வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/13
பேராக் என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று. இதன் வடக்கே தாய்லாந்தின் யாலா மாநிலம் உள்ளது. பேராக் மாநிலத்திற்கு வட மேற்கே பினாங்கு மாநிலம் உள்ளது. பேராக் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வடக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது. பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போ. வரலாற்றுச் சான்றுகளின் படி வெள்ளீயம் இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்டு வந்தது. பேராக் என்றால் மலாய் மொழியில் வெள்ளீயம் என்று பொருள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஈப்போ மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியாளர்கள், ஈப்போவை மலேசியாவின் இரண்டாவது தலைநகரமாகத் தரம் மேம்படுத்தி வழி நடத்தினர். வெள்ளீயத்தின் விலை உலகளாவிய அளவில் குறைந்ததன் காரணமாகப் பேராக் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்தது. அதனால் அதன் பொருளாதார வளர்ச்சியும் தேக்கம் அடைந்தது. ஈப்போவில் வரலாற்றுப் புகழ்மிக்க பல கட்டடங்கள் உள்ளன. அவற்றில் இரயில்வே நிலையம், மாநகர் மன்றம், கிந்தா இந்தியர் விளையாட்டு அரங்கம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஈப்போ நகரத்தின் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் சீனர்கள் ஆகும். 18 விழுக்காட்டினர் இந்தியர்கள்.