விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 21, 2011

டு கில் எ மாக்கிங் பேர்ட் 1960-ல் ஹார்ப்பர் லீ என்ற அமெரிக்கப் பெண் எழுதி வெளிவந்த ஒரு புனைவுப் புதினம். மிகவும் பிரபலமடைந்த இப்புதினம் புலிட்சர் பரிசு பெற்றது. இக்கதை 1962ல் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருதும் பெற்றது. புதினத்தை எழுதி முடிக்க அவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது. லீ எழுதி வெளியான புதினம் இது ஒன்று மட்டும்தான். இக்கதையின் கருத்தும் கதாபாத்திரங்களும் லீ சிறுவயதில் வாழ்ந்த ஊரில் வசித்த மனிதர்களையும் அங்கு நடந்த நிகழ்வுகளையும் களமாகக் கொண்டுள்ளது. கதை முழுவதும் 6 வயது சிறுமியான ஸ்கெளட் தனது அனுபவங்களைக் கூறுவதாக அமைந்துள்ளது. அவளது தந்தையின் அன்பும் அரவணைப்பும், அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டுக்குக் கோடை விடுமுறைக்கு வரும் நண்பனோடு விளையாடிய விளையாட்டுக்கள், பள்ளியில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள், அக்கம் பக்கத்தில் இருப்போரின் குணாதிசயங்கள் என பலவிதமான அனுபவங்களைக் கதை அழகாக விவரிக்கிறது. இக்கதையில் அக்காலத்திய இனப்பாகுபாட்டினால் நடந்த கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்டாலும் கதை சொல்லும் முறையில் நகைச்சுவை இழையோடுகிறது. மேலும்...


பால் கேரஸ் (1852-1919) ஒரு செருமானிய அமெரிக்க எழுத்தாளர், மெய்யியல் பேராசிரியர் மற்றும் உலக மதங்களின் ஒப்பீட்டியல் துறையின் மாணவர். கேரஸ் ஒரு கட்டுக்கோப்பான கிறித்தவச் சீர்திருத்தக் குடும்பத்தில் செருமனியில் பிறந்தார். பிரான்சில் முனைவர் பட்டம் பெற்றவர். பரந்த பார்வை கொண்ட இவருக்கு பிஸ்மார்க்கின் ஜெர்மனி பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி 1884-ல் அமெரிக்கா சென்றார். கேரஸ் மதநல்லிணக்க முயற்சிகளின் முன்னோடி என்று கருதலாம். அறிவியலுக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பினை அவர் ஆராய்ந்தார். கிழக்கு தேசிய மதங்களை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்திய பலரில் அவரும் முக்கியமானவர் ஆவார். குறிப்பாக பௌத்தத்தை மேற்குலகிற்கு அறிமுகம் செய்தது, டீ. டி. சுசுக்கியின் பௌத்த நூல்களின் மொழி பெயர்ப்புக்கு உதவியது என்று அவரது பங்கு பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. மதங்கள் பரிணாமம் அடையும் என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை. இறுதியில் இந்த தொன்ம மதங்களின் எச்சங்களிலிருந்து உண்மையை சாரமாக கொண்ட ஒரு இறுதியான உலக மதம் பிறக்கும் என்று அவர் ஆழ்ந்து நம்பினார். மேலும்...