கணிதவியலாளர்

கணிதவியலாளர் (ஒலிப்பு) என்பவர் கணிதத்தில் பரந்த அறிவுடையவரும், கணிதச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அந்த அறிவைப் பயன்படுத்துபவரும் ஆவார். கணிதம் என்பது எண்கள், தரவுகள், தொகுப்புக்கள், கணியங்கள், அமைப்பு, வெளி, மாதிரிகள், மாற்றம் என்பவற்றோடு தொடர்புடையது.

தூய கணிதத்துக்குப் புறம்பான சிக்கல்களைத் தீர்க்கும் கணிதவியலாளர் பிரயோக கணிதவியலாளராவார். பிரயோக கணிதவியலாளர்கள் என்போர், தமது சிறப்பு அறிவையும், துறைசார் வழிமுறைகளையும் பயன்படுத்திப் பல்வேறு அறிவியல் துறைகளோடு தொடர்புள்ள கணிதப் பிரச்சினைகளை அணுகும் கணித அறிவியலாளர்கள் ஆவர். பல்வேறுபட்ட பிரச்சினைகளில் துறைசார் கவனத்துடனும், கோட்பாட்டு முறைகளைப் பயன்படுத்தியும், கணித மாதிரிகளை ஆய்வு செய்தல் அவற்றை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளில் பிரயோக கணிதவியலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

பிரயோக கணிதத் துறையானது அறிவியல், பொறியியல், வணிகம், தொழிற்றுறை போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுகின்ற கணித முறைகளோடு தொடர்புபட்டது. அதனால், இத்துறைசார் வல்லுனர்களான பிரயோக கணிதவியலாளர்கள், அறிவியல், பொறியியல், வணிகம் என்பவற்றை உட்படுத்திய பல்வேறு கணிதம்சார் செயற்பாடுகளைக் கொண்ட துறைகளில், தமது அறிவைப் பயன்படுத்துகின்றனர்.

கல்வி

தொகு

கணிதம் தொடர்பான கல்வி பள்ளிகளில் கீழ் வகுப்புக்களிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆனாலும், கணிதவியலாளர் ஆவதற்குத் தேவையான பல்வேறு தலைப்புக்களிலான கல்வி இளநிலைப் பட்டப் படிப்பு மட்டத்திலேயே கற்பிக்கப்படுகிறது. இக்கல்வி பொதுவாகப் பல்கலைக்கழகங்களில் மூன்றாண்டுப் பாடநெறிகளாகக் கற்பிக்கப்படுகிறது. பல பல்கலைக் கழகங்களில் வெளிவாரி மாணவர்களாகவும் பதிவு செய்துகொண்டு தேர்வு எழுதிப் பட்டம் பெற முடியும். தொடர்ந்து கணிதத்தில் தனித்துறை வல்லுனராக விரும்புவோர் முதுநிலைப் பட்டத்துக்கான இரண்டாண்டுப் பாடநெறிகளில் இதற்கான கல்வியைப் பெறுகின்றனர். உரிய தகைமை கொண்டவர்கள் ஆய்வு மாணவர்களாகப் பதிவு செய்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துக் குறிப்பிட்ட கணிதத் துறைகளில் முனைவர் பட்டத்தையும் பெறமுடியும்.

தொழில்கள்

தொகு

கணிதத் துறையில் இருக்கக்கூடிய தொழில்களிற் சில பின்வருமாறு:[1]

  • கணிதவியலாளர்
  • செயலாக்க ஆய்வுப் பகுப்பாய்வாளர்
  • கணிதப் புள்ளியியலாளர்
  • கணிதத் தொழில்நுட்பவியலாளர்
  • பிரயோகப் புள்ளியியலாளர்

குறிப்பிடத்தக்க கணிதவியலாளர்

தொகு

உலகின் குறிப்பிடத்தக்க கணிதவியலாளர்களில், யொகான் பர்னோலி, யாக்கோப் பர்னோலி, ஆரியபட்டா, பாசுக்கரா 2, நீலகண்ட சோமையா, ஆன்ட்ரே கொல்மோகோரோவ், அலெக்சான்டர் குரோதென்டீக், யோன் வொன் நியூமன், அலன் டூரிங், கர்ட் கோடெல், அகசுட்டீன் லூயிசு கோச்சி, ஜார்ச் கன்டர், வில்லியம் ரோவான் அமில்ட்டன், கார்ல் யாக்கோபி, நிக்கோலாய் லோபாசெவ்சுக்கி, யோசெப் பூரியர், பியரே சைமன் லாப்பிளாசு, அலன்சோ சர்ச், நிக்கோலாய் போகோல்யுபோவ், சீனிவாச இராமானுஜன் என்போர் அடங்குவர்.

குறிப்புகள்

தொகு
  1. "020 OCCUPATIONS IN MATHEMATICS". Dictionary Of Occupational Titles. பார்க்கப்பட்ட நாள் 2013-01-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிதவியலாளர்&oldid=3837335" இலிருந்து மீள்விக்கப்பட்டது