வானப்பிரஸ்தம்

மூன்றாவது வர்ணாசிரமம்

வானப்பிரஸ்தம் என்பது வர்ணாசிரம தர்மத்தின்படி மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும். இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல். பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, துறவறத்திற்கு ஆயத்தப்படுத்துதல் ஆகும். இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்.[1]

வானப்பிரஸ்த ஆசிரமம் (காடுறை வாழ்வு)

தொகு

வானப்பிரஸ்தனின் முதன்மையான தர்மம் தவம், இறைபக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குகள் - பழங்கள் உண்டு வாழ வேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். கோடை காலத்தில் நாற்புறமும் நெருப்பு மூட்டிக் கொண்டு, கண்களால் சூரியனை நோக்கிக் கொண்டும், மழைக்காலத்தில் வெட்ட வெளியில் நின்றும், குளிர் காலத்தில் கழுத்துவரை நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். மிருகங்களை கொன்று உண்ணக் கூடாது.

காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்த காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்ய விரதம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வானப்பிரஸ்தன் மகர் லோகத்தை அடைந்து, பின்னர் இறைவனை வந்தடைவான்.

கர்மபலனில் பற்றுக் கொண்டு கர்மாக்களைச் செய்பவனுக்கு சுவர்க்கம் கிடைப்பினும் கூட அது நரகம் போல் துக்கத்தை தருவன என்ற பெரும் உண்மையை உணர்ந்து நிறைவான வைராக்கியம் அடைந்து, சந்நியாச ஆசிரமத்தை ஏற்க வேண்டும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Manusmiriti, அத்தியாயம் 6, சுலோகங்கள் 1 - 32 (பக்கம் 34 - 35)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானப்பிரஸ்தம்&oldid=3913693" இலிருந்து மீள்விக்கப்பட்டது