சீருறாத் திண்மம்
சீருறாத் திண்மம் (amorphous solid அல்லது non-crystalline solid) என்பது விரிந்த அளவில் அணுக்கள் யாதொரு சீரான அடுக்கோ அமைப்போ கொண்டிராத திண்மநிலையில் உள்ள ஒரு பொருள் ஆகும். அணுக்கள் ஒரே சீரான அடுக்குடன் அமைந்து இருந்தால் அப்பொருள் படிகம் எனப்படும். நாம் நித்தம் காணும் கண்ணாடி ஒரு சீருறாத் திண்மப் பொருள். இதே போல பீங்கானும் ஒரு சீருறாத் திண்மம். இப்பொருட்களில் அணுக்கள் எந்த சீரும் அணியும் இல்லாமல் தாறுமாறாக அமைந்து இருக்கும்.[1][2][3]
பொதுவாக ஒரு பொருள் உருகிய நிலையில் இருந்து குளிர்வடைந்து திண்மமாக மாறும் பொழுது, மிக விரைவாகக் குளிர்ச்சி அடைந்தால், அணுக்கள் எந்தவொரு சீரடுக்கமும் பெறாமல் தாறுமாறாக உறைந்துவிடும். இப்படித்தான் இச் சீருறாத் திண்மங்கள் உருவாகின்றன அல்லது ஆக்கப்படுகின்றன. உருக்கிப்பின் குளிரச் செய்துதான் சீருறாத்திண்மங்களை ஆக்க வேண்டும் என்பதிலை, பல்வேறான முறைகளில் படிவுறும் பொருட்களும் சீருறாத் திண்ம நிலையில்தான் பெரும்பாலும் இருக்கும். வெற்றிட உருளியில் ஒரு பொருளை ஆவியாக்கிப் படியச்செய்வது, மற்றும் மின்மமாக்கப்பட்ட அணுக்களை மின்னழுத்ததால் உந்துவித்துப் புதையப் பெறும் முறை ஆகிய முறைகளிலும் சீருறாத்திண்மம் உருவாகும். குளிர்வடையும் பொழுது மிக விரைவாகக் குளிர்வடைவதால், அணுக்கள் நகர்ந்து குறைந்த ஆற்றல்நிலையாகிய சீரடுக்க நிலையை அடைய நேரம் இருப்பதில்லை. அணுக்கள் சீராக அணிவகுத்து நிற்குமானால், அத் திண்மம் மிகக் குறைந்த ஆற்றல்நிலையில் இருக்கும், அணுக்கள் மிக நெருக்கமாகவும் திண்மம் மிக வலுவாகவும் இருக்கும்.
கடற்கரையில், ஆற்றங்கரையில் உள்ள மணலானது சிலிக்கான் டை ஆக்சைடு என்னும் ஒரு சீருறாத் திண்மம். கண்ணாடி என்பது நாம் அறிந்த ஒன்றானாலும், அறிவியலில், சீருறாத் திண்ம நிலையில் உள்ள ஆக்சைடுப் பொருட்களுக்குக் கண்ணாடி என்று பெயர். கண்ணாடிநிலை என்றால் சீருறாத் திண்ம நிலையில் உறைந்தநிலை என்று பொருள். கதிரவன் ஒளியினால் மின்னாற்றல் பெரும் ஒருவகை மின்கலங்கள் சீருறாத்திண்ம நிலையில் உள்ள சிலிக்கான் என்னும் தனிமத்தால் ஆனவை. படிக நிலையில் உள்ள சிலிக்கானைக் கொண்டும் இன்னும் ஆற்றல் தரவல்ல மின்கலங்கள் செய்யலாம் ஆயின் அவை விலை கூடியவை. கைக்கணி (calculator), கைக்கடிகாரம், மடிக்கணினித் திரை, மேசைக் கணினித்திரை முதலியனவும் சீருறாநிலைச் சிலிக்கான் பொருளால் ஆனவையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Thorpe., M.F.; Tichy, L. (2001). Properties and Applications of Amorphous Materials (1st ed.). Springer Dordrecht. pp. 1–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-6811-3.
- ↑ Ponçot, M.; Addiego, F.; Dahoun, A. (2013-01-01). "True intrinsic mechanical behaviour of semi-crystalline and amorphous polymers: Influences of volume deformation and cavities shape" (in en). International Journal of Plasticity 40: 126–139. doi:10.1016/j.ijplas.2012.07.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0749-6419. https://www.sciencedirect.com/science/article/pii/S0749641912001155.
- ↑ Zaccone, A. (2023). Theory of Disordered Solids. Lecture Notes in Physics. Vol. 1015 (1st ed.). Springer. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-031-24706-4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-031-24705-7. S2CID 259299183.