண்டும் 1857 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார். 1869 இல் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியல் கழகத்தில் தான் தயாரித்த ஆவர்த்தன அட்டவணை சமர்ப்பித்தார். இந்த அட்டவணையில் அப்போது பல கண்டிபிடிக்கப்படாத மூலகங்களின் இயல்புகளையும் எதிர்வு கூறி அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார். மென்டெலீவ் இவ்வட்டவணைய வெளிப்படுத்திய சில மாதங்களின் பின்னர் ஜெர்மனியின் ஜூலியஸ் மேயர் என்பவர் அதே மாதிரியான அட்டவணையை அறிவித்தார்.