வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/10
சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன் என்பதால் சங்கிலியனைப் பற்றி அவர்கள் நல்ல கருத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்ப்பதற்கு இல்லை. இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.