ஒரிசா பாலு

தமிழ் எழுத்தாளர்

ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்படும் சிவ பாலசுப்பிரமணி (7 ஏப்ரல் 1963 – 6 அக்டோபர் 2023) தமிழக ஆய்வாளர். தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வந்தவர்.[1]

ஒரிசா பாலு
ஆய்வாளர் ஒரிசா பாலு
பிறப்புசிவ பாலசுப்பிரமணி
(1963-04-07)ஏப்ரல் 7, 1963
திருச்சி ,உறையூர் , தமிழ்நாடு
இறப்புஅக்டோபர் 6, 2023(2023-10-06) (அகவை 60)
சென்னை
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியா
பணிஆய்வாளர்
அறியப்படுவதுகுமரிக்கண்டம் மற்றும் லெமூரியா கடல் ஆய்வுகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கடல் ஆமை மற்றும் குமரி கண்டம் ஆய்வு
சமயம்தமிழ் மதம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சிவ பாலசுப்பிரமணி திருச்சி உறையூரில் பிறந்தவர். பின் தமிழகத்தின் விழுப்புரம், புதுவை, நெய்வேலி, சென்னை போன்ற இடங்களில் வளர்ந்து இயற்பியலில் தேர்ச்சி பெற்றார். சுரங்கம் மற்றும் வெளிநாட்டுக் கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறையில் பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்து, இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர்.

ஆர். ஏ. ஆர். என்ற பன்னாட்டு நிறுவனத்தில் உயிரி மருந்தியல் மற்றும் மாற்று எரிபொருள் துறையில் இயக்குநராக பணிபுரிந்து வந்தார். ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை நடத்தி வந்தார். ஒரிசாவில் கனிம வளக் கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின் செய்மதிகளின் உதவியுடன் விமான மூலமான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று அந்த ஆய்வுகளைக் கள ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் குழுவில் பணி புரிந்தவர். தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வந்தார். ஒரிசா புவனேசுவர தமிழ் சங்கத்தில் துவக்க உறுப்பினராகச் சேர்ந்து, பல பொறுப்புகளில் இருந்து 2002-2003 ஆண்டுகளில் செயலர் ஆகப் பணியாற்றி, தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்தார். அவர்களை உலக ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தார். உலக தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆர்வம் காட்டி வந்தார்.

கலிங்க தமிழ் தொடர்புகள், தமிழ் - கலிங்க தென் கோசல, ஒட்டர தொடர்பான தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

அதே போல் இனப்பெருக்கத்திற்கு தமிழக, ஒரிசா கடற்கரைகளுக்கு வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகங்களாக மாற்றப்பட்டதையும், ஆமைகள் தம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்ற ஆய்வுக் கருத்தையும் முன்வைத்தார். ஆமைகள் தொடர்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்து வந்தார். அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிருபித்து வந்தார்.[2] கடலோடிகளை, மீனவர்களை பாய் மரத்தில் மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்த்தார். கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்கு பயிற்சி தந்து வந்தார்.

தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்றுச் சூழலை காக்க வேண்டி, தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தியும், முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வந்தார்.

கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராக பணிபுரிந்தார். மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். இறுதிக் காலத்தில் சென்னையில் வசித்து வந்த இவர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை துவங்கி உலக மக்களுக்கு தமிழருடைய தீபகற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயங்கி வந்தார். 500 இடங்களுக்கு மேலாக சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார்.

குமரிக்கண்டம் நோக்கிய ஆய்வு

தொகு

குமரிக்கண்டம் மற்றும் லெமூரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று செய்மதி, நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து லெமுரியா குமரிகண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்து வந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தரை பகுதியைவிட கடலில் காணப்படும் தமிழர்களின் சுவடுகளை ஆராய வேண்டும்: தமிழ்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு வலியுறுத்தல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "ஆமைகளின் வழித்தடம் கண்டு கடலோடியவன் ஆதித் தமிழன்". தினமணி. மே 02, 2013. doi:03 May 2013. http://dinamani.com/tamilnadu/2013/05/02/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%ந்E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F/article1570939.ece. பார்த்த நாள்: மே 03, 2013. 

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரிசா_பாலு&oldid=4120387" இலிருந்து மீள்விக்கப்பட்டது