வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/24

பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார் (பெப்ரவரி 9, 1873 - செப்டம்பர் 24, 1967) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். சென்னையில் பம்மல் விசயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 1873 மாசி முதல் நாளன்று பிறந்தார். விசயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ் புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.