வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/5

தமிழ் விவிலியம் என்பது கிறித்துவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள திருவிவிலியத்தின் தமிழ்ப் பதிப்பு ஆகும். தமிழ்த் திருவிவிலியம் வேதம், வேத புத்தகம், மறைநூல், சத்தியவேதம், வேதாகமம், திருமறைநூல் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறது. விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் செருமானியரான பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க். பழைய ஏற்பாடு முழுமையாக முடிவடையாத பொழுதே சீகன்பால்க் இறந்துவிட்டதால் பெஞ்சமின் சூல்சு என்பவர் அப்பணியைச் செய்து முடித்தார். மேலும் இவர் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியையும் திருத்தினார். இலங்கையில் தமிழ் விவிலியப் பதிப்பு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப்பின் ஆதரவின் கீழ் வெளியானது. திருவிவிலியத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு கத்தோலிக்க கிறித்தவ சபைகள் வெளியிட்ட நூல்கள் மூலம் பிரபலமடைந்தது. அருட்திரு ஞானப்பிரகாசம் தனிப்பட்ட முறையில் முப்பது ஆண்டுகள் உழைத்து விவிலியத்தைத் தமிழில் பெயர்த்தார். அது கொல்கத்தாவில் 1932 இல் அச்சிடப்பட்டது. பழைய, புதிய ஏற்பாடுகளை இக்காலத் தமிழ் நடையில் பெயர்க்கும் பணி 1972இல் தொடங்கி 1995இல் முடிவுற்றன. இப்புதிய மொழிபெயர்ப்பு திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) என்றழைக்கப்படுகிறது.