வலைவாசல்:கிறித்தவம்/அறிமுகம்
கிறித்தவம் ஓரிறைக் கொள்கையுடைய (Monotheism) சமயமாகும். தமிழில் கிறித்தவம், கிறித்துவம், கிறிஸ்தவம் என்றும் குறிப்பர். இது நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது படிப்பினைகளையும் மையப்படுத்தி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை யூதர்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா (மீட்பர்) என்றும் கிறிஸ்து (ஆசிர்வதிக்கப் பட்டவர்) எனவும் நம்புகின்றனர். 2.1 பில்லியன் விசுவாசிகளை கொண்டு உலகின் பெரிய சமயமாக இது காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்கம் மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் யூத மதத்தின் நிறைவாக தன்னை கருதுவதால் யூத மதத்தின் புனித நூலை, பழைய ஏற்பாடு என்னும் பெயரில் கிறிஸ்தவ விவிலியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது. யூதம் மற்றும் இசுலாம் சமயங்களைப் போலவே கிறிஸ்தவமும் அபிரகாமிய சமயமாகும்.