வானொளிப்படவியல்

வானொளிப்படவியல் (Astrophotography) என்பது, வானியல் பொருட்கள், இரவு வானின் பரந்த பரப்புக்கள் ஆகியவற்றின் படங்களைப் பதிவு செய்வதற்கான ஒரு சிறப்புவகை ஒளிப்படவியல் ஆகும். வானியல் பொருளொன்றின் (நிலவு) முதல் ஒளிப்படம் முதன் முதலாக 1840ல் எடுக்கப்பட்டது. ஆனாலும், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை விபரமான வானொளிப்படங்களை எடுப்பதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கவில்லை. நிலவு, சூரியன், கோள்கள் போன்ற வானியல் பொருட்களின் விபரங்களை ஒளிப்படங்களாகப் பதிவு செய்வதற்குப் புறம்பாக, வானொளிப்படவியல், மங்கலான விண்மீன்கள், விண்மீன் படலங்கள் (நெபுலாக்கள்), விண்மீன் கூட்டங்கள் போன்ற பொருட்களைப் படம் எடுப்பதற்கும் உதவுகின்றது. இது நீண்ட நேரத் திறந்தநிலை வசதி கொண்ட ஒளிப்படக் கருவிகள் மூலம் எடுக்கப்படுகின்றன.

எண்ணிம கறுப்பு வெள்ளை ஒளிப்படத் தகடுகளில் இருந்து, சிவப்பு, நீல நிறங்களிலான வானியல் வடிகட்டிகளூடாக பதிவு செய்யப்பட்ட ஓரியனின் பட்டியின் படம். தகடுகள் 1987க்கும் 1991க்கும் இடையில் சாமுவேல் ஆசுச்சின் தொலைநோக்கியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது.

தொழில்முறை வானியல் ஆய்வுத் துறையில் ஒளிப்படவியல் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரத் திறந்தநிலைப் பதிவுகள் மூலம், வெறும் கண்களுக்குப் புலப்படாத இலட்சக்கணக்கான புதிய விண்மீன்களையும், நெபுலாக்களையும் பதிவுசெய்ய முடிந்தது. அளவில் பெரிதாகிக் கொண்டே சென்ற சிறப்பு ஒளியியல் தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்டன. இவை ஒளிப்படத் தகடுகளில் ஒளியைப் பெற்றுப் பதிவு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பெரிய ஒளிப்படக் கருவிகள் எனலாம். தொடக்ககால வானாய்விலும், விண்மீன் வகைப்படுத்தலிலும், நேரடி வானொளிப்படவியலுக்குப் பெரும் பங்கு இருந்தது. காலப்போக்கில், இது குறிப்பிட்ட அறிவியல் ஆய்வுத் தேவைகளுக்காக, ஒளிப்படத் தகடுகள், வானியல் மி.இ.க ஒளிப்படக்கருவிகள் உள்ளிட்ட பலவகை உணரிகளுடன் வடிவமைக்கப்பட்ட சிக்கலான கருவிகளுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் இடம்விட்டு ஒதுங்கிக்கொண்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. David Malin, Dennis Di Cicco; Astrophotography பரணிடப்பட்டது 2017-05-29 at the வந்தவழி இயந்திரம் - The Amateur Connection, The Roles of Photography in Professional Astronomy, Challenges and Changes
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானொளிப்படவியல்&oldid=3352270" இலிருந்து மீள்விக்கப்பட்டது