வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/7

கலிலேயக் கடல்

கலிலேயக் கடல் (Sea of Galilee) என்றும் கெனசரேத்து ஏரி (Lake of Gennesaret) என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்பான பங்கு வகிக்கிறது.

கெனசரேத்து ஏரி இசுரயேல் நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் மிகப் பெரியதாகும். இதன் சுற்றளவு 53 கிலோமீட்டர் (33 மைல்); நீளம் சுமார் 21 கிமீ (13 மைல்); இதன் பரப்பளவு 166 சதுர கிமீ (64 சதுர மைல்). ஏரியின் மிக அதிக ஆழம் 43 மீ (141 அடி). கடல்மட்டத்திலிருந்து 214 மீட்டர் (702 அடி) தாழ்ந்துள்ள இந்த ஏரி உலகிலேயே நல்ல தண்ணீர் நீர்த்தேக்கங்களுள் மிகவும் தாழ்ந்த மட்டத்திலும், உப்புநீர் கொண்ட சாக்கடலுக்கு அடுத்தபடியாக உலக ஏரிகளுள் தாழ்ந்த மட்டத்திலுள்ள ஏரிகளுள் இரண்டாவதாகவும் உள்ளது. நீரடி ஊற்றுகளிலிருந்தும் யோர்தான் ஆற்றிலிருந்தும் இந்த ஏரிக்குத் தண்ணீர் கிடைக்கிறது.

புதிய ஏற்பாட்டு நூல்களில் இந்த ஏரி ”கலிலேயக் கடல்” என்றும் ”திபேரியக் கடல்” என்றும் அழைக்கப்படுகிறது (காண்க: கலிலேயக் கடல்: மத்தேயு 4:18, மாற்கு 1:16, யோவான் 6:1; திபேரியக் கடல்: யோவான் 6:1; 21:1). கெனசரேத்து ஏரி என்னும் பெயர் லூக்கா 5:1இல் வருகிறது. மேலும், பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளிலும் இப்பெயர் கினரேத்துக் கடல் (Kinnereth/Chinnereth) என்றுள்ளது (காண்க: எண்ணிக்கை 34:11, யோசுவா 13:27). கின்னர் என்னும் எபிரேயச் சொல்லுக்கு யாழ் என்று பொருள். இந்த ஏரி யாழ் வடிவில் உள்ளதால் அப்பெயர் பெற்றிருக்கலாம்.