வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்
பயன்பாடு
தொகுஅறிவியலாளர்கள் துனைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/வடிவமைப்பு.
அறிவியலாளர்கள்
தொகுவலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/1
டான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர் எனப்படும் பாலசந்திர சகிங்கல் சேகர் மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வடிவத்திற்கு மாற்றியவர். 'நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை' என்று போற்றப்படுகிறவர். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்து பின்னர் அதன் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர், முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர். அதனை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர். இயற்கை ரப்பர் தொழில்துறையில் புரட்சிகளைச் செய்தவர். இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதிய தர ரப்பர் முறைமையை அமைத்துக் கொடுத்தவர். பி. சி. சேகர் 1929, நவம்பர் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார்.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/2
ரோசலிண்ட் பிராங்க்ளின் (1920-1958) இலண்டனைச் சேர்ந்த அறிவியலாளர். உயிரியற்பியல் அறிஞர், வேதியியலாளர், மூலக்கூற்று உயிரியல் மற்றும் எக்சு கதிர் படிக வரைவி நிபுணர் எனப் பலவகைத் துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். மரபணு, வைரசு, நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றியவர். பிராங்க்ளின் 1951-1953 ஆம் ஆண்டு வரை மரபணு ஆய்வில் ஈடுபட்டு மரபணுவின் பதிப்பை எக்சு கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் படம் பிடித்தார். வாட்சன், கிரிக் ஆகிய இருவரும் மரபணு வடிவத்தைக் கண்டறியும் ஆய்வில் அப்போது ஈடுபட்டிருந்தனர். மரபணு இழை சுருள் வடிவம் கொண்டது என்பதனை மெய்ப்பிக்க மிகச் சிறந்த ஆதாரம் பிராங்க்ளின் எடுத்த படமே என அவர்கள் உணர்ந்தனர். அதனைப் பயன்படுத்தி அவர்களின் ஆய்வைத் தொடர்ந்தனர். இந்த ஆய்வுகளில் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாட்சன், கிரிக், வில்கின்சு ஆகியோருக்கு பின்னால் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/3
கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர்முறைக்கும் அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். திணை, வகுப்பு, வரிசை, பேரினம், இனம் என படிநிலைகள் இவரது வகைப்பாட்டில் அமைந்திருந்தன. திணைகள் மேலும் தாவரங்கள்), விலங்குகள் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/4
நிக்கோலாசு கோப்பர்னிக்கசு (1473-1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். புரட்சிகரமான சூரியமையக் கொள்கையை வகுத்துத் தந்து வானவியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். பூமி யை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றி சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கிரேக்க நாட்டின் சிறந்த வானவியல் அறிஞரான டாலமி கி.பி. 140-ல் புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை. பின்பு அரிஸ்ட்டாட்டில் என்ற கிரேக்க வானவியலாளர், புவி உட்பட அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார், ஆனால் இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு முரணானது என அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவர் போலந்தில் பிறந்தவர். சிலர் இவர், செருமானிய வம்சாவளியைச் சேர்ந்த போலந்து நாட்டவர் என்று கருதுகிறார்கள்.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/5
யோசெப் நிசிபோர் நியெப்சு (1765-1833) என்ற பிரான்சியர் ஒளிப்படத்தைக் கண்டுபிடித்தவர் என்ற வகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1820களின் தொடக்கத்தில் உலகின் முதல் சில ஒளிப்படங்களை எடுத்தவர் என்ற வகையிலும் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிபைப் போலவே இவரும் ஒரு புரட்சியாளர். எனினும், இன்றும் இவர் அதிகம் அறியப்பட்டவராக இல்லை. 1825 இல், ஒரு மனிதனையும் குதிரையொன்றையும் காட்டும் ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்ததன் மூலம் இவர் ஒளிப்படமொன்றை எடுத்த உலகின் முதலாவது நபர் ஆனார். 1829 முதல் இவர் லூயிசு டாகுவேரே என்பவருடன் சேர்ந்து ஒளிப்பட வழிமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினர். 1833 இல் நியேப்சு இறந்த பின்னர் டாகுவேரே தொடர்ந்தும் சோதனைகளில் ஈடுபட்டு டாகுவேரியோவகை என்ற புதிய முறையைக் கண்டுபிடித்து பிரான்சு அரசுக்கு விற்றார். நியெப்சு 1825 ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் 2002 இல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/6
பிலைசு பாஸ்கல் (1623-1662) ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் மெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கணித உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும் உய்த்தறிதல் முறையும், கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் நிகழ்தகவு என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான். 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார். இதைத் தவிர தனது 16வது அகவையில் வடிவவியலிலும் பாஸ்கல் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் SI அலகும், கணினி மொழி ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/7
லுட்விக் போல்ட்சுமான் (1844–1906) ஒரு ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் படிப்பைத் தொடர்ந்து, 1866 இல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார். அணு மற்றும் அணுத்துகள் மீது தான் போல்ட்ஸ்மேனின் முழு கவனமும் இருந்தது. 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் பகிர்வு', 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் புள்ளிவிவரம்' ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைகளாகத் திகழ்ந்து கொண்டிருகின்றன. நகர்ந்து கொண்டிருக்கும் வாயுக்கள் மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துக்கான சமன்பாட்டினை வரையறுத்து தந்தார். போல்ட்சுமான் கண்டறிந்து அறிவித்த இத்தகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/8
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/9
கலிலியோ கலிலி ஒரு இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் அறிஞர், மற்றும் தத்துவ ஞானி. இவர் அறிவியல் புரட்சியில் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளார். அவரது சிறந்த சாதனைகள் தொலைநோக்கியின் மேம்படுத்துதல், மற்றும் அதன் விளைவாக நடத்திய வானியல் ஆய்வுகள் மற்றும் கோபர்நிகசியத்தை மேம்படுத்துதல் ஆகியவை ஆகும்.கலிலியோ "நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை" "நவீன இயற்பியலின் தந்தை", "அறிவியலின் தந்தை", மற்றும் "நவீன அறிவியலின் தந்தை என்று பெருமையாக அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு பரிமாணங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டுபிடித்தல், மற்றும் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளியை ஆராய்தல் ஆகியவை வானியலுக்கு இவரளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலிலியோ பயனுறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வேலை செய்து ஒரு மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி மற்றும் பிற கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/10
மேரி க்யூரி புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார். கதிரியக்கம், கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள், மற்றும் இரண்டு கூறுகள்-புளோனியம் மற்றும் ரேடியம் ஆகியனவற்றை கண்டுபிடித்தல் இவரது சாதனைகளுள் முதன்மையானவை. கியூரி ஆண்டாண்டு காலாமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் அப்பிலாஸ்டிக் இரத்த சோகையால், 1934 ல் இறந்தார்.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/11
சுப்பிரமணியன் சந்திரசேகர் வானியல்-இயற்பியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியான் லாகூரில் சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் பிறந்தவர். இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகளும் (ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, மற்றும் சுந்தரி) மூன்று சகோதரர்களும் (விசுவநாதன், பாலகிருஷ்ணன், மற்றும் ராமநாதன்). லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது. ஐக்கிய அமெரிக்கா, சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர் விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1937 இலிருந்து 1995 இல் இறக்கும் வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் 1953இலிருந்து ஐக்கிய அமெரிக்கக் குடிமகனாவார்.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/12 அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1988 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/13
பெஞ்சமின் பிராங்கிளின் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர், எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர். இளம் வயதில் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர். 'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான தன்வரலாற்று நூல்களுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும்(bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்சுக்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/14
திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். தீமீத்ரி மென்டெலீவ் ரஷ்யாவின் சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பெப்ரவரி 8, 1834 இல் இவான் பவ்லோவிச் மென்டெலீவ் மற்றும் மரீயா திமீத்ரியெவ்னா மென்டெலீவா என்பவருக்கும் 17வது கடைசி மகவாகப் பிறந்தார். 13வது வயதில் தந்தை காலமானார். தாயாரின் தொழிற்சாலை தீயில் எரிந்து அழிந்தது. வறுமையீல் வாடிய மென்டெலீவின் குடும்பம் 1849 ஆம் ஆண்டில் சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு 1850ம் ஆண்டில் திமீத்ரி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். அப்போது மெண்டெலீவுக்கு காசநோய் பீடித்ததால் 1855 இல் கருங்கடல் பகுதியில் உள்ள கிரிமியாவுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. முற்றாக நோய் குணமானதும் மீண்டும் 1857 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார். 1869 இல் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியல் கழகத்தில் தான் தயாரித்த ஆவர்த்தன அட்டவணை சமர்ப்பித்தார். இந்த அட்டவணையில் அப்போது பல கண்டிபிடிக்கப்படாத மூலகங்களின் இயல்புகளையும் எதிர்வு கூறி அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார். மென்டெலீவ் இவ்வட்டவணைய வெளிப்படுத்திய சில மாதங்களின் பின்னர் ஜெர்மனியின் ஜூலியஸ் மேயர் என்பவர் அதே மாதிரியான அட்டவணையை அறிவித்தார்.
வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/15
ஹிடேகி யுகாவா ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர். அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும், எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தவர். இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். ஜப்பான் நாட்டில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்ற அறிஞர். ஹிடேகி 1907 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை 'டகுஜி ஒகாவா' என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர் கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார்.1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார்.1938-ல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது.1947-லிருந்து ஆதாரத் துகள்களின் பொதுக் கொள்கை அடிப்படையில் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1948-ல் அமெரிக்காவிலும்] 1949 முதல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் பேராசிரியராக செயல்பட்டார்.
முன்மொழிதல்
தொகுஇந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்கள் பற்றிய கட்டுரைத் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.
- தற்போது எதுவும் இல்லை.