வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/8

எருசலேம்

எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.

கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும். இந்நகரில் 801,000 மக்கள் வாழ்கின்றார்கள். இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.

எருசலேமின் நீண்டகால வரலாற்றின்போது அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது. நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது. இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.