வலைவாசல்:யாழ்ப்பாணம்/முகவுரை
யாழ்ப்பாணம் (Jaffna, சிங்களம்: යාපනය) என்பது இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.