வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/5
மனிதக் கூர்ப்பு எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஒரு உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக ஓமோ பேரினத்தின் கூர்ப்பு வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது ஒமினிட்டுகளின் ஒரு இனமாக ஓமோ சப்பியென்சுகளின் தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதக் கூர்ப்பு குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் இயற்பிய மானிடவியல், உயர்விலங்கினவியல், தொல்லியல், மொழியியல், மரபியல் என்பன அடங்குகின்றன. உயர்விலங்கினக் கூர்ப்பு, மரபியல் ஆய்வுகளின்படி, பிந்திய கிரத்தேசியசுக் காலத்தில் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும், புதைபடிவப் பதிவுகளின்படி பலியோசீன் காலத்துக்குப் பிற்படாமல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் தொடங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். 2.3-2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில், இறுதிப் பொது மூதாதையான ஒமினினி, ஆசுத்திராலோபித்தசினெசுச் சிற்றினம் என்பவற்றிலிருந்து நவீன மனித இனம் கூர்ப்படைந்தது.