வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/11
விராட் கோலி (Virat Kohli, ஒலிப்பு, பிறப்பு: நவம்பர் 5, 1988) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரரும் அணித்தலைவரும் ஆவார். வலது கை மட்டையாளரான இவர் உலகின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அக்டோபர் 2017 முதல் தற்போது வரை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். தற்போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளார்.
இவர் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 205 ஆட்டங்களில் 10,000 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் மிக விரைவாக ஓட்டங்கள் எடுத்த அதிவேக மட்டையாளர் என்ற உலகச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அனைத்து வித போட்டிகளிலும் அதிக நூறு அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் இலக்கை துரத்தும் ஆட்டங்களில் அதிக நூறு அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளார். 2019 உலக்கிண்ணப் போட்டியின் போது தனது 222வது ஆட்டத்தில் 11,000வது ஓட்டத்தை எடுத்ததன் மூலம் பன்னாட்டுப் போட்டிகளில் அதிவேக மட்டையாளர் என்ற தனது உலகச் சாதனையை தக்கவைத்துக் கொண்டார்.