வலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/1
டான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர் எனப்படும் பாலசந்திர சகிங்கல் சேகர் மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வடிவத்திற்கு மாற்றியவர். 'நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை' என்று போற்றப்படுகிறவர். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்து பின்னர் அதன் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர், முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர். அதனை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர். இயற்கை ரப்பர் தொழில்துறையில் புரட்சிகளைச் செய்தவர். இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதிய தர ரப்பர் முறைமையை அமைத்துக் கொடுத்தவர். பி. சி. சேகர் 1929, நவம்பர் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார்.