வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/3

கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர்முறைக்கும் அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். திணை, வகுப்பு, வரிசை, பேரினம், இனம் என படிநிலைகள் இவரது வகைப்பாட்டில் அமைந்திருந்தன. திணைகள் மேலும் தாவரங்கள்), விலங்குகள் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.