விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு)

இணையவழியாக, முகம் பாராமல் வெவ்வேறு சூழலில் நின்று எழுதி உரையாடிச் செயல்படும்போது பலமுறை கருத்து வேறுபாடுகளும், தவறான புரிதல்களும், பிணக்குகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுத்தல் குறித்தும் விக்கி தொடர்பான மற்ற செயல்பாடுகள் குறித்தும் இரண்டு அல்லது பல பயனர்களிடையே பிணக்கு ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் முறை விக்கிப்பீடியா பிணக்குத் தீர்வுமுறை ஆகும்.

விக்கிப்பீடியா பிணக்குத் தீர்வுமுறை பின்வரும் நிலைகளில் நிகழலாம்.


முதல் நிலை - இணக்க உரையாடல் தொகு

ஒரு கட்டுரையின் உள்ளடக்கம் தொடர்பாகவோ அல்லது வேறு செயற்பாட்டிலோ வரும் கருத்து வேறுபாடு. இந்த நிலையில் இரு சாராரும் விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்களை இறுகப் பற்றி நடந்தாலே பிணக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். மிகக் குறிப்பாக நன்னயம் கருதற் கொள்கையை உள்வாங்கி நடக்க வேண்டும். இது விக்கிக்கு வெளியேயான செயற்பாட்டுக்கும் பொருந்தும். இந்நிலையில் சிக்கலின் மையமான கட்டுரை, திட்டம், கொள்கை போன்றவற்றின் பேச்சுப் பக்கத்தில் இருசாராரும் பண்புடன் உரையாடி இணக்க முடிவை எட்ட வேண்டும். உரையாடல் நிகழும்போது கட்டுரையை மாறி மாறி மாற்றக் கூடாது. விக்கியில் எந்தவொரு உள்ளடக்கமும் என்றுமே இறுதியாகி பூட்டப்படாது என்பதால் எத்தனை நாட்கள் கழிந்தாலும் சரியான நிலைக்கு மாற்றிவிட முடியும். இந்நிலையில் நிகழும் கொள்கை மீறல்களுக்கு அவ்வவ் கொள்கைகளின்படி நடவடிக்கைகளைக் கோரலாம். கொள்கைகள் பரிந்துரைக்கும் தடை, நீக்கல் போன்ற நடவடிக்கைகள் தடுப்பு நடவடிக்கைகளே தவிர தண்டனைகள் அல்ல. இந்நிலையில் மிகவும் பயன்தரும் ஒரு உத்தி ஒரு சிறு விக்கிவிடுப்பு ஒன்றை எடுப்பது. இதனால் நல்ல உறக்கம் கிடைக்கும், சிந்தனைத் தெளிவு கிடைக்கும், மன உளைச்சலும் இறுக்கமும் குறைந்திருக்கும்.

பங்கேற்பாளர்கள்: சிக்கலில் தொடர்புடையவர்கள்
களம்: பேச்சுப் பக்கங்கள்

இரண்டாம் நிலை - நடுவுநின்று அமைதி கூறல் தொகு

இரு சாராரில் ஒருவராவது உரையாட மறுக்கும் கவலைக்குறிய நிலை ஏற்பட்டால், மற்றவர்களின் கருத்துக்களை நாடலாம். நடுநிலைக் கொள்கைக்கேற்ப இரு சாராருக்கும் மற்ற பயனர்கள் அமைதி கூறலாம். இந்நிலையில் இருவருமே சிறிதளவேனும் தங்கள் இறுக்கத்தைத் தளர்த்தி கொஞ்சம் விட்டுத்தர வேண்டும் என எதிர்பார்க்கலாம். மிகப் பெரும்பாலானவற்றில் கொஞ்சம் இசைவதற்கு எப்போதுமே இடமிருக்கும். தன்னுடைய நிலைப்பாடு அப்படியே சரி என்று நம்பும் ஒருவர் கூட, இந்த நிலையில் மற்ற சாரார் ஏன் தங்கள் நிலைப்பாட்டை எடுத்திருப்பார்கள் என தான் நம்புவதைச் சொல்லுதல், மற்றவர்கள் சொன்னதில் தான் ஏற்கும் பகுதி சிறிதே எனினும் அதைக் குறிப்பிடுதல், சூடான உரையாடலின்போது தான் ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் அதைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்தல் போன்றவை இந்த நிலையில் மிகவும் பயன் தரும். ஒருவர் தனது தவறை ஒப்புக் கொள்வது மற்றவரின் மனதை இளக்குவதோடு தனக்கும் சுமையிறக்கியாகச் செயல்படுவதையும் உணரலாம். நடுநிலையில் இருப்பவர்கள் இருபுறமும் இருந்து வரும் செய்திகளில் நல்லதைக் கூட்டி மற்றதைக் குறைக்க வேண்டும். பல்வேறு கோணங்களில் எடுத்துச் சொல்ல வேண்டும். இருசாரார் கூறுவதையும் பொறுமையாகக் கேட்க வேண்டும். பல வேளைகளில் எதிராகச் செயல்படுபவர்கள் தலையைக் குறி வைத்து வருவதாகத் தவறாக எண்ணினாலும், அவர்களுக்கு வேண்டியது செவிகள்தாம் என்பதை உணர வேண்டும். நடுநிலையாளர் குழு விக்கிக்கு வெளியே உரையாட வேண்டும் என்றால் அதற்கென விக்கி மடற்குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.

பங்கேற்பாளர்கள்: சிக்கலில் தொடர்புடையவர்களும் இரு சாரார் மதிக்கும் நடுநிலையாளர்களும்
களம்: பேச்சுப் பக்கங்கள், விக்கிப்பீடியா:சமுதாய முறையீட்டுக் கூடம்

மூன்றாம் நிலை - தீர்ப்பாயம் வைத்துத் தீர்த்தல் தொகு

வெகு அரிதாக நடுநிலையாளர்கள் கூறும் அமைதியை ஏற்றுக் கொள்ளாமல் சிலர் இருக்கக் கூடும். மேலே கூறப்பட்ட இரண்டு நிலைகளையும் தாண்டிய பிறகு பிணக்குத் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுதல் வேண்டும். இந்த வசதியை வெகு அரிதாகவே பயன்படுத்த வேண்டும். பொதுவாக விக்கிச்சமூகத்தின் ஏற்பு பெற்றவர்களில் இருந்து ஒரு குழுவைத் தீர்ப்பாயத்துக்காகத் தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் இருசாரார் நிலையையும் கேட்டறிந்து ஒரு தீர்வு சொல்ல வேண்டும். இந்தத் தீர்ப்பாயத் தீர்ப்பே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

பங்கேற்பாளர்கள்: இருசாரார், தீர்ப்பாயக்குழு
களம்: விக்கிப்பீடியா:தீர்ப்பாய முறையீட்டு அலுவலகம், மடற்குழுக்கள்

பிணக்குத் தீர்வுக்குப்பின் தொகு

ஒவ்வொருமுறை பிணக்கு ஏற்பட்டுத் தீர்ந்தபின் ஏற்படக்கூடிய விளைவுகள்:

  1. உள்ளடக்கம் தொடர்பான சிக்கலுக்கான முடிவு
  2. சூடான உரையாடலுக்கு முற்றுப்புள்ளி - தொடர்புடையவர்கள் தேவையான இடங்களில் வருத்தம் தெரிவித்தும், வருங்காலத்தில் இவ்வாறு நிகழாது என உறுதியளித்தும் இருப்பார்கள்; அப்படி இல்லாத நிலையில் அவர்கள் மீது சமூகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளான கண்டிப்பு, தடைகள், சில அணுக்க நீக்கங்கள் போனவை நிகழலாம்.
  3. கொள்கைகளில் வலுவேற்றம், புதுக்கொள்கைகள் உருவாதல்

இவற்றையும் பார்க்கவும் தொகு