வலைவாசல்:மெய்யியல்/அறிமுகம்
குறைந்தது இரு பொருள்களில் மெய்யியல் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. முறையாகப் பொருள்கொண்டால் மெய்யியல் என்பது மீவியற்பியல், ஏரணம், நன்னெறி, அறிவாய்வியல், மற்றும் அழகியல் ஆகிய துறைகளை மையப்படுத்தும் ஓர் அறிவுசார் தேடல். பரவலான இளகுவான பொருள்படி, மெய்யியல் என்பது, மனிதம்-சார் இருப்பியல் கேள்விகளைக் களைவதை மையப்படுத்தும், ஒரு வாழ்வு முறை. இக்கேள்விகளுக்கு விடைதேடும் விதத்தில் (ஆன்மிகம், தொன்மவியல் போன்ற) பிற வழிகளினின்றும் மெய்யியல் வேறுபடுவது, அதன் முறையான திறனாயும் அணுகுமுறையாலும், காரண-காரிய அடிப்படையிலான பகுத்தறிவு தர்க்கங்களைச் சார்ந்திருப்பதாலும் ஆகும்.
மெய்யியலானது இருப்பு, அறிவு, நன்னெறிகள், பகுத்தறிவு, மனம், மற்றும் மொழி ஆகியவை குறித்த பொதுவான பரந்த ஆய்வைக் குறிக்கும். மெய்யியலைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான "philosophy (ஃபிலாசஃபி)", "ஞானப் பற்று" அல்லது "அறிவு மீது பற்று" என்று பொருள் தரும் φιλοσοφία (ஃபிலோசாஃபியா) என்ற கிரேக்க சொல்லில் இருந்து பெறப்பட்டது.