குமரிக்கண்டம்

இந்தியப் பெருங்கடலின் அடியில் இருந்ததாகக் கருதப்படும் ஒரு கற்பனைத் துணைக்கண்டம்

குமரிக்கண்டம் (Kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகவும் பின்னா் இழந்ததாகவும் கருதப்படும் ஒரு புனைவுக் கண்டத்தைக் குறிக்கிறது.[1] இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது.

"குமரிக்கண்டம்" என்று புனையப்பட்ட நிலப்பரப்பின் தோற்றம்

19-ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம் என்று ஊகித்தனர். ஆபிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியா மற்றும் மடகாசுகர் நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது. தமிழ் மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்கள் நிலப்பகுதிகளில் உலாவிய பாண்டியர்களின் புராணக்கதைகளுடன் அவர்கள் இதை இணைத்துக் கொண்டனர்.

பண்டைய தமிழர் நாகரிகம் இலெமூரியா கண்டத்தில் இருந்தது. அக்கண்டம் ஒரு பேரழிவு நிகழ்ந்து கடலுக்குள் சென்றது என்று இந்த எழுத்தாளர்கள் கூறுகின்றனர். 20-ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்கள் இந்த மூழ்கிய இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரித்துக் கூற ’குமரிக் கண்டம்’ என்ற பெயரைப் பயன்படுத்தினர். இலெமூரியா கண்டக் கோட்பாடானது பின்னர் கண்டறியப்பட்ட புவித்தட்டுகள் சீரமைப்புக் கோட்பாட்டால் வழக்கற்றுப் போனது. இருப்பினும் இந்த கருத்தாக்கம் 20-ஆம் நூற்றாண்டின் தமிழ் மறுமலர்ச்சியாளர்களிடையே பிரபலமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வறிஞர்களின் கருத்துப்படி இலெமூரியாவில் ஆட்சிசெய்த பாண்டியர்களின் காலத்தில் தமிழ் இலக்கிய கல்வியாளர்கள் உருவாக்கிய இரண்டு சங்கங்கள் இங்கு இருந்ததாக கருதப்படுகிறது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பழங்காலத்தை நிரூபிக்க உதவும் குமரி கண்டம் தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என அவர்கள் கூறுகின்றனர்.

பெயர்களும் சொற்பிறப்பியலும்

தொகு

1890களில் லெமுரியா என்ற கருத்துரு தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகமான பிறகு அவர்கள் அக்கண்டத்தின் பெயரை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப இலெமூரியா எனத் தமிழ்ப்படுத்தினர். 1900களின் தொடக்கத்தில் அவர்கள் பண்டைய தமிழ் நாகரீகமான இலெமூரியாவின் இருப்பை ஆதரிப்பதற்காக கண்டத்தின் தமிழ் பெயர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1903-இல் பரிதிமாற்கலைஞர் தமிழ் மொழியின் வரலாறு என்ற தன்னுடைய நூலில் முதன்முதலில் குமரி நாடு என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 1930களில் இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரிப்பதற்கு குமரிக்கண்டம் என்ற சொல்லை பயன்படுத்தத் தொடங்கினார்கள் [2].

சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம்.[3] உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது பொ.ஊ.மு. 3100-இல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ளதென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும்[4]

கடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.[5] பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களைத் தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள் என இலக்கியம் கூறுகிறது.[6] மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு. பொ.ஊ. 1350–1420 காலப்பகுதியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், சிகந்த புராணம் என்ற வடமொழி காவியத்தை தமிழில் கந்த புராணம் என்ற பெயரில் எழுதினார். இக்காவியத்தில் குமரிக் கண்டம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம்.[7]

கந்த புராணத்தில் இடம்பெற்றுள்ள அண்டகோசப்படலத்தில் உலகம் என்பது பின்வரும் மாதிரியாக விவரிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகமும் பல கண்டங்களால் ஆனது ஆகும். இக்கண்டங்களில் பல பேரரசுகள் இருந்தன. இப்பேரரசுகளில் ஒன்று பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டது. அவனுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். பரதன் தன்னுடைய பேரரசுகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து நிர்வகித்தார். பரதனின் மகள் குமரியால் ஆளப்பட்ட பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக் கண்டம் பூமியில் ஒரு சிறந்த பேரரசாகக் கருதப்பட்டது. குமரிக் கண்ட கோட்பாடுதான் பிராமணிய-எதிர்ப்பும் சமஸ்கிருத எதிர்ப்பும் தமிழ் தேசியவாதிகளிடையே பிரபலமாகியிருந்தது. கந்த புராணம் உண்மையில் குமரிக் கண்டத்தை தமிழர்கள் வசிக்கும் இடமாக விவரிக்கிறது, அங்கிருந்தவர்கள் முருகனை வழிபாடு செய்ததாகவும், மீதமிருந்த பேரரசுகள் அனைத்தும் மிலேச்சர்கள் பிரதேசமாக விவரிக்கப்பட்டுள்ளது.[8][9]. மேலும் கந்தபுராணத்தின் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் 'குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் தெரிகிறது.[10] இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த, அழிந்த) அஃதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா (20 மில்லியன் ஆணடுளுக்கு முன் மூழ்கிய கண்டம்) என்பது வேறு. இலக்கிய இலெமூரியா என்பது வேறு. அல்லது 20 மில்லியன் ஆண்டுகள் முன்பிருந்து பொ.ஊ.மு. 30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம். எப்படி என்றாலும் இலெமூரியா என்ற பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று ஆகும்.[11]

குமரிக் கண்டம் அல்லது குமரி நாடு என்ற சொற்களை விளக்க 20-ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்கள் பல்வேறு கோட்பாடுகளுடன் வந்தனர். தமிழ் தாயகத்தில் பாலினச் சமநிலை கொள்கை நிலவியதை மையப்படுத்தும் தொகுப்பு கூற்றுகள் அவற்றுள் ஒரு கோட்பாடாகும். உதாரணமாக 1944-ஆம் ஆண்டில் எம். அருணாசலம் என்ற எழுத்தாளர் அந்த நிலப்பகுதி குமரிகள் எனப்படும் பெண் ஆட்சியாளர்களால் ஆட்சி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். தங்களுக்குரிய கணவரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழக்கமும், சொத்துகள் அனைத்திற்கும் அவர்களே அதிபதிகள் என்ற உரிமையும் இந்நிலப்பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு இருந்தது. எனவே தான் இப்பகுதிக்கு குமரி நாடு என்ற பெயர் வந்தது என்று டி சவரிராயன் பிள்ளை என்ற எழுத்தாளர் கூறியுள்ளார். இந்துக்களின் தெய்வமான கன்யா குமாரியை மையமாகக் கொண்டு குமரிக் கண்டத்தை விளக்கும் கோட்பாடும் அப்போது முன்னிலை பெற்றது. கந்தையா பிள்ளை என்பவர் குழந்தைகளுக்கான தன்னுடைய ஒரு புத்தகத்தில் கன்யா குமரி தேவிக்கு ஒரு புதிய வரலாற்றை உருவாக்கினார், குமரிக் கண்ட நிலப்பகுதிக்கு அத்தெய்வத்தின் பெயரே பெயராக இடப்பட்டது என்று கூறினார். குமரிக் கண்டம் வெள்ளத்தில் மூழ்கியபோது தப்பிப்பிழைத்தவர்களால் கன்னியாகுமரி கோவில் நிறுவப்பட்டது என்று அவர் கூறினார். இந்திய ஆரியர்கள் போன்ற இனக்குழுக்களின் தொடர்புக்கு முன்னர் இருந்த நாகரிகத்தினர் மற்றும் மொழியின் தூய்மையை கன்னி என்ற பொருள் கொண்ட குமரி என்ற சொல் குறிக்கிறது என கலாச்சார வரலாற்றாசிரியரான எழுத்தாளர் சுமதி ராமசாமி கூறுகிறார் [12].

தமிழ் எழுத்தாளர்கள் தொலைந்த கண்டத்தை குறிப்பிட பல பெயர்களைப் பயன்படுத்தினர். 1912-ஆம் ஆண்டில், சோமசுந்தர பாரதி முதன்முதலில் லெமூரியாவைக் கருப்பொருளாகக் கொண்ட தமிழகம் என்ற ஒரு பெயரைப் பயன்படுத்தினார். பாண்டியர்கள் தொன்மை வாய்ந்தவர்கள் என்பதால் அப்பண்டைய நாகரிகத்தைக் குறிப்பிட பாண்டிய நாடு என்ற பெயரும் பயன்படுத்தப்பட்டது. சில எழுத்தாளர்கள் சம்புத் தீவென்ற பொருள் கொண்ட நாவலந்தீவு என்ற பெயரையும் பயன்படுத்தினர்.[13]

பண்டைய இலக்கியங்கள் காட்டும் மூழ்கிய நகரங்கள்

தொகு

முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றதென பண்டைய நூற்தகவல்கள் குறிக்கின்றன. குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. இவ்விலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்கள் சிலவற்றையும் மூழ்கிய நகரங்கள் பற்றிய குறிப்பையும் கீழே காணலாம்.

தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர் [14] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின் கருத்து ஆகும்.

பண்டைய மற்றும் இடைக்கால தமிழ் மற்றும் சமசுகிருத படைப்புகள் பலவற்றில் இருந்த தென்னிந்தியாவின் நிலப்பகுதி பற்றிய புராண ஆவணங்கள் கடலில் மூழ்கி மறைந்தன. பாண்டிய பேரரசு கடல்கோளால் அழிந்தது பற்றிய விளக்கமான குறிப்புகளை சமகால இலக்கியமான இறையனார் அகப்பொருளில் காணமுடிகிறது. இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை. நக்கீரரால் கூறப்பட்டிருந்த இந்தக் கருத்து முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. ஆரம்பகால தமிழ் வம்சத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் தமிழ்ச்சங்கம் தென் மதுரையில் 4400 ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்தது என்றும் அகத்தியர் உள்ளிட்ட 549 புலவர்கள் அச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் ஆய்ந்தனர் என்றும் கடவுளர்களான சிவன், முருகன் குபேரன் ஆகியோர் தலைமையில் அச்சங்கம் செயல்பட்டது என்றும் அதில் குறிப்புகள் காணப்படுகின்றன.

அதன் பிறகு 3700 ஆண்டுகள் கால அளவில் இரண்டாம் தமிழ்சங்கம் கபாடபுரத்தில் மலர்ந்ததாகவும்அகத்தியர் உள்ளிட்ட 59 புலவர்கள் அங்கிருந்து மொழிப்பணி ஆற்றியதாகவும் இறையனார் அகப்பொருள் கூறுகிறது. இவ்விரு சங்கங்களிலும் இயற்றப்பட்ட நூல்கள் அனைத்தும் கடல் கோளால் அழிந்துபட்டன என்றும் இதன்வழி அறியலாகிறது. தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய மதுரையில் தோன்றிய மூன்றாவது சங்கமான கடைச் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது[15][16][17].

  • தென்குமரிக்கண்டத்தின் தலைநகராகத் தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் வழியாக நாமறியும் தகவல்களாகும்.
  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
  • "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.

இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் பொ.ஊ.மு. 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் பரப்பு குறித்த தகவல்கள் ஏதும் நக்கீரரின் உரையில் குறிப்பிடப்படவில்லை. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில்தான் முதன் முதலில் இக்கண்டத்தின் பரப்பளவு பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வடக்கில் பற்றுளி நதியில் இருந்து தெற்கில் குமரி ஆற்றின் கரை வரைக்கும் சுமார் 700 கவட்டம் அளவுக்கு இக்கண்ட நிலப்பகுதி இருந்ததாக அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார்.

இக்கண்டம் 49 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஏழு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டது என்றும் அறியமுடிகிறது[17]. சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது. அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22) பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [18]

குமரிக்கண்ட ஆய்வும் தற்போதைய நிலையும்

தொகு

குமரிக்கண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரிய வழக்கில் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது  [19]

மேலும் குமரிக்கண்டம் குறித்து 15 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வரும் ஒருங்கிணைத்த கடல்சார் ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு, நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்று நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதனை தொடர்ந்து இந்த வழக்கில் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு அவர்கள் நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளராக (Amicus curiae) இப்போது உள்ளார்.

இதனை தொடர்ந்து குமரிக்கண்டம் பற்றிய ஆய்வினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம், கன்னியாகுமாரி, ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் உதவியோடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.[20]

இந்தியா, மாலதீவு, மடகாஸ்கர், மொரிசியஸ், ரீயூனியன், போன்ற பல நாடுகளில் உள்ள தமிழரின் குமரிக்கண்டத்தின் தரவுகளை ஆய்வாளர் ஒரிசா பாலு தலைமையிலான குழு ஆராய்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்ப்பிக்க உள்ளனர்.

இவ்வாய்விற்கான அடிப்படை ஆய்வுகளுக்கான செலவுகளை தென்புலத்தார் குழு பொறுப்பேற்றுள்ளது.

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் பேச்சுக்கள்

தொகு

உண்மையிலேயே குமரிக்கண்டம் என்ற கண்டம் இருந்தது என்று கருதுவோர் பின்வரும் உரைகளை முன் வைக்கின்றனர்.

கடலியல் அடையாளம்

தொகு

1960-ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.[21] முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் சொந்த அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ (Chagos Archipelago) வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த (பொ.ஊ.மு. 8000) பனி யுகத்தின் போது இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.[22]

குருதி அடையாளம்

தொகு

அமேரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர் என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை மெய்ப்பிக்கச் சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மனித இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாகக் குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாகக் குறிப்பிடுகிறார்.[23] அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருக்க வேண்டும்.

அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் நூலில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது.[24]

இராமாயணத்தில் இடைச்சங்கம்

தொகு
  1. இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான அடையாளங்கள் இராமாயணத்தில் தென்படுகின்றன[25]. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், இராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது.
  2. கால ஒற்றுமை - ராமாயணத்தின் காலம் பொ.ஊ.மு. 4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் பொ.ஊ.மு. 5300-1600 என தெரிகிறது.
  3. திருவிளையாடல் புராணம்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் இராமன் இராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.[26] சின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுளதும் குறிப்பிடத்தக்கது.

நிலவியல்

தொகு

தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் பொ.ஊ.மு. 30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200 அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000 அடி வரை இருக்கிறது.[27] இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான வாய்ப்புகள் மேலும்.

சித்தரியல்

தொகு

சித்தர்கள் சில பேர் இக்குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. இங்கு வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர்கள்,

  1. காகபுசுண்டர்[28] (மேருமலையில் இவர் சிரஞ்சீவியாக இருப்பதாக கருதப்படுகிறது[29])
  2. அகத்தியர்[30]
  3. போகர்
  4. மகாவதார பாபா[31]

மயன் பற்றிய குறிப்புகள்

தொகு

குமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன்[32] பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திரம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.

ஐந்திரம் கூறும் குமரிக்கண்டம்

மயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திரம் என்னும் நூலில் குமரி மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுளது.[33]

வைசம்பாயனம் கூறும் குமரிக்கண்டம்

வைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை(பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது. [34]

நூல் பதிவுகள்

தொகு

கடல் கொண்ட தென்னாடு

தொகு
கா. அப்பாத்துரையின் வாதங்கள்

1. மெகஸ்தெனஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையை தாப்பிரபனே என்பதுடன் அஃது இந்தியாவிலிருந்தொர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதென்கிறார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநை கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்கும் என்றேபடும்.

2. மொழி அடர்த்தி
தமிழர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம். இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணர் என்றவரும் கூறியிருக்கிறார்.[35]

3. ஞாலவியல் அட்டவணை

எண் காலப்பகுதிப்பெயர் மண்தொகுதிகள் திண்மை செடிவகை உயிர்வகை மனித நாகரிக வகை
1. ஆர்க்கிலத்திக் (அ) ப்ரைமார்த்தியல் லாரண்டியன், கேம்ப்ரியன், சைலூரியன் 70,000 அடி மாலசு தலை ஓடற்றவை இல்லை
2. பழங்கற்காலம் டிவோனியன், நிலக்கரி, பெர்மியன் 42,000 அடி சூரல் காடுகள் மீன்கள் இல்லை
3. நடுகற்காலம் திரியோசிக், சுராசிக், க்ரெட்டேசியசு 15,000 அடி தேவதார காடுகள் ஊர்வன இலெமூரியா
4. கடைக்கற்காலம் இயோசீன், மியோசீன், பிளியோசீன். 5,000 அடி இலை உதிர் காடுகள் பால்குடிகள் அட்லாண்டியா
5. சிலைக்கற்காலம் டிலூவியல், ப்ளீசுடோசீன், அலூவியல் 500 அடி பயிற்றப்பட்ட காடுகள் பால்குடிகள் ஆர்யம்

அதன்படி லெமூரிய நாகரிகத்தை அகழாய்வு மூலம் நிரூபிக்க குறைந்தது 15,000 அடி அகழாய்வு செய்ய வேண்டிவரும்.

4. காலவணை(ஸ்காட் எலியட்)

எண் நாகரிகம் கால வருடங்கள்
1. இலெமூரியா பொ.ஊ.மு. 2,00,000-50,000
2. அட்லாண்டியா பொ.ஊ.மு. 50,000-40,000
3. ஆர்யம் பொ.ஊ.மு. 4,000

இந்த அட்டவணையின் படி இலெமூரியாவின் காலம் பொ.ஊ.மு. 2,00,000-50,000 வரை செல்லும்.

ஆங்கிலம்

தொகு

மூலம்: ANCIENT INDIA[36][37]

  1. “ANCIENT INDIA” நூலில் தென்னிந்தியாவும் குமரிக்கண்டமும் இணைந்த பகுதிகளின் யூக வரைபடங்கள் பொ.ஊ.மு. 30000, பொ.ஊ.மு. 8000, பொ.ஊ.மு. 4400, பொ.ஊ.மு. 3100 மற்றும் பொ.ஊ.மு. 2700 வரை கிடைக்கிறது.
  2. சங்க அடையாளங்கள் மற்ற மொழியிலுள்ள (சீன மற்றும் வடமொழி) நூல்களிலும் அதனதன் காலத்திற்கு ஒத்து வருகின்றன.
  3. கடைச்சங்கத்தில் முருகன் புலவனென இலக்கியமும், முருகனின் காலம் முந்தைய கலியுகமென கந்தபுராணமும் குறுகிறது. ISIAC வெளியிட்ட வானியல் மூலம் வரலாறு காண்போம் என்ற நூலில் யுகக்கணக்குகள் தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளன. அதன்படி யுகங்களின் காலம்
    கிருதம் - (4864) ஆண்டுகள்.
    திரேதம் - (3648) ஆண்டுகள்.
    துவம் - (2432) ஆண்டுகள்.
    கலி - (1216) ஆண்டுகள்.
    மொத்தம் (12160) ஆண்டுகள்.

அதன்படி முருகனின் கலியுகம் பொ.ஊ.மு. 16475-15259 ஆகும். ISIAC யின் “ancient India” நூலில் முருகனின் காலம் பொ.ஊ.மு. 16000-15000 என வரையறுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Theresa Bane (4 March 2014). Encyclopedia of Imaginary and Mythical Places. McFarland. pp. 91–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4766-1565-3.
  2. Ramaswamy 2004, ப. 104–108
  3. http://www.urbandictionary.com/define.php?term=Tamil&defid=1700246
  4. தமிழரின் தோற்றமும் பரவலும் பேரா. இராமச்சந்திர தீட்சிதர்
  5. .http://books.google.co.in/books?id=w4VnAAAAMAAJ&q=pon+thondi+erumbukal&dq=pon+thondi+erumbukal&hl=en&ei=WF6hTqadOInUrQest7iDAw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDUQ6AEwAA
  6. http://books.google.co.in/books?id=kfS1AAAAIAAJ&q=pon+thondi+erumbukal&dq=pon+thondi+erumbukal&hl=en&ei=WF6hTqadOInUrQest7iDAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDkQ6AEwAQ
  7. குமரிக்கண்ட இடப்பெயரும் மூவேந்தர் குடிப்பெயரும், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், தேவநேயப் பாவாணர்
  8. பற்பலவுஞ் சுருதிமுறை பயில்வு மேவி, மெய்ந்நெறி சேர்வதுகுமரி கண்டம் ஏனை - (கந்தபுராணம் - 769, அண்டகோசப் படலம்-47).
  9. C. Brito (1884). "Curiosities of Tamil Literature". Orientalist: A Journal of Oriental Literature, Arts, and Sciences Folklore. Trübner & Co. pp. 98–102.
  10. குடிலைசிவை உமை தரணிசுமனை சிங்கை குமரியெனும்
    எழுநதியுங் கொண்டு மேவும். - (கந்தபுராணம் - 778, அண்டகோசப் படலம்-56)
  11. பஃறுளி முதல் யூப்ரட்டீஸ் வரை
  12. Ramaswamy 2004, ப. 105–106
  13. Ramaswamy 2004, ப. 204–211
  14. ஞா. தேவநேயப்பாவாணர், தமிழ்வரலாறு (முதல் தொகுதி), தமிழ்மண் பதிப்பகம், 1967 (மறுபதிப்பு 2000), பக். 2-10 [1]
  15. William P. Harman (1992). The Sacred Marriage of a Hindu Goddess. Motilal Banarsidass. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0810-2.
  16. Shulman 1980, ப. 55-56.
  17. 17.0 17.1 Ramaswamy 2004, ப. 143–145
  18. ஞா. தேவநேயப்பாவாணர், தமிழ்வரலாறு (முதல் தொகுதி), தமிழ்மண் பதிப்பகம், 1967 (மறுபதிப்பு 2000), பக். 8 [2]
  19. "குமரிகண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு". Dailythanthi.com. 2020-10-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.
  20. "இந்தியாவில் மீண்டும் கடல் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.
  21. பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம், சி. ஜெயபாரதன்
  22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-14. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  23. Indians among the Earliest Navigators about 20,000 years ago
    Yuri Reshtov, Geographer and anthropologist, when working on his recently published book, 'The nature of the earth and the origin of the man, "The aborigin non-metisse Amerinds of N.A. are known to have but 2 blood groups out of 4 - A & B..... The amerind tribes of South america have an admixture of group 'O' too. This give contacts with southern Asia"- "Soviet Scientist's Theory" - essay by Gherman Dyrubin published in "The Hindu" Weekly Magazine dated 24-12-1967
  24. Sm. Ramasamy, Geomatics in Tsunami, p. 04, "Also in Ayyavazhi mythology the 'Akilathirattu Ammanai' tells about a sunken land at about 152 miles sout or south-east to kanyakumari with 16008 streets."
  25. இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18), சீதையை நோக்கி தென்திசையை தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,
    தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம் யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம்
    தமிழ் மொழிபெயர்ப்பு
    நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்
    அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள்
  26. Nelson, James Henry, The Madura country: a manual, http://books.google.co.in/books?id=-QpN1BDaS4cC&pg=RA2-PA50&dq=tenth+anantaguna+pandya+reign+rama&hl=en&sa=X&ei=dMkJT5-jEZDNrQfxhMnyDw&ved=0CD0Q6AEwAg#v=onepage&q=tenth%20anantaguna%20pandya%20reign%20rama&f=false
  27. MODERN ATLAS, world map - altitude graph
  28. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2011-12-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  29. சித்தர்கள் வாழ்க்கை, பி.என்.பரசுராமன், விகடன் பிரசுரம்.
  30. http://www.haaram.com/CompleteArticle.aspx?aid=193003&ln=
  31. Babaji and the 18 Siddha Kriya Yoga Tradition
  32. "குமரிநன் நிலத்தன்று குணமுறும் கலைகள் ஆய்ந்து
    குமரியாள் அருளினாலே கூர்மதி நனிவிலங்க
    அமர் பொருள் ஆக்கம் கண்டான் ஆற்றலும் ஆண்மை மிக்க
    அமர்நிலை வீரம் ஓங்க அருங்கலை வளர்த்தான் அன்றே"
  33. "குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்
    அமர்நிலைப் பேரியல் வெற்புறம் திறனாய்
    பல்துளி யாற்றுப் பெருமலை திறனிலைப்
    புக்குறும் நிலைத்திறன் ஏழேழ் நிலமும்
    ஏழேழ் நாடென இயம்புறும் காலை" - ஐந்திரம் – 812
  34. "பெருமலை ஒருபுறத்தே திருமலை மறுபுறத்தே
    பெருங்கடல் ஒருபுறத்தே இருங்கடல் மறுபுறத்தே
    திருவுறச் சூழ்ந்த தாலே செழுவளம் கெழுமிச்சூழ
    ஒருபெரும் கண்ணிநாடு குமரிநா டெனஉரைத்தார்"-(வை-864)
  35. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=193&pno=11#7
  36. ANCIENT INDIA , (PAGE- 27-34, 96-100 ), ISIAC (INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS)
  37. ANCIENT HISTORY OF INDIA THROUGH VEDIC ASTRONOMY , ISIAC (INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS)

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரிக்கண்டம்&oldid=3934512" இலிருந்து மீள்விக்கப்பட்டது