வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/6
ஆறுமுக நாவலர் தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.
சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.