வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/2
குமரிக்கண்டம் என்னும் பெரும் நிலப்பகுதி இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்திலேயே தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர். ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. குமரிக்கண்டத்தின் தலைநகரான தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் எதுவும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும்.