அறிவியல் என்பது பொதுவாக அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் முறைப்படி அணுகி யாரும் சரிபார்த்து உறுதி செய்யும் வண்ணம் உண்மைகளைக் கண்டு நிறுவப்பெறும் அறிவுத்துறையாகும். இது பெரும்பாலும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. இயற்கையில் உள்ள புறபொருட்களின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பற்றியதை, இயற்கைப்பொருள் அறிவியல் என்றும், மக்கள் குழுமங்கள், வாழ்க்கை, அரசியல், மொழியியல் முதலியன குமுக அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்றும் பிரிக்கப்படுகின்றது. அறிவியலை அடிப்படைத் தூய அல்லது தனி அறிவியல் என்றும் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் என்றும் பிரிப்பதும் உண்டு. கணிதவியலை இயற்கைப்பொருள் அறிவியலில் ஒரு உட்துறையாகக் கருதுவோரும் உண்டு, அதனைத் தனியானதொரு அடிப்படை அறிவியல் துறையாகக் கொள்வாரும் உண்டு.
சந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால்2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. பின்னர், விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருந்தது. இப்பணித்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்
படத்தில் இயற்கையில் எங்கும் காணப்படும் மின்காந்த நிறமாலை காட்டப்பட்டுள்ளது. இதில் முறையே இடமிருந்து வலமாக அனைத்தும் அலைநீளத்தினை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, காமா கதிர்வீச்சு, எக்ஸ் கதிர்கள், புறவூதாக்கதிர்கள், கட்புலனாகும் ஒளி, அகச்சிவப்புக் கதிர்கள், ரேடியோ அலைகள் ஆகும். இவை இவற்றின் அலைநீளத்தைப் பொறுத்துப் பல்வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
நிக்கோலாசு கோப்பர்னிக்கசு (1473-1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். புரட்சிகரமான சூரியமையக் கொள்கையை வகுத்துத் தந்து வானவியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். பூமி யை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றி சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கிரேக்க நாட்டின் சிறந்த வானவியல் அறிஞரான டாலமி கி.பி. 140-ல் புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை. பின்பு அரிஸ்ட்டாட்டில் என்ற கிரேக்க வானவியலாளர், புவி உட்பட அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார், ஆனால் இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு முரணானது என அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவர் போலந்தில் பிறந்தவர். சிலர் இவர், செருமானிய வம்சாவளியைச் சேர்ந்த போலந்து நாட்டவர் என்று கருதுகிறார்கள்.
... 1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான சோசப்பு பிரீசிட்லிஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.