வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/8
காசி (வாரணாசி) நகரின் தலைமைக் கடவுளாக அன்னபூரணி வர்ணிக்கப்படுகிறார். கா என்பது காரணத்தையும், ச என்பது அமைதியையும், இ என்பது உடலையும் குறிக்கும். எனவே இந்நகரம் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர்.
சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம், உலகம் மாயை என்றும் இம்மாயையில் உணவும் ஒரு பகுதி எனக் கூற, உணவு உட்பட அனைத்துப் பொருட்களின் கடவுளாக வணங்கப்படும் பார்வதி சீற்றமடைந்தார். இவ்வுலகம் பொருளால் ஆனது என்றும் பொருள்களுக்குள் ஆற்றல் (சக்தி) உண்டென்றும் நிரூபிக்க மறைந்தார். பார்வதியின் மறைவு உலக இயக்கத்தைப் பாதித்தது, உலகமே வெறுமையானது. எங்குமே உணவின்றி எல்லாரும் பசியால் வாடினர். மக்களின் பசியறிந்து பரிவுற்ற அன்னை பார்வதி, மீண்டும் தோன்றி காசியில் உணவுக்கூடம் அமைத்தார்.
உடனே தன் உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு பார்வதியிடம் சென்ற சிவன், “இப்போது உலகம் பொருள்களால் ஆனது என்றும் மாயையல்ல என்றும் அறிந்து கொண்டேன்” என்று கூறுகிறார். இதைக் கேட்டு மகிழ்ந்த பார்வதி, தன் கையால் உணவு வழங்கி மகிழ்ந்தார். அப்போதிலிருந்து பார்வதி, நலவாழ்வுக்கான கடவுளாக வணங்கப்படுகிறார்.