வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை

பயன்பாடு‎

தொகு

அறிவியல் சிறப்புக் கட்டுரை துனைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு.

Selected articles list

தொகு

வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/1

நோபெல் பரிசு அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயிலின்படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும்.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/2

சோடியம் ஒரு தனிமம் ஆகும். சோடாவிலிருந்து பெறப்பட்டதால் இது 'சோடியம்' எனப் பெயர் பெற்றது. இதன் குறியீடு Na. இதன் அணு எண் 11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம் கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்குத் தேவையான ஒரு முக்கியக் கனிமம் ஆகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய தனிமங்களுள் ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியத்திற்கு அடுத்து சோடியம் ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது. நிறையின் அடிப்படையில் 2.83 விழுக்காடு சோடியம் செறிவுற்றுள்ளது. இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப்படுவதில்லை. உப்புகளாகவே கிடைக்கின்றது. உப்புப் பாறையாக பூமியில் பல இடங்களில் கிடைக்கிறது. பல உப்பு நீர் ஏரிகளிலும், சுனை, ஊற்றுகளிலும் கூட சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது. 1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்பிரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார்.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/3

மின்காந்தம் என்பது மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் ஆகும். இதில் மின்னோட்டம் நிறுத்தப்படும்போது காந்தப்புலம் மறைந்துவிடும். தானியங்கிகள், மின்பிறப்பாக்கிகள், அஞ்சல் சுற்றுக்கள், ஒலிபெருக்கிகள், வன்வட்டுக்கள், காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள், அறிவியல் கருவிகள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு துணை அங்கமாகவும் கைத்தொழிற் துறையில் அதிக எடை கொண்ட இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. கம்பியொன்றில் பாயும் மின்னோட்டமானது அக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது. காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில் கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும்.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/4

இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இசுரோ இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இசுரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். 1975 இல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இசுரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ்.எல்.வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனைய துணைக்கோள் ஏவுகலம் மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க ஜி.எச்.எல்.வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இசுரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/5 மனிதக் கூர்ப்பு எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஒரு உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக ஓமோ பேரினத்தின் கூர்ப்பு வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது ஒமினிட்டுகளின் ஒரு இனமாக ஓமோ சப்பியென்சுகளின் தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதக் கூர்ப்பு குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் இயற்பிய மானிடவியல், உயர்விலங்கினவியல், தொல்லியல், மொழியியல், மரபியல் என்பன அடங்குகின்றன. உயர்விலங்கினக் கூர்ப்பு, மரபியல் ஆய்வுகளின்படி, பிந்திய கிரத்தேசியசுக் காலத்தில் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும், புதைபடிவப் பதிவுகளின்படி பலியோசீன் காலத்துக்குப் பிற்படாமல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் தொடங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். 2.3-2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில், இறுதிப் பொது மூதாதையான ஒமினினி, ஆசுத்திராலோபித்தசினெசுச் சிற்றினம் என்பவற்றிலிருந்து நவீன மனித இனம் கூர்ப்படைந்தது.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/6

டைனமைட்டு என்பது நைட்ரோகிளிசரின் என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள், மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,செருமனி) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் ஆற்றலுடன் தொடர்புடையது என பொருள்படும் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/7

சுரோடிங்கரின் பூனை என்பது ஆஸ்திரிய இயற்பியலாளரான எர்வின் சுரோடிங்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனை ஆகும். முரண்படுதோற்றம் கொண்ட இச் சோதனை 1935 இல் முன்வைக்கப்பட்டது. குவாண்டம் பொறிமுறை தொடர்பான கோப்பன்கேகன் விளக்கத்தை அன்றாடப் பொருள்கள் தொடர்பில் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இச் சோதனை எடுத்துக்காட்டுகிறது. இச் சோதனையில் இறந்திருக்கலாம் அல்லது இறவாமல் இருக்கலாம் என்னும் நிலையில் ஒரு பூனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள பூனை ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் நீரில் ஐதரோசயனைடு (HCN) கரைந்த ஐதரசசயனைடியக் காடியானது மூடிய ஒரு குழல்குப்பியில் உள்ளது. இக் காடி வெளி வந்தால், அதில் இருந்து வரும் வளிமம் அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும்.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/8

காட்சிக்குட்பட்ட பேரண்டம் என்பது பெருவெடிப்பு கோட்பாட்டில் மனிதர்களால் காணப்படக்கூடிய விண்மீன் பேரடைகளையும் அவை சார்ந்த பருப்பொருட்களையும் குறிக்கும். பொதுவாகப் பேரண்டம் என்றால் காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும் ஆற்றல், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி ஆகியவை அனைத்தும் உள்ளடங்கும். அண்டத்தின் எல்லையைப் பால்வழி மையத்திலிருந்து 1,00,008 கோடி ஒளியாண்டுகள் என வைத்துக்கொண்டால், அதில் பால் வழி மையத்திலிருந்து 4,650 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து மட்டுமே ஒளி மானிடரை வந்தடைந்திருக்கிறது. மீதமுள்ள முழு பகுதிகளையும் காண மானிடர்களுக்கு மேலும் 95,358 ஆண்டுகள் (1,00,008-4,650) ஆகும். ஒளி வந்தடைந்த பகுதிகள் காட்சிக்குட்பட்ட பேரண்டம் எனப்படும். காட்சிக்குட்பட்ட பேரண்டம் பால் வழி மையத்திலிருந்து எந்தக் கோணத்தில் பார்த்தாலும் குறைந்தது 1,400 கோடி புடைநொடி தூரத்தினைக் கொண்டிருக்கும். இதன் கொள்ளளவு 3.5 × 1080 கனசதுர மீட்டர்கள்.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/9

விண்மீன்கள் உருவாக்கம் என்பது அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் சுருங்கி அடர்த்தியாகி மின்மப் பந்து போன்ற ஒரு அமைப்பைப் பெறுதல் ஆகும். நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வாயுக்கள் என்பன மூலக்கூற்று முகில்களில் காணப்படுகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய விண்மீன்கள் குறைந்த ஆயுட்காலமும் பெரிய விண்மீன்கள் கூடிய ஆயுட்காலமும் கொண்டுள்ளன. சுருள் விண்மீன் திரள் போன்ற பால் வழியில் விண்மீன்கள், விண்மீன் துகள்கள், கூறுகள் போன்றவை காணப்படுகின்றன. இவைகளுக்கு இடையே உள்ள முகில்கள் தம்மகத்தே ஐதரசன், ஈலியம் போன்ற வளிமங்களைக் கொண்டுள்ளன, மிகவும் அடர்த்தியாக உள்ள இத்தகைய நிலை வான்புகையுரு என அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே விண்மீன்கள் உருவாகுகின்றன. இங்கு பெரும்பான்மையான ஐதரசன் மூலக்கூற்றுவடிவில் காணப்படுவதால் மூலக்கூற்று முகில்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சுழன்று கொண்டிருக்கும். எல்லா விண்மீன்களும் மூலக்கூற்று முகில்களில் இருந்தே தோன்றுகின்றன.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/10

சந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. பின்னர், விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருந்தது. இப்பணித்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/11

ஒளிமின் விளைவு (photoelectric effect) என்பது மாழை (உலோகம்) போன்ற ஒரு பொருள் மீது குறிப்பிட்ட அலைநீளங்கள் கொண்ட ஒளி அல்லது மின்காந்த அலைகள் விழுதால், அப்பொருளில் இருந்து எதிர்மின்னிகள் வெளியேறும் என்னும் விளைவாகும். இவ் விளைவைக் கண்டுபிடித்தவர் ஐன்றிக் ஏர்ட்ஃசு (Heinrich Hertz) என்பவர். நியூட்டனிய இயற்பியல் கொள்கைகளின்படி இவ்விளைவை விளக்க இயலாதநிலையில் இவ்விளைவை ஆல்பர்ட் ஐன்சுட்டைன் குவாண்டம் இயல்பியல் கொள்கைகளின் படி விளக்கியதற்காக அவருக்கு 1921 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. வெளியேறும் எதிர்மின்னிகளை (இலத்திரன்களை) ஒளியுந்து இலத்திரன்கள் (photoelectrons) என அழைக்கப்பட்டன. அத்துடன் ஒளிவிலகல், ஒளிச்சிதறல், விளிம்பு விளைவு (Diffraction) போன்றவற்றை விளக்கும் அலை-துகள் இருமை ஆகியவையும் விளக்க இவ்விளைவின் அறிவு உதவியது.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/12

சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் (Osmosis) எனப்படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் (கரையத்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (semi-permeable membrane) ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, கரைப்பானை (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, சக்திப் பிரயோகமின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும். இந்த சவ்வூடு பரவலின்போது வெளியேறும் சக்தியானது வேறு தொழிற்பாடுகளில் பயன்படுத்தப் படலாம்.சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் (solution) இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அமுக்கமே சவ்வூடு பரவல் அமுக்கம் எனப்படும்.உயிரினங்களில் இருக்கும் இவ்வகை சவ்வுகள் மாப்பொருள் (polysaccharides) போன்ற பெரிய மூலக் கூறுகளை ஊடுசெல்ல விடாதவையாகவும், நீர், மேலும் ஏற்றங்களற்ற சிறிய மூலக் கூறுகளை உட்செல்ல விடுபனவையாகவும் இருக்கின்றன.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/13

திண்மம் என்பது இயற்பியலில்பொருள்களின் இயல்பான நான்குநிலைகளில் ஒன்றாகும். திண்மப்பொருள் என்பது திடப்பொருள் என்றும் அழைக்கப்படும். திண்மப்பொருள் தனக்கென ஓருருவம் கொண்டது. இப்பொருளில் உள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று நிலையான தொடர்பு கொண்டுள்ளன. சூழலின் வெப்பநிலையில் அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருந்தாலும், அணுக்கள் தங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் மாறுவதில்லை. ஒரு திண்மத்தில் உள்ள அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவும் ஏறத்தாழ அணுவின் விட்டத்திற்கு ஒப்பிடக்கூடியதாக (ஒப்பருகாக) இருக்கும்.ஒரு திண்மத்தில் உள்ள அணுக்கள் எம்முறையில் அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து திண்மங்கள் படிகம், பல்படிகத் திண்மம்,சீருறாத் திண்மம் என பலவாறு பகுக்கப்படுகின்றன.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/14

ஒலிபெருக்கி என்பது ஏதேனும் ஒரு வகையில் ஒலியை பெரிதாக்கி வெளிப்படுத்தும் ஒரு கருவி. பொதுவாக ஒலியலைகளை மின்னலைத் துடிப்புகளாக மாற்றி, தக்க முறைகளால் மிகைப்படுத்தி பின்பு மீண்டும் மின்னலைகளை ஏதேனும் ஒரு வகையில் ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர். ஒலி என்பது ஏதேனும் ஒன்று அதிர்வதால் அதனைச் சூழ்ந்துள்ள காற்றில் உண்டாகும் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாகின்றது. இந்த அழுத்த வேறுபாடுகள் நம் காதை அடைகின்றன. இந்த ஒலிபெருக்கிகளிலும் மெல்லிய தட்டு அல்லது தகடு போன்ற ஒரு பகுதி மேலும் கீழுமாக எழுப்ப வேண்டிய ஒலிக்கு ஏற்றாற்போல அதிரும். இப்படி அதிரச்செய்ய ஒரு நிலைக்காந்தத்தின் மீது மின்னோட்டம் செல்லும் கம்பிச்சுருள் கொண்ட மின்காந்தம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சுருள்கம்பியில் மின்னோட்டம் பாயும் பொழுது மின்னோட்டத்தின் அளவுக்கும், திசைக்கும் ஏற்றாற்போல ஏற்படும் காந்தப் புலம் நிலைக்காந்தத்தின் காந்தப்புலத்தால் வெவ்வேறு அளவில் ஈர்க்கப்பட்டும் விலக்கப்பட்டும் அசையும், இந்தச் சுருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தட்டு, தகடு அல்லது விரிகூம்பு அசைவதால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிரும் தகட்டால் ஒலி எழும்புகின்றது.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/15

ஓசோன் படை தேய்வின் விளைவுகள் என்பது புவியின் வளி மண்டலத்தில் அதிகளவை உள்ளடக்கிய ஓசோன் படையின் தேய்வினால் புவியின் சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் பிரச்சினைகளையும் குறிக்கும்.ஓசோன் படையானது படைமண்டலத்தில் உள்ள பகுதியாகும்.இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது. இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது.1974 இல் வேதியியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படையிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்வுகளின்படி UV-B கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. UV-B கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/16

நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு.சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.இத்தொழில்நுட்பம் உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றது.கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப்புற விசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM))(படம்) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் கிடைத்துள்ளன.


முன்மொழிதல்

தொகு

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் சிறப்புக் கட்டுரைகளின் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.